அமைதி: அன்பின் பலவீனத்தால் வெல்லப்படும் அறப்பயணம்
ஜான்சிராணி அருளா ந்து – வத்திக்கான்
ஆயுதமற்றது மற்றும் ஆயுதங்களைக் களையச் செய்வது' என்ற எளிய சொற்களின் வழியே, 2025 மே 8 அன்று, தனது திருத்தந்தை பணியின் தொடக்கத்திலேயே அமைதி குறித்த தனது உன்னதமான பார்வையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் உலகிற்குப் பறைசாற்றினார்.
அமைதி என்பது வெறும் போர்நிறுத்தமோ அல்லது அரசியல் உடன்படிக்கையோ அல்ல; அது மனிதநேயம், நீதி மற்றும் பரஸ்பர உரையாடல் ஆகியவற்றில் உருவான ஆழமான நல்லுறவு என்பதே அவரது கருத்தாக இருந்தது. கவிஞர் யெஹுதா அமிச்சாயின் வரிகளால் தூண்டப்பட்ட அவர், அமைதியை ஒரு 'காட்டு மலருக்கு' (wild peace) ஒப்பிடுகிறார். கான்கிரீட் விரிசல்களுக்கு இடையே எதிர்பாராத விதமாக முளைக்கும் மலரைப் போன்றது அந்த அமைதி—பார்க்க மென்மையாகத் தெரிந்தாலும், பாறைகளைத் துளைத்து வளரும் விடாமுயற்சி கொண்டது அது என்கிறார்.
உரோமை ஆயராகப் பொறுப்பேற்ற தனது முதலாம் ஆண்டிற்குள், திருத்தந்தை 400-க்கும் மேற்பட்ட முறை 'அமைதி' குறித்துப் பேசியுள்ளார். செய்தியாளர்கள் உண்மையை நேர்மையுடன் சொல்ல வேண்டும் என்றும், பிளவுகளை உண்டாக்காமல் மக்களிடையே புரிந்துணர்வை வளர்க்க ஊடகங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் திருத்தந்தை வலியுறுத்தியுள்ளார்.
"போர்ப் பிரபுக்களை" (lords of war) வன்மையாகக் கண்டிக்கும் அவர், மருத்துவமனைகள், பள்ளிகள் மற்றும் உதவித் திட்டங்களுக்கு நிதி பற்றாக்குறை நிலவும் சூழலில், ஆயுதங்களுக்காகப் பெருமளவிலான செல்வம் செலவிடப்படுவதைக் கடுமையாக விமர்சிக்கிறார். மேலும், போரின் கோர விளைவுகளான பசி, வறுமை மற்றும் மனிதத் துயரங்களை அவர் வேதனையுடன் சுட்டிக்காட்டினார்.
புனித வார உரையின் போது, 'கடவுளின் பெயரால் போர் செய்வதை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாது' என்று திருத்தந்தை வலியுறுத்தி னார். வன்முறைக்குக் காரணமான அதிகார வெறி மற்றும் பணத்தாசை ஆகியவற்றை அவர் 'போலித் தெய்வங்கள்' என்று சாடினார். அத்துடன், உலக நாடுகளின் இராணுவச் செலவுகள் அதிகரித்து வருவதையும், ட்ரோன் போன்ற நவீன ஆயுதங்களின் ஆபத்துகளையும் சுட்டிக்காட்டி, உலகளாவிய ஆயுதக் குறைப்பிற்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
அமைதியை ஒரு நம்பிக்கையான பயணமாக எடுத்துக்காட்டிய இந்தப் பயணம் சமரசம், கல்வி, அகிம்சை, விளையாட்டு, கலாச்சாரம் மற்றும் நினைவு கூர்தல் (memory) ஆகியவற்றின் மூலம் சாத்தியமாகும் என்று அவர் கருதுகிறார். தீமையை வன்முறையால் அல்ல, மாறாக "அன்பின் பலவீனத்தால்" (weakness of love) வெல்ல முடியும் என்பதே கிறிஸ்தவர்களின் வழி என்று அவர் கூறுகிறார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
