பிரிவுலி நிலநடுக்கத்தின் 50-ஆம் ஆண்டு நினைவு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
பிரிவுலி (Friuli) நிலநடுக்கத்தில் உயிரிழந்த அனைவரையும் தமது செபங்களில் நினைவுகூர்வதாகவும், அவர்களின் பிரிவால் வாடும் குடும்பங்களுக்குத் தனது ஆறுதல் மொழிகளையும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள பிரிவுலி நிலநடுக்கத்தின் 50-ஆம் ஆண்டு நினைவையொட்டி, அங்கிருக்கும் மக்களுக்கும், உதினே (Udine) உயர்மறைமாவட்டப் பேராயர் ரிக்கார்டோ லம்பா அவர்களுக்கும் திருத்தந்தை அவர்கள் தந்தி மூலம் அனுப்பியுள்ள செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.
அதில் உயிரிழந்தவர்களின் நினைவாக ஏற்பாடு செய்யப்பட்டு, கர்தினால் மேட்டியோ சுப்பி தலைமையில் நடைபெறும் திருப்பலியில் தாம் ஆன்மீக ரீதியாக இணைந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ள திருத்தந்தை, அந்த மண்ணின் துயரத்திலும் மீண்டெழுதலிலும் தாம் பங்கெடுப்பதாக தெரிவித்துள்ளார்.
திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின் அவர்களால் கையொப்பமிடப்பட்ட அந்தத் தந்திச் செய்தி, நிலநடுக்கப் பேரிடரின்போது உருவான மாபெரும் ஒருமைப்பாட்டு உணர்வை வெகுவாகப் போற்றியுள்ளது.
பல்வேறு நாடுகளின் உதவிக்கும் உள்ளூர் மக்களின் அயராத உழைப்பிற்கும் நன்றி தெரிவித்த திருத்தந்தை, இந்த ஒருமைப்பாடே அந்த நிலப்பகுதி விரைவாக மீண்டெழவும், ஒரு 'முன்மாதிரியான சமூக மறுமலர்ச்சியை' உருவாக்கவும் காரணமாக அமைந்தது என்று தெரிவித்தார்.
அந்தப் பேரிடர் காலத்தில் இத்தாலிய மற்றும் அனைத்துலகச் சமூகங்கள் காட்டிய மனிதாபிமான மற்றும் கிறிஸ்தவ ஒருமைப்பாட்டை வலியுறுத்திய திருத்தந்தை, மேலும், அந்தத் துயர நிகழ்வின் நினைவானது, மக்களிடையே சகோதரத்துவம் மற்றும் பிறரன்புப் பணி ஆகிய விழுமியங்களை மீண்டும் உறுதிப்படுத்தும் ஒரு உந்துதலாக அமைய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பிரிவுலி (Friuli) பகுதி மக்கள் அனைவரையும் அன்னை மரியாவின் தாய்மைப் பராமரிப்பிலும், அப்பகுதியின் பாதுகாவல் புனிதர்களான எர்மகோரஸ் மற்றும் போர்டுனாடஸ் ஆகியோரின் பரிந்துரையிலும் திருத்தந்தை அர்ப்பணிக்கிறார். இறைவனின் அருள் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்பதன் அடையாளமாக, அவர் தனது திருத்தூது ஆசீரை உளம் மகிழ்ந்து வழங்குகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
