தேடுதல்

சாஹேல் அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்த போது சாஹேல் அறக்கட்டளையின் உறுப்பினர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்த போது  (@VATICAN MEDIA)

சாஹேல் மாநிலத்தில் அமைதி நிலவ திருத்தந்தை அழைப்பு!

அட்லாண்டிக் முதல் செங்கடல் வரை பரவியுள்ள இப்பகுதியில் வன்முறைகள் ஒழியவும், அமைதி மற்றும் வளர்ச்சி ஏற்படவும் திருத்தந்தை உலக நாடுகளுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

சாஹேல் (Sahel) மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காகத் தனது இறைவேண்டல்  களை உறுதி அளித்த திருத்தந்தை, துயரத்தில் இருக்கும் அனைவருக்கும் தனது ஆதரவை வெளிப்படுத்தியதுடன், அங்கு அமைதியை நிலைநாட்டத் தொடர்ச்சியான முயற்சிகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தார்.

மே 10, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்திக்கு பிறகு இவ்வாறு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

அட்லாண்டிக் பெருங்கடல் முதல் செங்கடல் வரை வட ஆப்பிரிக்காவின் தெற்குப் பகுதிகளில் பரந்து விரிந்துள்ள  சாஹேல் (Sahel) மாநிலத்தில் நிலவும் நிலையற்ற சூழல் குறித்து திருத்தந்தை  தனது கவலையைத் தெரிவித்தார்.

மேலும் சாஹேலில் அனைத்து வகையான வன்முறைகளும் முடிவுக்கு வர வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றும், அந்தப் பிரியமான நிலத்தில் அமைதியையும் வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்கான ஒவ்வொரு முயற்சியையும் நான் ஊக்குவிக்கிறேன் என்றும்  திருத்தந்தை கூறினார்.

வடக்கே உள்ள வறண்ட சஹாரா பாலைவனத்திற்கும், தெற்கே ஈரப்பதம் நிறைந்த சூடானிய சவன்னா புல்வெளிகளுக்கும் இடைப்பட்ட ஒரு மாறுதல் பகுதியாக விளங்கும் இந்த சாஹேல் மாநிலம், சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை ரீதியாக மிக முக்கியமானது. அத்துடன், இப்பகுதி நீண்டகாலமாக உள்நாட்டு நிலையற்ற தன்மையாலும் (instability) வெளிநாட்டு சக்திகளின் மேலாதிக்கப் போட்டிகளாலும் வடிவமைக்கப்பட்ட ஒரு முக்கியமான புவிசார் அரசியல் (Geopolitical) இடமாகவும் திகழ்கிறது.

காலநிலை நெருக்கடி (Climate crisis) தொடர்ந்து உணவு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை ஏற்படுத்தி வருகிறது; அதேவேளையில், அரசாங்க ஊழல் காரணமாக இராணுவப் புரட்சிகள், கிளர்ச்சிகள் மற்றும் பயங்கரவாதம் ஆகியவை இப்பகுதியில் தலைதூக்கியுள்ளன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 09:54