திருத்தந்தையின் பாதுகாப்புப் படையில் இணைந்த 28 இளம் வீரர்கள்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
மே 06, புதனன்று, சுவிஸ் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 28 புதிய வீரர்கள் தங்களை திருத்தந்தையின் பாதுகாப்புப் படையில் இணைத்துக் கொண்டு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
இந்த நிகழ்வின்போது, அப்பாதுகாப்புப்படையின் தளபதியான கிறிஸ்டோப் கிராஃப் அவர்கள், இந்த உறுதிமொழி ஏற்பு நிகழ்விற்கு வருகை புரிந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு நன்றி தெரிவித்ததுடன், திருத்தந்தையின் இந்த உடனிருப்பு பாதுகாப்புப் படையினருடனான அவரின் நெருக்கத்தை வெளிப்படுத்தும் அர்த்தமுள்ள அடையாளமாக விளங்குகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சுவிட்சர்லாந்தின் துர்காவ் மாநில அரசு மற்றும் திருஅவையின் பிரமுகர்கள், பிரதிநிதிகள் மற்றும் புதிய வீரர்களின் குடும்பத்தினரையும் தளபதி கிறிஸ்டோப் கிராஃப் அவர்கள் வரவேற்றார்.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட சுவிட்சர்லாந்து அதிபர் மற்றும் பிற குடிமைச்சமூக பிரதிநிதிகள் மற்றும் இராணுவ அதிகாரிகளை வரவேற்று திருத்தந்தை, புதிய சுவிஸ் வீரர்களின் குடும்பத்தினருக்குத் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டதுடன் அவர்களின் பணியைப் பாராட்டி அவர்களுக்குத் தனது அன்பையும் வாழ்த்துகளையும் வழங்கினார்.
மேலும் அவர்களின் இந்த பதவியேற்பு இளமைக்கால உற்சாகம், கடவுள் மீதான நம்பிக்கை மற்றும் திருஅவையின் மீதான அன்பு ஆகியவற்றில் வேரூன்றிய கடமையுணர்வை பிரதிபலிக்கிறது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.
சேவையின் ஆழமான அர்த்தத்தைப் பற்றிப் பேசிய தளபதி கிராஃப் அவர்கள், நவீன சமூகம் பெரும்பாலும் சேவையை பலவீனம் அல்லது கட்டுப்பாடு நிறைந்தாக தவறாகப் புரிந்துகொள்கிறது என்றும் மாறாக, உண்மையான சேவை என்பது ஒருவரது திறமைகளைப் பிறருக்காகப் பயன்படுத்துவதன் மூலம் அவர் வளர உதவுகிறது என்றும் கூறியுள்ளார்.
இயேசு கிறிஸ்துவை சேவையின் முன்மாதிரியாகச் சுட்டிக்காட்டிய தளபதி கிராஃப் அவர்கள், புனித பேதுருவின் வாரிசாகத் தனது பணியைச் சுதந்திரமாகச் செய்யும் திருத்தந்தையைப் பாதுகாப்பதே வீரர்களின் பணி என்பதையும் அவர்களுக்கு நினைவூட்டினார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
