திருத்தந்தையின் உரைகள் அடங்கிய புதிய நூல் வெளியீடு!
இம்மானுவேல் மரியான் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களிடம், அவர் புனித அகஸ்டின் சபையின் தலைமைப் பணியாளராகப் பணியாற்றியபோது ஆற்றிய உரைகளின் தொகுப்பான "லிபெரி சொத்தோ லா கிராட்சியா" (Liberi sotto la grazia) எனும் நூலின் முதல் பிரதி சமர்ப்பிக்கப்பட்டது. மே 04, திங்களன்று, அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட இந்த நூலின் முதல் பிரதியைத் திருத்தந்தை பெற்றுக்கொண்டார்.
"அருளின் நிழலில் விடுதலை: வரலாற்றின் சவால்களுக்கு மத்தியில் புனித அகஸ்டின் நெறியில்..." (Liberi sotto la grazia. Alla scuola di Sant'Agostino di fronte alle sfide della storia) என்ற தலைப்பில் திருத்தந்தையின் உரைகள் நூலாக வெளிவந்துள்ளது.
மே 04, திங்கள்முதல் புத்தகக் கடைகளில் விற்பனைக்கு வரவுள்ள இந்த இத்தாலிய மொழி நூலின் முதல் பிரதியை, புனித அகஸ்டின் சபையின் தற்போதைய தலைமைப் பணியாளர் அருள்தந்தை ஜோசப் ஃபாரெல் திருத்தந்தையிடம் வழங்கினார்.
இந்த நிகழ்வின் போது, நூலின் பதிப்பாசிரியர்களில் ஒருவரும், வத்திக்கான் தூதரகக் காப்பகத்தின் (Vatican Apostolic Archive) தலைவருமான அருள்தந்தை ரொக்கோ ரொன்சானி மற்றும் வத்திக்கான் பதிப்பகத்தின் (Libreria Editrice Vaticana) ஆசிரியர் குழுப் பொறுப்பாளர் லொரென்சோ ஃபாசினி ஆகியோர் உடனிருந்தனர். அருள்தந்தை ரொன்சானியுடன் இணைந்து, அருள்தந்தை மிகுவெல் ஏஞ்சல் மார்ட்டின் ஜுவாரெஸ் மற்றும் அருள்தந்தை மைக்கேல் டி கிரிகோரியோ ஆகியோரும் இந்த நூலைத் தொகுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தொகுப்பு வரும் மாதங்களில் பல்வேறு உலக மொழிகளில் வெளியாக உள்ளதுடன், தற்போது 30 நாடுகளில் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது. 2025 அக்டோபரில் நடைபெற்ற ஃபிராங்க்ஃபர்ட் அனைத்துலக புத்தகக் கண்காட்சியில் Libreria Editrice Vaticana வெளியிட்ட அறிவிப்பின்படி, ராபர்ட் ஃபிரான்சிஸ் பிரெவோஸ்டின் என்ற இயற்பெயரைக்கொண்ட திருத்தந்தையின் உரைகள், மறையுரைகள், கடிதங்கள் மற்றும் செய்திகள் அனைத்தும் முதன்முறையாக இந்த நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களின் ஆன்மீகச் சிந்தனைகளை நாம் ஆழமாகப் புரிந்துகொள்ள முடியும்.
மே 06, புதனன்று, மாலை 5:00 மணிக்கு புனித அகஸ்டின் சபையின் பாட்ரிஸ்டிக் நிறுவனத்தில் (Augustinianum) இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. இதில் திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின், புனித அகஸ்டின் சபையின் தலைமைப் பணியாளர் அருள்தந்தை ஜோசப் ஃபாரெல், சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ரூபினி, எழுத்தாளர் மரியா கிராசியா கலந்த்ரோனே மற்றும் வத்திக்கான் வானொலி நிகழ்ச்சிப் பொறுப்பாளர் Andrea Tornielli ஆகியோர் கலந்துகொண்டு நூலை அறிமுகம் செய்து வைக்கின்றனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
