கிறிஸ்துவின் நிபந்தனையற்ற அன்பும் தூய ஆவியாரின் துணையும்!

இயேசுவின் அன்பு தூய்மையானது, நிபந்தனையற்றது மற்றும் தன்னைத்தானே கையளிப்பது. "நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் அன்பு செலுத்துங்கள்" என்ற கட்டளையே உண்மையான அன்பிற்கு அடிப்படை.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

“நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” (யோவான் 13:34) என்ற இயேசுவின் அன்புதான் உண்மையான அன்பிற்கு ஒரு முன்மாதிரியாகத் திகழ்கிறது என்றும், அது உண்மையானது, தூய்மையானது, நிபந்தனையற்றது மற்றும் தன்னைத்தானே கையளிப்பது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 10, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

இன்றைய நற்செய்தியில், இயேசு தனது சீடர்களிடம் இறுதி இரவு உணவின் போது கூறிய நீங்கள் என்மீது அன்பு கொண்டிருந்தால் என் கட்டளைகளைக் கடைப்பிடிப்பீர்கள்” (யோவான் 14:15) என்ற வார்த்தைகள், நாம் கடவுளின் கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதால் அவர் நம்மை நேசிப்பதில்லை. மாறாக, கடவுள் நம்மை முதலில் நேசிப்பதால்தான் நம்மால் அவருக்குக் கீழ்ப்படிய முடிகிறது என்ற புரிதலை நமக்குத் தெளிவுபடுத்துகின்றன என்று திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.

இயேசுவின் அன்பு எதையும் கைம்மாறாக எதிர்பார்ப்பதில்லை, மாறாக வாழ்வை தாராளமாக வழங்குகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை அன்பை அனுபவித்தவர்களால் மட்டுமே மற்றவர்களிடம் உண்மையாக அன்பு செலுத்த முடியும் என்றும், கடவுளின் கட்டளைகள் சுமைகள் அல்ல; அவை நம்மைப் போலி அன்பிலிருந்து குணப்படுத்தி, மீட்பை நோக்கி அழைத்துச் செல்லும் ஒரு பாதையாக அமைகிறது என்றும் எடுத்துக்காட்டினார்.

இயேசு நம்மை நேசிப்பதினால், வாழ்வின் போராட்டங்களில் அவர் நம்மைத் தனியாக விட்டுவிடுவதில்லை என்று கூறிய திருத்தந்தை, அவர் நமக்கு ஒரு வாக்குறுதியை அளிக்கிறார் என்றும் அதுதான் தூய ஆவியார் என்றும் எடுத்துரைத்தார்.

மேலும் அந்த தூய ஆவியார் நம்மைத் தேற்றுபவர் அல்லது பரிந்து பேசுபவர் என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உண்மையை வெளிப்படுத்தும் அந்த ஆவியார் நம்பிக்கையாளர்களுடன் என்றென்றும் நிலைத்திருப்பார் என்றும் குறிப்பிட்டார்.

இந்த உலகம் தீமை, அநீதி மற்றும் வெறுப்பைப் பற்றிக்கொண்டிருக்கும் வரை இந்த ஆவியாரைப் பெற்றுக்கொள்ள முடியாது என்று மொழிந்த திருத்தந்தை ஆனால், கிறிஸ்துவின் அன்பிற்குப் பதிலளிப்பவர்கள், தூய ஆவியாரைத் தங்களின் நிலையான வழிகாட்டியாகவும் ஆற்றலாகவும் கண்டுகொள்கிறார்கள் என்றும் எடுத்துக்காட்டி தனது அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியை திருத்தந்தை  நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 09:48