திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

பிறருக்குச் சேவை செய்வதே கிறிஸ்தவ வாழ்வின் உண்மையான நிறைவு!

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1946-ஆம் ஆண்டு கர்தினால் டொமினிகோ தார்தினி அவர்களால் தொடங்கப்பட்ட வில்லா நாசரேத், இளந்தலைவர்களை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார வசதியற்ற திறமையான மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் அமைதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கூட்டு வாழ்வு மற்றும் வழிகாட்டுதல் ஆகியவற்றின் வழியாக ஆன்மீகம், அறிவு மற்றும் ஒழுக்க நெறிகளை ஒருங்கிணைத்து வழங்கும் வில்லா நாசரேத் அமைப்பின் கிறிஸ்தவக் கல்வி முறையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சுட்டிக்காட்டினார்.

மே 30, சனிக்கிழமையன்று, வில்லா நாசரேத் அமைப்பின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, நம்பிக்கை, அறிவு மற்றும் சேவை ஆகியவற்றில் இளைஞர்களைக் கல்வியூட்டி வளர்க்கும் அதன் நீண்டகாலப் பணியை வெகுவாகப் பாராட்டினார்.

கர்தினால்களான தார்தினி, அந்தோனியோ சமோரே (Antonio Samorè) மற்றும் அகிலே சில்வெஸ்திரினி (Achille Silvestrini) ஆகியோர் இந்த நிறுவனத்தின் தொலைநோக்குப் பார்வையை வடிவமைப்பதில் ஆற்றிய பங்களிப்புகளையும் திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

நற்செய்தியில் வரும் 'சீடர்களின் பாதங்களைக் கழுவுதல்' மற்றும் 'நல்ல சமாரியன்' ஆகிய உவமைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவர்கள் தங்களுக்குப் பணிவிடை செய்யப்படுவதை எதிர்பார்க்காமல், மாறாக அன்பின் உறுதியான செயல்பாடுகள் மூலம் பிறருக்குச் சேவை செய்யவே அழைக்கப்படுகிறார்கள் என்று வலியுறுத்தினார்.

மேலும், தமது அண்மைய திருத்தூது மடலான மாண்புமிகு மனித நேயம் என்பதனை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, மனித வாழ்வின் உண்மையான நிறைவு என்பது சுயசார்பில் இல்லை என்றும், மாறாக அது கடவுளோடும் பிறரோடும் நாம் கொண்டுள்ள நல்லுறவுகள் மற்றும் கூட்டுறவிலுமே அடங்கியுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

இளைஞர்கள் தங்களுடைய நம்பிக்கை, கல்வி, தொழில்முறை வாழ்க்கை மற்றும் தனிமனித வளர்ச்சி ஆகியவற்றை ஒன்றிணைத்து வாழ உதவுவதன் மூலம், வில்லா நாசரேத் அமைப்பு தொடர்ந்து கிறிஸ்தவச் சிந்தனை மற்றும் கலாச்சாரத்தின் மையமாகத் திகழ வேண்டும் என்று திருத்தந்தை வலியுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, 1946-ஆம் ஆண்டு கர்தினால் டொமினிகோ தார்தினி அவர்களால் தொடங்கப்பட்ட வில்லா நாசரேத், இளந்தலைவர்களை உருவாக்குவதன் மூலமும், பொருளாதார வசதியற்ற திறமையான மாணவர்களுக்குக் கல்வி வாய்ப்புகளை வழங்குவதன் மூலமும் அமைதியை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டது ஆகும்.

இறுதியாக, திருஅவைக்கும் சமூகத்திற்கும் இந்த அமைப்பு ஆற்றி வரும் பணிகளுக்காகத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்ட திருத்தந்தை, அவர்களை ஞானத்தின் அன்னையான அன்னை மரியாவிடம் ஒப்படைத்து, தனது திருத்தூது ஆசீரையும் வழங்கி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2026, 17:38