தேடுதல்

புனித அகுஸ்தினார் சபை துறவிகளுடன் திருத்தந்தை புனித அகுஸ்தினார் சபை துறவிகளுடன் திருத்தந்தை   (© Ordine di Sant'Agostino)

புனித அகுஸ்தினாரின் ஆன்மீகப் பாதையில் திருத்தந்தை

உங்களோடு நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்காக நான் ஒரு ஆயர் என்ற தாரக மந்திரத்துடன், நம்பிக்கையாளர்களோடு இணைந்து பயணிக்கும் ஒரு மேய்ப்பராகத் திருத்தந்தை தன்னை முன்னிறுத்துகிறார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

நான் புனித அகுஸ்தினாரின் மகன், ஒரு அகுஸ்தின் என்று 2025, மே 8 அன்று திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற போது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தன்னை இவ்வாறுதான் உலகிற்கு அறிமுகப்படுத்திக் கொண்டார். ராபர்ட் பிரான்சிஸ் ப்ரேவோஸ்ட் (Robert Francis Prevost) என்ற இயற்பெயரைக் கொண்ட  திருத்தந்தை, 1978-ஆம் ஆண்டு முதல் புனித அகுஸ்தினார் சபையின் (Order of Saint Augustine) ஓர் அங்கமாக இருந்து வருகிறார்.

"அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு வழங்கிய முதல் மேற்கோள்களில் ஒன்று புனித அகுஸ்தினாரிடமிருந்து வந்ததாகும்: 'உங்களோடு நான் ஒரு கிறிஸ்தவன், உங்களுக்காக நான் ஒரு ஆயர்.' இந்தத் தொடர் பணிவு மற்றும் பொறுப்புணர்வு ஆகிய இரண்டையும் பிரதிபலிக்கிறது; அதாவது, திருத்தந்தை நம்பிக்கையாளர்களுக்கு ஒரு மேய்ப்பராகப் பணிபுரியும் அதே வேளையில், அவர்களோடு இணைந்து பயணிப்பவர் என்பதையும் இது வலியுறுத்துகிறது. உறவுப் பாலங்களை அமைக்கின்ற, அனைவரையும் வரவேற்கின்ற மற்றும் உரையாடல், பிறரன்புப் பணி, ஒற்றுமை ஆகியவற்றை ஊக்குவிக்கின்ற ஒரு மறைபரப்புத் திருஅவையாகத் திகழ வேண்டும் என்று திருத்தந்தை தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகிறார்.

ஒரு அகுஸ்தினார் சபை துறவியாக, திருத்தந்தை அவர்கள், இறைவனைத் தேடுதல், கிறிஸ்துவைப் பின்பற்றுதல், சகோதரத்துவம் மற்றும் பிறருக்குச் சேவை செய்தல் ஆகியவற்றைத் தனது வாழ்வின் உன்னத விழுமியங்களாகக் கொண்டுள்ளார். அவர் இன்றும் அகுஸ்தினார் சமூகத்துடன் மிகவும் நெருங்கிய தொடர்பைப் பேணி வருகிறார்; தனது சக துறவிகளுடன் தொடர்ந்து நட்புறவு தருணங்களைப் பகிர்ந்து கொள்வதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார். திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற உடனேயே, அவர் ஜெனாசானோவில் (Genazzano) உள்ள 'நல்லாலோசனை அன்னை' (Our Lady of Good Counsel) திருத்தலத்திற்குப் புனிதப் பயணம் மேற்கொண்டார். அங்கு, தனது புதிய மற்றும் சவாலான பொறுப்பை அன்னை மரியாளின் கரங்களில் ஒப்படைத்து வேண்டினார்.

புனித அகுஸ்தினாரால் ஈர்க்கப்பட்ட கருப்பொருள்கள் திருத்தந்தையின் போதனைகளில் அடிக்கடி இடம்பெறுகின்றன: உள்ளுணர்வு (interiority), நட்பு, உரையாடல் மற்றும் ஒற்றுமை ஆகியவை அவற்றில் முக்கியமானவை. அவரது திருத்தந்தை பணியின் இலக்கான, "ஒரே கிறிஸ்துவில் நாம் ஒன்றாய் இருக்கிறோம்" (In Illo uno unum) என்பது இந்த உன்னதப் பார்வையைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது. புனித அகுஸ்தினாரின் மீது தான் கொண்டுள்ள பற்றை வெறும் போதனைகளோடு நிறுத்திக்கொள்ளாமல், அவரது பிறப்பிடமான அல்ஜீரியாவுக்குப் பயணம் செய்ததன் மூலம் திருத்தந்தை அதனைச் செயலிலும் காட்டினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

08 மே 2026, 11:58