“அருளின் நிழலில் விடுதலை” உலகத்தோடு உரையாடும் பிரெவோஸ்ட்டை அறிந்து கொள்வதற்கான ஒரு புத்தகம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
வத்திக்கான் பதிப்பகத்தால் வெளியிடப்பட்டு, மே 6, புதன்கிழமையன்று உரோமில் அறிமுகப்படுத்தப்பட்ட “அருளின் நிழலில் விடுதலை” (Free under Grace) என்ற புத்தகம், புனித அகுஸ்தினாரின் சபையின் தலைமைப் பணியாளராகப் பணியாற்றி தற்போது திருத்தந்தையாக உயர்ந்துள்ள ராபர்ட் பிரான்சிஸ் பிரெவோஸ்ட்டினின் ஆன்மீகம் மற்றும் சிந்தனைகளைப் பற்றிய நுண்ணறிவை வழங்குகிறது.
அகஸ்தினியன் தந்தையர்களான ரோக்கோ ரொன்சானி, மிகுவல் ஏஞ்சல் மார்ட்டின் ஜுவாரெஸ் மற்றும் மைக்கேல் டி கிரிகோரியோ ஆகியோரால் தொகுக்கப்பட்ட இந்தப் புத்தகம், விரைவில் உலகம் முழுவதும் 30 மொழிகளில் வெளிவர உள்ளது.
இந்த நூல் அறிமுக விழாவில் அருள்பணி ஜோசப் ஃபாரெல், சமூகத்தொடர்புக்கான திருப்பீடத்துறையின் தலைவர் பவுலோ ருஃபினி, திருப்பீடச் செயலர் கர்தினால் பியத்ரோ பரோலின், எழுத்தாளர் மரியா கிரேசியா கலாண்ட்ரோன் மற்றும் நெறியாளர் ஆண்ட்ரியா டொர்னெல்லி ஆகியோர் கலந்து கொண்டனர்.
புனித அகுஸ்தினின் ஒழுங்கு முறைகளிலிருந்து இந்தத் தலைப்பு உருவானதாக விளக்கமளித்துள்ள அருள்பணி. ஃபாரெல் அவர்கள், "இந்த நூல் கிறிஸ்தவர்களை “அருளின் நிழலில் சுதந்திரமாக” வாழ அழைக்கிறது" என்றும் "அன்பு, ஆன்மீக அழகு மற்றும் நம்பிக்கையில் வேரூன்றிய சுதந்திரத்தை வலியுறுத்துகிறது" என்றும் கூறியுள்ளார்.
இந்தப் படைப்பை "ஒளியூட்டும்" ஒன்றாக விவரித்துள்ள ருஃபினி அவர்கள், மேலும் "பிரெவோஸ்ட் அதிகாரத்தை ஒரு ஆதிக்கம் செலுத்தும் வாய்ப்பாகப் பார்க்காமல், மென்மை, ஒற்றுமை மற்றும் தோழமை கலந்த சேவையாகக் கருதுவதை இந்த நூல் முன்னிலைப்படுத்துகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்நூல் குறித்துப் பேசிய கர்தினால் பரோலின் அவர்கள், "பிரெவோஸ்ட் அகஸ்தினியன் ஆன்மீகத்தையும், குறிப்பாக கடவுளையும் உண்மையையும் தேடுவது குறித்து கவனம் செலுத்தினார்" என்றும் "கிறிஸ்தவ நம்பிக்கையாளர்களை உண்மையை உடமையாக்கியவர்களாகப் பார்க்காமல், உண்மையின் கருப்பொருளைத் தேடி ஒன்றாகப் பயணிக்கும் உடன் பயணிகளாகவே பிரெவோஸ்ட் கருதுகிறார்" என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் "மதச்சார்பற்ற சமூகங்களில் மக்கள் மீண்டும் இறை நம்பிக்கையைக் கண்டறிய உதவ வேண்டியதன் அவசியத்தையும், அதே வேளையில் ஆரோக்கியமான மதச்சார்பின்மையை ஆன்மீக விழுமியங்களை புறக்கணிக்கும் மதவாதத்திலிருந்து வேறுபடுத்திப் பார்க்க வேண்டியதன் அவசியத்தையும் இந்தப் புத்தகம் வலியுறுத்துகிறது" என்றும் கர்தினால் பரோலின் கூறியுள்ளார்.
திருஅவை தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்றும், இன்றைய காலத்திற்குப் புரியும் மொழியில் நற்செய்தியைத் அறிவிக்க வேண்டும் என்றும் கூறியுள்ள பிரெவோஸ்ட் அவர்கள், பராமரிப்பதில் மட்டும் கவனம் செலுத்தாமல் "முன்னோக்கிச் செல்லும் திருஅவையாக" மாற வேண்டும் என்றும் இந்நூலின் வாயிலாக மீண்டும் மீண்டும் அழைப்பு விடுக்கிறார்.
அவருடைய மறைப்பணிப் பார்வை, செவிசாய்த்தல், புனிதம் மற்றும் நிகழ்கால கலாச்சாரத்துடன் இணைந்து செயல்படுதல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. இந்நூலின் ஒரு முக்கிய கருப்பொருளாக ஏழைகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் மீதான அக்கறை உள்ளது. அநீதி, தேவைக்கு அதிக செல்வம் மற்றும் ஒற்றுமையின்மை ஆகியவை நற்செய்தி அறிவிப்பை பலவீனப்படுத்துவதாக பிரெவோஸ்ட் வாதிடுகிறார். அவர் நற்செய்தி காட்டும் எளிமையை ஒரு நம்பகமான கிறிஸ்தவ சான்றாக பரிந்துரைக்கிறார் மற்றும் புலம்பெயர்ந்தோரை கடவுளின் மக்களாக வரவேற்கும்படி கிறிஸ்தவர்களைக் கேட்டுக்கொள்கிறார்.
பிரெவோஸ்ட்டின் கருத்துக்களை நவீன காலத் தனிமை, குறிப்பாக இளைஞர்களிடையே காணப்படும் மேலோட்டமான தகவல் தொடர்புகளுடன் தொடர்புபடுத்தி காட்டிய மரியா கிரேசியா அவர்கள், நம்பிக்கையும் சமூகமும் சேர்ந்து தனிமைக்கும் தனிமனிதவாதத்திற்கும் ஒரு அர்த்தமுள்ள மாற்றாக அமைய முடியும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
