தெரங்கா": உலக அமைதிக்கான செனகலின் ஆன்மீகப் புதையல்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
செனகல் நாட்டை விருந்தோம்பல் எனும் பொருள்தரும் "தெரங்கா" (teranga) பூமி என்றும், இது கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் பிற மத நம்பிக்கைகளைக் கொண்ட மக்களிடையே நிலவும் விருந்தோம்பல், ஒற்றுமை மற்றும் அமைதியான சகவாழ்வின் உணர்வைக் குறிக்கிறது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 09, சனிக்கிழமையன்று, செனகல் நாட்டைச் சேர்ந்த இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் கத்தோலிக்கத் தலைவர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது திருத்தந்தை இவ்வாறு கூறினார்.
இந்தச் சந்திப்பை நட்பு, அமைதி, சகோதரத்துவம் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்கான ஒரு பகிரப்பட்ட அர்ப்பணிப்பின் வலுவான அடையாளமாக திருத்தந்தை சுட்டிக்காட்டினார்.
மேலும் இந்தச் சகோதரத்துவக் கலாச்சாரம் செனகல் நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த உலகிற்குமே கிடைத்த ஒரு விலைமதிப்பற்ற புதையல் என்றும் அவர் கூறினார்.
ஆப்பிரிக்கா தொடர்ந்து ஆயுத மோதல்கள், மனிதாபிமான நெருக்கடிகள், சமத்துவமின்மை, வன்முறை தீவிரவாதம், புலம்பெயர்வு சவால்கள், வெறுப்புப் பேச்சு மற்றும் குறிப்பாக இளைஞர்களிடையே குடும்ப மற்றும் ஆன்மீக விழுமியங்கள் பலவீனமடைதல் போன்ற பிரச்சனைகளை எதிர்கொண்டு வருவதாகவும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
இத்தகைய கடினமான சூழலில், மதங்களுக்கு இடையேயான உரையாடலும் "தெரங்கா" விழுமியங்களும் பதற்றங்களைக் குறைக்கவும், நீடித்த அமைதியை உருவாக்கவும் உதவும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
அண்மையில் கேமரூனில் ஆற்றிய உரைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, தீவிரமயமாக்கலைத் தடுக்கவும், ஒருவருக்கொருவர் மரியாதையை மேம்படுத்தவும் அரசியலும் வெளியுறவுக் கொள்கைகளும் மதத் தலைவர்களின் தார்மீக வலிமையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஒவ்வொரு மனிதனும் கடவுளால் படைக்கப்பட்டவன் என்றும், எந்த ஒரு சக்தியாலும் பறிக்க முடியாத மற்றும் மீறமுடியாத மாண்பை அவர்கள் கொண்டுள்ளனர் என்றும் மொழிந்த திருத்தந்தை, கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் பொதுவான நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் என்றும் உறுதிப்படுத்தினார்.
பாகுபாடு, துன்புறுத்தல் மற்றும் அரசியல், பொருளாதார அல்லது வன்முறை நோக்கங்களுக்காக கடவுளின் பெயரைத் தவறாகப் பயன்படுத்துவதை அனைவரும் கைவிட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, துன்பப்படும் சிறுபான்மையினரைப் பாதுகாக்கவும், நீதி மற்றும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படவும் மத சமூகங்களை வலியுறுத்தியுள்ளார்.
இறுதியாக, மக்களிடையே ஆழமான புரிதல், உரையாடல், ஒருவருக்கொருவர் காட்டும் மரியாதை மற்றும் சகோதரத்துவ உணர்வு ஆகியவற்றை இறைவன் மேன்மேலும் வலுப்படுத்த வேண்டும் என்று தனது இறைவேண்டலில் உறுதிப்படுத்திய திருத்தந்தை, இதன் மூலம் அனைத்து மக்களும் மோதல்களுக்கு அமைதி மற்றும் ஒற்றுமையுடன் பதிலளித்து, மனிதகுலத்தின் நலனுக்காகச் செயல்பட முடியும் என்று தெரிவித்து தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
