திருஅவையின் சமூகக் கோட்பாடு: சிதறுண்ட உலகிற்குத் திருத்தந்தை காட்டும் வழி!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
உண்மையான சுதந்திரம் என்பது ஒருவர் தனக்குத் தோன்றியதைச் செய்வது மட்டுமல்ல, மாறாக, அந்தச் சுதந்திரத்தைத் தன்னைத்தானே பிறருக்குக் கையளிக்கும் ஒரு கொடையாகவும், மற்றவர்களை அரவணைக்கும் திறந்த மனப்பான்மையாகவும் பயன்படுத்துவதே ஆகும் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
மே 30, சனிக்கிழமையன்று, திருத்தந்தைக்கான நூறாவது ஆண்டு அமைப்பின் (Centesimus Annus Pro Pontifice) உறுப்பினர்களை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, இன்றைய சவால்களுக்குப் பதிலளிப்பதில் திருஅவையின் சமூகக் கோட்பாட்டின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
மாண்புமிகு மனித நேயம் என்னும் தமது அண்மைய திருத்தூது மடலைக் குறிப்பிட்ட திருத்தந்தை, "ஆன்மீகத்தைத் தேடும் சிதறுண்ட உலகம்: திருஅவையின் சமூகக் கோட்பாட்டிற்குள் சுதந்திரம் மற்றும் பன்முகத்தன்மை" என்ற இந்த மாநாட்டின் கருப்பொருள் குறித்து ஆழமாகச் சிந்திக்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
மேலும் மனிதகுலம் தற்போது போர்கள், துருவமயமாதல் (Polarization) மற்றும் சமூகப் பிரிவினைகளால் குறிக்கப்பட்ட ஒரு காலகட்டத்தைக் கடந்து கொண்டிருக்கிறது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, இருப்பினும், இத்தகைய இன்னல்களுக்கு மத்தியிலும், மனித நேயத்தில் நாம் கொண்டுள்ள பொதுவான பிணைப்பே நமக்கான நம்பிக்கையின் ஊற்றாகத் திகழ்கிறது என்றும், அது மக்களை உண்மை, வாழ்வின் அர்த்தம் மற்றும் கடவுளை நோக்கித் தேடத் தூண்டுகிறது என்றும் சுட்டிக்காட்டினார்.
உண்மையான வாழ்வின் நிறைவு என்பது தனிமனிதவாதத்தில் இல்லை என்றும் மாறாக, அது பிறரன்பிலும் பிறருக்கான சேவையிலுமே அடங்கியுள்ளது என்றும் திருத்தந்தை குறிப்பிட்டார்.
புனித அகுஸ்தினாரின் சிந்தனைகளை மேற்கோள்காட்டிய திருத்தந்தை, சுயநலத்தின் மீது கட்டமைக்கப்பட்ட "மனிதனின் நகரம்" (City of Man) என்பதனை, அன்பு மற்றும் நல்லுறவுகளின் அடித்தளத்தில் உருவான "கடவுளின் நகரம்" (City of God) என்பதோடு ஒப்பிட்டுக் காட்டியதுடன், இன்றைய காலகட்டத்தில் உருவாகும் பல நெருக்கடிகளுக்கு, படைத்தவரோடு மனிதகுலத்திற்கு இருக்க வேண்டிய உறவை மறந்து போனதே முக்கியக் காரணம் என்றும் எச்சரித்தார்.
இறுதியாக பொதுநலனை மேம்படுத்தவும், உண்மையான "அன்பின் நாகரிகத்தை" நிலைநாட்டவும் இன்றியமையாத அடித்தளங்கள் உரையாடல், மனித மாண்பு மற்றும் ஆரோக்கியமான பன்முகத்தன்மை ஆகியவையே என்று வலியுறுத்தி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
