தேடுதல்

வத்திக்கான் பதிப்பகத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை வத்திக்கான் பதிப்பகத்தின் உறுப்பினர்களுடன் திருத்தந்தை   (©Vatican Publishing House)

புத்தகங்கள் கிறிஸ்துவைப் பறைசாற்றும் உன்னதக் கருவிகள்!

வத்திக்கான் பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவையொட்டி, அதன் உறுப்பினர்களைச் சந்தித்த திருத்தந்தை 14-ஆம் லியோ, கடந்த நூறு ஆண்டுகளில் ஒன்பது திருத்தந்தையர்களின் போதனைகளையும் நற்செய்தியையும் உலகம் முழுவதும் கொண்டு சேர்த்த அவர்களின் சேவையைப் பாராட்டினார். புத்தகங்கள் மற்றும் வாசிப்பின் அவசியம் குறித்து அவர் மூன்று முக்கியக் கருத்துகளை முன்வைத்தார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான் 

ஒன்பது திருத்தந்தையர்களின் போதனைகளையும் நற்செய்தியையும் உலகம் முழுவதும் பரப்பி சேவை செய்ததற்காக வத்திக்கான் பதிப்பகத்திற்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது நன்றியைத் தெரிவித்தார்.

மே 07, வியாழனன்று, வத்திக்கான் பதிப்பகத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அதன் உறுப்பினர்களை திருப்பீடத்தில்  சந்தித்த போது, இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

இந்த நூற்றாண்டு விழாவை ஒரு "குடும்பக் கொண்டாட்டம்" என்று வர்ணித்த திருத்தந்தை,  மேலும் 1926-ஆம் ஆண்டில் வத்திக்கான் அச்சகத்திலிருந்து (Vatican Printing Press) இந்தப் பதிப்பகம் ஒரு தனிச்சிறப்புமிக்க சுதந்திரமான அமைப்பாக மாறியதை எடுத்துக்காட்டினார்.

நூல்கள் மற்றும் வாசிப்பின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை மூன்று கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். முதலாவதாக, புத்தகங்கள் சிந்திப்பதற்கான வாய்ப்பை வழங்குகின்றன என்று கூறிய திருத்தந்தை, இன்றைய டிஜிட்டல் யுகத்தில், புத்தகங்களின் இருப்பு ஆழ்ந்த சிந்தனை, ஆய்வு மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையை ஊக்குவிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.

மேலும் வாசிப்பு நம் அறிவை வளர்ப்பதோடு மட்டுமல்லாமல், ஒருதலைப்பட்சமான கருத்துக்கள் மற்றும் தீவிரவாத எண்ணங்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது என்றும், உண்மையை மேலோட்டமாகப் பார்க்காமல் ஆழமாகப் புரிந்துகொள்ள அது உதவுகிறது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை, வாசிப்பை "குறுகிய மனப்பான்மைக்கு ஒரு மாமருந்து" என்றும் தெரிவித்தார்.

இரண்டாவதாக, புத்தகங்கள் மற்றவர்களைச் சந்திப்பதற்கான ஒரு களமாக அமைகின்றன என்று விவரித்த திருத்தந்தை, எண்ணங்களும் அனுபவங்களும் பகிரப்படுவதன் மூலம், வாசகர்கள் நூலாசிரியர்களுடனும், அந்த நூலை வாசித்த கடந்த கால மற்றும் எதிர்கால வாசகர்களுடனும் ஒரு கருத்துப் பரிமாற்றத்தைச் செய்கிறார்கள் என்றும் தெளிவுபடுத்தினார்.

"சந்திப்பின் கலாச்சாரம்" (culture of encounter) குறித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் கூற்றை மேற்கோள் காட்டிய திருத்தந்தை, புத்தகங்கள் மக்களிடையே பாலங்களை உருவாக்கவும், உரையாடல்களை ஊக்குவிக்கவும், புரிந்துணர்வை விரிவுபடுத்தவும் உதவும் என்று கூறினார்.

மூன்றாவதாக, புத்தகங்கள் கிறிஸ்துவைப் பற்றி அறிவிப்பதற்கான ஒரு வழியாகவும் இருக்கின்றன என்பதை வலியுறுத்திய திருத்தந்தை, ஆன்மீக எழுத்துக்கள், புனிதர்களின் வாழ்க்கை வரலாறுகள் மற்றும் நம்பிக்கை குறித்த சிந்தனைகள் ஆகியவை மனித இதயத்தை ஆழமாகத் தொடக்கூடியவை என்றும் குறிப்பிட்டார்.

மேலும் மரியா திருநூலை வாசிப்பது போன்ற கலைச் சித்தரிப்புகள், புனித அந்தோணியார் நற்செய்தி நூலை ஏந்தியிருப்பது மற்றும் புனித அகுஸ்தினார் தனது இதயத்திலும் புத்தகங்களிலும் உண்மை மற்றும் தொண்டு (charity) ஆகியவற்றை அடையாளப்படுத்தி எழுதுவது போன்ற உதாரணங்களை திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.

இறுதியாக, கிறிஸ்தவ மக்கள் இறைவார்த்தையைத் தங்கள் வாழ்வின் ஆதாரமாகக் கொண்டு, அதன் வழியில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்ட திருத்தந்தை, வத்திக்கான் பதிப்பகம் தனது எதிர்காலப் பணிகளை மிகுந்த அர்ப்பணிப்போடும், ஆர்வத்தோடும், புதிய படைப்பாற்றலோடும் தொடர வேண்டும் என்று வாழ்த்தி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2026, 13:15