ஹேபர்லேண்ட்-வாக்னர் அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை ஹேபர்லேண்ட்-வாக்னர் அறக்கட்டளை உறுப்பினர்களை சந்தித்த திருத்தந்தை  (ANSA)

நீதியும் படைப்பின் பாதுகாப்பும் வாழ்வின் அடிப்படை!

மே 09, சனிக்கிழமையன்று, ஈடித் ஹேபர்லேண்ட்-வாக்னர் அறக்கட்டளை மற்றும் அகுஸ்தினியர்-பிராவ் நிறுவனத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் திருத்தந்தை சந்தித்தார்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

அமைதியை நிலைநாட்ட நீதி அவசியம் என்றும், வேலை மற்றும் அன்றாட வாழ்க்கை ஆகிய இரண்டிலும் சுற்றுச்சூழலுக்கான நிலையான மற்றும் நியாயமான பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்றும் திருப்பயணிகளை திருத்தந்தை ஊக்குவித்துள்ளார்‌.

மே 09, சனிக்கிழமையன்று, ஈடித் ஹேபர்லேண்ட்-வாக்னர் அறக்கட்டளை மற்றும் அகுஸ்தினியர்-பிராவ் நிறுவனத்தின் உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது  இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

அகுஸ்தினிய சபையின் ஆன்மீகப் பாரம்பரியம் மற்றும் இறைவனின் படைப்புகளைப் பாதுகாப்பதில் திருஅவைக்கு இருக்கும் கடமைப்பாட்டைத் வலியுறுத்திய திருத்தந்தை, தனது பதவிக்காலத்தின் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி வாழ்த்தியதற்கும், அவர்களது இறைவேண்டல்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார்.

அகுஸ்தினிய மதுபான ஆலைக்கும் அகுஸ்தினிய சபையினருக்கும் இடையே வரலாற்று ரீதியாக நிலவி வரும் ஆழமான பிணைப்பு குறித்தும் திருத்தந்தை விரிவாக விளக்கமளித்தார்.

மேலும் தனது சொந்த ஆன்மீக வாழ்க்கையில் புனித அகுஸ்தினாரின்  முக்கியத்துவத்தை குறிப்பிட்ட திருத்தந்தை, "இறைவன் அருளிய திறமைகளை இறைவனுக்கும் பிறருக்கும் சேவை செய்ய பயன்படுத்துவதன் மூலமே நாம் மனநிறைவைக் காண்கிறோம் என்ற புனித அகுஸ்தினாரின் போதனையை எடுத்துக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின்  'இறைவா உமக்கே புகழ்' (Laudato si') என்ற திருத்தூது மடலை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, "படைப்பு என்பது கடவுளின் அன்பைப் பிரதிபலிக்கிறது" என்றும் "அது பொறுப்புடன் பாதுகாக்கப்பட வேண்டும்"  என்றும் வலியுறுத்தினார்.

அகுஸ்தினிய மதுபான ஆலை 1328 ஆம் ஆண்டில் மியூனிக் நகரில் அகஸ்தினிய துறவிகளால் தொடங்கப்பட்டு, பின்னர் தனியார் வசம் வந்தது. தற்போது ஈடித் ஹேபர்லேண்ட்-வாக்னர் அறக்கட்டளை தொண்டு, கலாச்சாரம், கல்வி, சுற்றுச்சூழல் மற்றும் சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கு ஆதரவளித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 11:56