காசா: போரின் துயரங்களுக்கு மத்தியில் நம்பிக்கையூட்டும் திருத்தந்தையின் செய்தி!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
காசாவில் அமைதி திரும்ப வேண்டும் என்ற தனது கோரிக்கையையும், மனிதாபிமான உதவிகளை வழங்குவதில் நிலவும் இன்னல்களுக்கு மத்தியில் பாலஸ்தீனியர்களுக்கு தனது உடனிருப்பையும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தெரிவித்துள்ளார்.
மே 4, திங்களன்று, காசா பங்குத்தளத்திற்கு அனுப்பிய செய்தியில் இவ்வாறு தெரிவித்துள்ளார் திருத்தந்தை.
இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்ட காசாவில் உள்ள திருக்குடும்ப தேவாலயத்தின் பங்குத்தந்தை கேப்ரியல் ரோமானெல்லி அவர்கள், போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக திருத்தந்தை காட்டும் நெருக்கம், செபம் மற்றும் அக்கறையையும் உண்மையான நல்லிணக்கத்தின்மீதான அவரின் நம்பிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேல் இடையே நிலையான அமைதி நிலவவும், இருதரப்பு மக்களிடையே மனமாற்றம் ஏற்பட்டு இறையருள் பெருகவும், வன்முறை மோதல்கள் முடிவுக்கு வரவும் திருத்தந்தை தினமும் இறைவேண்டல் செய்கிறார் என்றும் பங்குத்தந்தை கேப்ரியல் ரோமானெல்லி அவர்கள் கூறியுள்ளார்.
காசாவின் நிலைமை மிகவும் பலவீனமாக இருப்பதாக விவரித்துள்ள பங்குத்தந்தை ரோமானெல்லி அவர்கள், "அக்டோபர் மாதத்திலிருந்து ஏற்பட்ட போர்நிறுத்தம் பெரிய அளவிலான குண்டுவெடிப்புகளைக் குறைத்துள்ள போதிலும், வன்முறை தொடர்கிறது" என்றும் "இதில் 800-க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன" என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் "மனிதாபிமான உதவி, தண்ணீர், மின்சாரம் மற்றும் அடிப்படைத் தேவைகளில் கடுமையான பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால் மக்களின் அன்றாட வாழ்க்கை தொடர்ந்து மோசமாக்கி வருகிறது" என்றும் பங்குத்தந்தை ரோமானெல்லி அவர்கள், கூறியுள்ளார்.
மனிதாபிமான விவகாரங்களை ஒருங்கிணைப்பதற்கான ஐக்கிய நாடுகள் அலுவலகம் (OCHA) மே 1, வெள்ளிக்கிழமையன்று வெளியிட்ட அறிக்கையில், "2026-ஆம் ஆண்டிற்குத் தேவையான மனிதாபிமான நிதியில் 10 விழுக்காட்டிற்கும் சற்று அதிகமான தொகை மட்டுமே திரட்டப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளது.
அத்தியாவசியப் பொருட்களின் மீது விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் மனிதாபிமான சேவைகளை முடக்கி வருகின்றன என்று தெரிவித்துள்ள அந்த அறிக்கை, அதே நேரத்தில் காசாவின் பெரும்பான்மையான மக்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதனால் அடிப்படை சேவைகள் முடங்கும் ஆபத்து அதிகரித்து வருவதுடன், கடுமையான நலவாழ்வு அவசரநிலைகள் குறித்த அச்சத்தையும் இது எழுப்புகிறது என்றும் அந்த அறிக்கை தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
