இன்டர் மிலன் (Inter Milan) அணியின் நிர்வாகிகள் மற்றும் வீரர்களுடன் திருத்தந்தை இன்டர் மிலன் (Inter Milan) அணியின் நிர்வாகிகள் மற்றும் வீரர்களுடன் திருத்தந்தை   (@VATICAN MEDIA)

இன்டர் மிலன் சாம்பியன் வீரர்களை உத்வேகப்படுத்திய திருத்தந்தை!

விளையாட்டு வீரர்கள் வெறும் திறமையை வெளிப்படுத்துபவர்களாக மட்டும் இல்லாமல், தங்களைப் பின்பற்றும் கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு நற்பண்புகளைக் கற்றுத்தரும் முன்மாதிரிகளாக திகழ வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

உங்களின் அர்ப்பணிப்பு, கூட்டுமுயற்சி, ஒழுக்கம் மற்றும் தளராத விடாமுயற்சி ஆகியவற்றாலேயே வெற்றி என்னும் இலக்கை அடைதிருக்கிறீர்கள் என்றும், வெற்றிக் களிப்பிலும் சரி, சவாலான தருணங்களிலும் சரி, எதற்கும் அஞ்சாமலும் மனவுறுதி குறையாமலும் நீங்கள் காட்டிய அந்தத் துணிவே இன்று உங்களை இந்த நிலைக்கு  உயர்த்தியுள்ளது என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

மே 09, சனிக்கிழமையன்று, 2026-ஆம் ஆண்டு Serie A கால்பந்து தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற இன்டர் மிலன் (Inter Milan) அணியினர்,  பயிற்சியாளர்கள், நிர்வாகிகள் குழுவினரை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

நீங்கள் கடந்து வந்த இந்த அனுபவத்தைப் பற்றிச் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும், இளைஞர்களின் வளர்ச்சிக்குத் தேவையான ஒரு சிறந்த செய்தியை அவர்களுக்குக் கொண்டு சேர்ப்பவர்களாக நீங்கள் திகழ வேண்டும் என்றும் திருத்தந்தை அவர்களைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் பல இளைஞர்கள் உங்களை தங்கள் வீரர்களாகவும், பின்பற்றத்தக்க முன்மாதிரிகளாகவும் பார்க்கிறார்கள் என்று எடுத்துக்காட்டிய திருத்தந்தை, இதனால், விளையாட்டு வீரர்களாகிய நீங்கள் வெறும் திறமையை வெளிப்படுத்துபவர்களாய் மட்டுமல்லாமல், உயர்ந்த மதிப்புகளின் சாட்சிகளாகவும் இருக்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளீர்கள் என்றும் திருத்தந்தை கூறினார்.

ஏறத்தாழ முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு, புனித இரண்டாம் ஜான் பால் உங்கள் அமைப்பின் சில பிரதிநிதிகளுடன் நடத்திய ஒரு சந்திப்பின் போது, "உங்களிலும் உங்கள் நடத்தையிலும் உள்ள நம்பகத்தன்மையையும் நேர்மையையும் பலர் அடையாளம் கண்டு அங்கீகரிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்" (Inter Calcio அணியின் நிர்வாகிகளும் வீரர்களும் சந்தித்த உரை, 16 பிப்ரவரி 1991) என்று கூறியதை மேற்கோள்காட்டி, இந்த வார்த்தைகளை நானும் உங்களிடம் மீண்டும் கூற விரும்புகிறேன் என்று  திருத்தந்தை குறிப்பிட்டார்.

இறுதியாக, இன்டர் மிலன் அணியின் வீரர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் அங்குள்ள அனைவருக்கும்  தனது தனது திருத்தூது ஆசீரையும், வாழ்த்துகளையும் வழங்கி  தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 மே 2026, 14:30