தேடுதல்

திருத்தந்தையின் பொம்பெயி நகருக்கான மேய்ப்புப்பணி பயணத்தின் நிகழ்வுகள் !

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பொம்பெயி திருத்தலத்தின் பிறரன்பு ப்பணிகளில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்கள், ஆசிரியர்கள் மற்றும் அங்குள்ள மக்களைச் சந்தித்து தனது மட்டற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

மே 08, வெள்ளியன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் பொம்பெயி நகருக்கு மேற்கொண்ட மேய்ப்புப்பணி பயணத்தின் ஒரு நிகழ்வாக  பொம்பெயி திருத்தலத்தின்  (Sanctuary of Pompei) Temple of charity என்று அறியப்படும் பிறரன்பின் ஆலயத்தோடு தொடர்புடைய உறுப்பினர்களைச் சந்தித்து உரையாடினார். அச் சந்திப்பின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை.

அன்புள்ள சகோதர, சகோதரிகளே

பொம்பெயி திருத்தலத்தின் பிறரன்புப்பணிகளோடு பல்வேறு வழிகளில் தொடர்புள்ள உங்கள் அனைவரையும் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். குறிப்பாக, ஆயரின் கனிவான வார்த்தைகளுக்கும், தங்கள் வாழ்வின் சான்றுகளைப் பகிர்ந்து கொண்ட உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடந்த அக்டோபர் மாதம் நான் புனிதராகப் பட்டம் அளித்த புனித பார்டோலோ லோங்கோவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றி, இந்த மேய்ப்புப்பணிப் பயணத்தைத் தொடங்குவது எனக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது. அவர் பொம்பெயி திருத்தலத்தை, 'இதயத்தை இதமாக்கும் அன்பின் தளம்' என்றும், நம்பிக்கை மற்றும் அறச்செயல்களின் வெற்றி' என்றும் அழைத்தார். இன்றும் கூட, இந்தத் திருத்தலத்தின் இரக்கப் பணிகளிலும் சேவைகளிலும் அந்த ஆன்மீக உணர்வு உயிர்ப்புடன் நிலைத்திருக்கிறது.

“இங்கே, ‘அன்பின் ஆலயம்’ மற்றும் ‘நம்பிக்கையின் ஆலயம்’ ஆகிய இரண்டும் ஒன்றையொன்று தாங்கி நிற்கின்றன. செபமானது, கல்வி மையங்கள், இல்லங்கள் மற்றும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட சமூக உணவகம் ஆகியவற்றில் தாராள மனப்பான்மை, வரவேற்பு மற்றும் அன்பான சேவைக்கான தூண்டுதலை அளிக்கிறது. இத்தகைய அன்புச் செயல்களின் வழியாக, கிறிஸ்து தொடர்ந்து இதயங்களைப் புதுப்பித்து, துன்பப்படுபவர்களுக்கு நம்பிக்கையைத் தருகிறார்.

புனித பார்டோலோ, ஒவ்வொருவரிடமும் - குறிப்பாக அனாதைகள் மற்றும் கைதிகளின் குழந்தைகளிடம் கிறிஸ்துவின் முகத்தைக் கண்டார். அன்பும் அறச்செயலும் மிகவும் கடினமான வாழ்க்கையையும் மாற்றியமைக்கும் என்று அவர் நம்பினார். நம்பிக்கை மற்றும் அர்ப்பணிப்பின் மூலம், பொம்பெயி நகரை உலகெங்கிலும் அறியப்பட்ட ஒரு கிறிஸ்தவ வாழ்வின் மையமாகவும், அன்னை மரியாவின் மீதான பக்தித் தலமாகவும் அவர் மாற்றினார்.

எல்லாவற்றிற்கும் மேலாக மையமாக இருப்பது செபம், குறிப்பாகப் புனித செபமாலை. அன்னை மரியாவின் வழியாக, இயேசுவின் வாழ்வு நம் இதயங்களைத் தொடர்ந்து மாற்றியமைக்கும் வகையில், இந்த அழகான பக்தி முயற்சியை நீங்கள் அனைவரும் உயிர்ப்புடன் வைத்திருக்குமாறு நான் உங்களை ஊக்குவிக்கிறேன்.

அருள்பணியாளர்கள், துறவியர், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் மற்றும் இளைஞர்களாகிய உங்களுக்கு நான் கூறுவது இதுவே: உண்மை, நம்பிக்கை மற்றும் அன்பின் சாட்சிகளாகத் திகழுங்கள். நம்மை ஒருபோதும் கைவிடாத இயேசு கிறிஸ்துவின் மீது நம்பிக்கை வையுங்கள். அன்னை மரியாவும் புனித பார்டோலோவும் உங்களை எப்போதும் வழிநடத்திப் பாதுகாப்பார்களாக. நன்றி, இறைவன் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பாராக.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2026, 13:29