தேடுதல்

திருத்தந்தை லியோ அவர்கள் – கோலோன் மறைமாவட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்பு திருத்தந்தை லியோ அவர்கள் – கோலோன் மறைமாவட்ட பிரதிநிதிகளுடன் சந்திப்பு  (ANSA)

அன்பின் சாட்சியமே நற்செய்திப் பணி!

நற்செய்தியை அறிவிப்பது என்பது மற்றவர்கள் மீது எதையும் திணிப்பது அல்ல; மாறாக, அன்பின் வழியாக உண்மையை வெளிப்படுத்துவதே ஆகும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

"திருஅவையின் உலகளாவிய பணி மற்றும் உரையாடலின் அவசியத்தை   எடுத்துக்காட்டிய திருத்தந்தை, நற்செய்திப் பணி என்பது எதையும் திணிப்பது அல்ல, மாறாக அன்பின் வழியே உண்மைக்குச் சான்று பகர்வதே ஆகும் என்று கூறினார்.

ஏப்ரல் 29, வியாழனன்று ஜெர்மனியின் கொலோன் (Cologne) உயர்மறைமாவட்டத்தின் "உலகளாவிய திருஅவை மற்றும் உரையாடலுக்கான மறைமாவட்ட அலுவலகத்தின்" 50-வது ஆண்டு பொன்விழாவையொட்டி, அந்த அமைப்பின் பிரதிநிதிகளை திருப்பீடத்தில் சந்தித்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

உரையாடல் என்பது மக்களிடையே ஒன்றிப்பை வலுப்படுத்தி, அமைதியையும் புரிந்துணர்வையும் ஊக்குவிக்கிறது என்று திருத்தந்தை குறிப்பிட்டார்.

மேலும் கொலோன் மறைமாவட்டத்தின் "தீர்க்கதரிசன வெளிப்படைத்தன்மையை" பாராட்டிய திருத்தந்தை, டோக்கியோவுடனான அதன் நீண்டகால உறவையும், 'மிசெரியோர்' மற்றும் 'அட்வேனியாட்' போன்ற உலகளாவிய உதவித் திட்டங்களையும் , போர் மற்றும் பேரிடரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் ROACO அமைப்பை உருவாக்க அம்மறைமாவட்டம் உதவியதையும் சுட்டிக்காட்டினார்.

பெரு நாட்டில் தான் பணியாற்றிய முன்னாள் மறைமாவட்டத்திற்கு வழங்கப்பட்ட உயிர் காக்கும் ஆக்சிஜன் இயந்திரங்கள் உள்ளிட்ட உதவிகளை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, குறிப்பாக மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் உலகளாவிய திருஅவையின் நெருக்கத்தை உணரும் வகையில், தொடர்ந்து பிறரன்புப் பணிகளை முன்னெடுக்குமாறு அவர்களை ஊக்கப்படுத்தினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 மே 2026, 13:29