திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

உண்மையான புதுப்பித்தல் பிறரன்புச் செயல்களுக்கு வழிநடத்த வேண்டும்!

மே 30, சனிக்கிழமையன்று, கத்தோலிக்க அருங்கொடைசார் புதுப்பித்தல் இயக்கத்தின் (Catholic Charismatic Renewal) உறுப்பினர்களைத் திருப்பீடத்தில் சந்தித்த திருத்தந்தை பதினான்காம் லியோ, இவ்வியக்கத்தைத் தூய ஆவியாரால் ஈர்க்கப்பட்ட ஒரு "பெரும் கொடை" என்று பாராட்டி, திருஅவைக்கு அவர்கள் ஆற்றும் பங்களிப்பிற்கு நன்றி தெரிவித்தார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உண்மையான புதுப்பித்தல் என்பது பிறரன்புச் செயல்களுக்கு, குறிப்பாக ஏழைகள் மற்றும் துன்புறுவோரை அரவணைத்துப் பராமரிப்பதற்கே வழிநடத்த வேண்டும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 30, சனிக்கிழமையன்று, கத்தோலிக்க அருங்கொடைசார் புதுப்பித்தல் இயக்கத்தின் உறுப்பினர்களை திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, திருஅவைக்கு அவர்கள் ஆற்றிவரும் பங்களிப்பிற்குத் தனது நன்றியைத் தெரிவித்ததுடன், இவ்வியக்கத்தைத் தூய ஆவியாரால் ஈர்க்கப்பட்ட ஒரு "பெரும் கொடை" என்றும் எடுத்துரைத்தார்.

திருத்தந்தையர்களான ஆறாம் பவுல், இரண்டாம் ஜான் பால், பதினாறாம் பெனடிக்ட் மற்றும் பிரான்சிஸ் ஆகியோரின் போதனைகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நற்செய்தி அறிவிப்பு, ஆன்மீக வளர்ச்சி, ஒற்றுமை மற்றும் ஏழைகளுக்கான சேவை ஆகியவற்றில் இந்த  இயக்கம் காட்டி வரும் அர்ப்பணிப்பைப் பாராட்டினார்.

கத்தோலிக்க அருங்கொடைசார் புதுப்பித்தல் இயக்க அனுபவத்தின் ஐந்து முக்கிய கூறுகளான தூய ஆவியில் திருமுழுக்கு, புகழ்ச்சி ஜெபம், இறைவார்த்தை, உடன்பிறந்த உறவு, மற்றும் பிறரன்பு ஆகியவற்றை சுட்டிக்காட்டிய திருத்தந்தை, கிறிஸ்தவ ஜெப வாழ்வில் இறைவனைப் புகழ்ந்து பாடி ஆராதிப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.

தூய ஆவியாரின் இந்த அனுபவம், நம்பிக்கையாளர்கள் கடவுளைத் தனிப்பட்ட முறையில் கண்டடைய உதவுகிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, மேலும் இது அவர்களின் நம்பிக்கையை  ஆழப்படுத்துகிறது என்றும், கிறிஸ்துவின் அன்பிற்குச் சாட்சிகளாக வாழ அவர்களுக்கு ஊக்கமளிக்கிறது என்றும் எடுத்துரைத்தார்.

மேலும், திருவிவிலியத்தோடு ஒரு துடிப்பான, வாழும் உறவைக் கொண்டிருக்குமாறு இவ்வியக்கத்தின் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்த திருத்தந்தை, திருஅவைக்குள்ளும் கிறிஸ்தவர்களிடையேயும் நிலவும் ஒற்றுமையின் ஊற்றாகத் தூய ஆவியாரே விளங்குகிறார் என்றும் குறிப்பிட்டார்.

அருங்கொடைசார் இயக்க உறுப்பினர்கள் தங்களது மறைமாவட்டங்களிலும், பங்குகளில் உள்ளூர் திருஅவைத் தலைவர்களோடு இணைந்து, நம்பிக்கையுடன் பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்திய  திருத்தந்தை, சுய விளம்பரங்களைத் தவிர்த்து, தங்களுக்குள் இணக்கமான சூழலை வளர்த்துக் கொள்ளுமாறும், பல்வேறு சமூகங்களுக்கிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துமாறும் அவர்களைக்  கேட்டுக்கொண்டார்.

இறுதியாக, தூய ஆவியாரின் வழிநடத்துதலையும், அன்னை கன்னி மரியாவின் பாதுகாவலையும் வேண்டி அவ்வியக்க உறுப்பினர்களுக்கு திருத்தூது ஆசீரை வழங்கி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 மே 2026, 17:17