கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிக்கு மேற்கொண்டதிருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை லியோ கடந்த ஆண்டு நவம்பர் மாதம் துருக்கிக்கு மேற்கொண்டதிருத்தூதுப் பயணத்தின் போது திருத்தந்தை லியோ  (ANSA)

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டுக்கான திருத்தூதுப் பயண நிகழ்வுகள்

திருத்தந்தையின் ஸ்பெயின் நாட்டுக்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயண நிகழ்வுகளை திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.

ஜான்சிராணி அருளாந்து – வத்திக்கான்

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்  தனது ஸ்பெயின் நாட்டுக்கான திருத்தூதுப் பயணத்தை ஜூன் 6-ஆம் தேதி தொடங்குகிறார் என்றும், தலைநகர் மேட்ரிட் சென்றடையும் அவரை, அரச மாளிகையில் ஸ்பெயின் மன்னர் ஆறாம் பிலிப் (King Felipe VI) வரவேற்கிறார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டு அரசுத் தலைவர்கள், குடிமைச்  சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதர்களைச் சந்தித்துப் பேசும் திருத்தந்தை, பின்னர் பிளாசா டி லிமாவில் (Plaza de Lima) இடம்பெறும் இளைஞர்களின் சிறப்பு விழிப்பு இறைவேண்டல் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கிறிஸ்துவின் திருவுடல் மற்றும் திருஇரத்தப் பெருவிழாவன்று (Solemnity of Corpus Christi), திருத்தந்தை பிளாசா டி சிபெலஸில் (Plaza de Cibeles) திருப்பலி நிறைவேற்றுவார் என்று குறிப்பிட்டுள்ள அச்செய்தித் தொடர்பகம், பின்னர் புனித அகுஸ்தின் சபையின் (Order of Saint Augustine) உறுப்பினர்களைச் சந்திக்கிறார் என்றும், மேட்ரிட்டின் மோவிஸ்டார் அரங்கில் (Movistar Arena) கலாச்சாரம், வணிகம், விளையாட்டு மற்றும் கலைத்துறைப் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் பங்கேற்பார் என்றும் தெரிவித்துள்ளது.

ஜூன் 8-ஆம் தேதி, ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் (Pedro Sánchez) அவர்களைச் சந்திக்கும் திருத்தந்தை, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உரையாற்றுகிறார் என்றும் அதனைத் தொடர்ந்து, ஸ்பெயின் நாட்டு ஆயர்களைச் சந்திப்பதுடன்  பெர்னாபியூ மைதானத்தில் (Bernabéu Stadium) நடைபெறும் மறைமாவட்டக் கூட்டத்தில் பங்கேற்கிறார் என்றும் அச்செய்தித் தொடர்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதன்பிறகு ஜூன் 9-ஆம் தேதி பார்சிலோனாவுக்குப் பயணம் மேற்கொள்கிறார் என்று தெரிவித்துள்ள அச்செய்திக்குறிப்பு அங்கு, புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் அந்தோணி கவுடி (Antoni Gaudí) வடிவமைத்த சக்ரடா பேமிலியா (Sagrada Familia) பேராலயத்தில் புதிதாகக் கட்டி முடிக்கப்பட்டுள்ள "இயேசு கிறிஸ்து கோபுரத்தை" (Tower of Jesus Christ) திறந்து வைத்து ஆசி வழங்குவார் என்றும் எடுத்துக்காட்டியுள்ளது.

திருத்தூதுப் பயணத்தின் இறுதி நாள் நிகழ்வுகள் கானரி தீவுகளில் (Canary Islands) உள்ள புலம்பெயர்ந்தோரை (migrants) மையமாகக் கொண்டிருக்கும் என்று குறிப்பிட்டுள்ள  அச்செய்திக்குறிப்பு, அங்கு திருத்தந்தை திருப்பலி நிறைவேற்றுவதுடன், புலம்பெயர்ந்தோருக்கு உதவி வரும் அமைப்புகளை நேரில் சந்திப்பார் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 12:03