பசியற்ற உலகை உருவாக்குவோம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உலகில் நிலவும் பசி மற்றும் பட்டினி கொடுமைக்கு எதிராகப் போரிடவும், உணவை வீணாக்காத ஒரு பண்பாட்டை உருவாக்கவும் இறைவேண்டல் செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அழைப்பு விடுத்துளளார்.
ஏப்ரல் 30, வியாழனன்று, வெளியிட்டுள்ள மே மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, பசியால் வாடும் ஏழை மக்களுக்கு ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு மற்றும் அதன் “திருத்தந்தையுடன் இறைவேண்டல் செய்யுங்கள்” இயக்கத்தின் மூலம், இவ்வாறு கேட்டுக் கொண்டுள்ள திருத்தந்தை, எந்த ஒரு மனிதரும் பொதுவான உணவுப் பந்தியிலிருந்து ஒதுக்கப்படக்கூடாது என்று தெரிவித்துள்ளார்.
உணவு என்பது ஒரு நுகர்வுப் பொருள் மட்டுமல்ல, அது இறைவனின் பராமரிப்பின் அடையாளம் என்பதை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, உணவை வீணாக்குவதைத் தவிர்க்கவும், எளிமையான வாழ்க்கை முறையை மேற்கொள்ளவும் அழைப்பு விடுத்துள்ளார்.
உலகின் வாழ்விற்காகப் பிட்கப்பட்ட அப்பமான இயேசுவைப் போல, நீதிக்காகப் பசியும், சகோதரத்துவத்திற்காகத் தாகமும் கொண்ட இதயத்தைப் பெற வேண்டும் என்று இறைவேண்டல் செய்யுமாறு அனைத்து விசுவாசிகளையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டுள்ளார்.
இறுதியாக, நுகர்வுப் போக்கைக் கைவிட்டு, ஒருமைப்பாட்டின் கலாச்சாரத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, திருஅவையும் சமூக அமைப்புகளும் உணவு வங்கிகள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சாரங்களை முன்னெடுக்க வேண்டும் என்றும், பொறுப்பான வாழ்க்கை முறையைக் கடைப்பிடிக்க வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
