உரோமை நகரில் திருத்தந்தை: வத்திக்கான் ஊடகத்தின் புதிய ஆவணப்படம்

வத்திக்கான் ஊடகம் “உரோமில் லியோ” (Leone a Roma) என்ற புதிய ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

வத்திக்கான் ஊடகம் உரோமில் லியோ” (Leone a Roma) என்ற புதிய ஆவணப்படத்தைத் தயாரித்துள்ளது. இது, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருத்தந்தையாகப் பொறுப்பேற்பதற்கு முன்பு, உரோமை நகரில் ஏறத்தாழ 20 ஆண்டுகள் ஆற்றிய பணிகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ராபர்ட் பிரான்சிஸ் ப்ரிவோஸ்ட் என்ற இயற்பெயர் கொண்ட அவரது ஆரம்பகால உரோமை வாழ்க்கையை இந்தப் படம் விரிவாகப் பதிவு செய்கிறது.

மே 8, வெள்ளியன்று அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், உரோம் நகரில் அவர் வாழ்ந்த காலத்தில் அவரை நன்கு அறிந்த நண்பர்கள், அருள்பணியாளர்கள், துறவிகள், குடும்பங்கள் மற்றும் அகஸ்தீனியத் துறவிகளின் நினைவலைகள் மற்றும் சான்றுகளை முன்நிறுத்துகிறது.

இந்த ஆவணப்படம், 1981-ஆம் ஆண்டில் சிகாகோவிலிருந்து ஒரு இளம் அகுஸ்தினார் சபையைச் சேர்ந்த திருத்தொண்டராக அவர் உரோம் வந்தடைந்ததிலிருந்து, பின்னர் புனித அகுஸ்தினார் சபையின் தலைவராகவும் (Prior General), ஆயர்களுக்கான பேராயத்தின் தலைவராகவும் (Prefect of the Dicastery for Bishops) அவர் ஆற்றிய பணிகள் வரையிலான பயணத்தைப் படம் பிடித்துக் காட்டுகிறது.

2001 முதல் 2013 வரையில் புனித அகுஸ்தினார் சபையை அவர் வழிநடத்திய விதம், அவரது பன்னாட்டு நற்செய்தி அறிவிப்புப் பணி, மேய்ப்புப் பணி மற்றும் உலகளாவிய சபையின் நிர்வாகம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பை அவருடன் பணி செய்த பணியாளர்கள் இந்த ஆவணப்படத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மறைக்கல்வி வகுப்புகள், செப வழிபாடுகள் மற்றும் புனித அகுஸ்தினார் மற்றும் பிற புனிதர்களுடன் தொடர்புடைய முக்கியத் திருத்தலங்களுக்கு மேற்கொண்ட திருப்பயணங்களின் போது அவரைச் சந்தித்த மக்களின் அனுபவங்கள் வாயிலாக அவரது ஆன்மீக வாழ்க்கையையும் இந்த ஆவணப்படம் ஆராய்ந்துள்ளது.

திருத்தந்தை பிரான்சிஸால் நியமிக்கப்பட்டு, பின்னர் கர்தினாலாக உயர்த்தப்பட்ட பிறகு, உரோமை தலைமைச் செயலகத்தில் (Roman Curia) அவர் பணி செய்த காலத்தைப் பற்றியும் இதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

வத்திக்கான் ஊடகத்தின் ஊடகவியலாளர்கள் பிலிப் ஹெர்ரெரா-எஸ்பாலியாட், சால்வதோர் செர்னுசியோ மற்றும் டிசியானா காம்பிசி ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த ஆவணப்படம், திருத்தந்தை பதினான்காம் லியோவின் பெரு நாட்டில் அவர் பணி செய்த ஆண்டுகள்  மற்றும் சிகாகோவில் உள்ள அவரது அமெரிக்க வேர்கள் குறித்த படங்களைத் தொடர்ந்து, அவரைப் பற்றி எடுக்கப்பட்ட மூன்றாவது ஆவணப்படமாகும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

11 மே 2026, 11:30