தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை   (ANSA)

திருத்தந்தைக்கு மலாபோ பேராயரின் இதயப்பூர்வமான நன்றிச் செய்தி

கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும், நீதி, சகோதரத்துவம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்குமான தங்களது நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் எக்வடோரியல் கினியா மக்கள் புதுப்பித்துள்ளனர்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 23, வியாழன்று, எக்வடோரியல் கினியாவிற்கான திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் போது, மலாபோ நகரின் மைதானத்தில் இடம் பெற்ற திருப்பலிக்கு பிறகு, மலாபோ பேராயர் ஜுவான் ந்சுவே எட்ஜாங் மாயே அவர்கள் நிகழ்த்திய நன்றியுரை:

உங்களது திருத்தூதுப் பயணத்தின் வழியாக நாங்கள் பெற்றுக்கொண்ட அளப்பரிய அருளுக்காகவும் ஆசீர்வாதங்களுக்காகவும் இறைவனுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கின்றோம்.

கிறிஸ்துவை அடித்தளமாகக் கொண்ட ஒரு நாட்டைக் கட்டியெழுப்புவதற்கும்; நீதி, சகோதரத்துவம் மற்றும் அமைதியை மேம்படுத்துவதற்குமான தங்களது நம்பிக்கையையும் அர்ப்பணிப்பையும் மீண்டும் எங்கள் மக்கள் புதுப்பித்துள்ளனர்.

நற்செய்தி எனும் விதையை விதைத்து, அதன் மூலம் எங்களது கிறிஸ்தவ அடையாளத்தை உருவாக்கிய முதல் மறைப்பணியாளர்கள் மற்றும் நற்செய்தி அறிவிப்பாளர்களின் பணிகளை நாங்கள் நன்றியுடன் அங்கீகரிக்கிறோம். இன்று, ஒரு திருஅவையாக, ஒப்புரவு (reconciliation), மனித மாண்பு மற்றும் பொது நலனுக்காக உழைப்பதற்கான எங்களது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.

நாங்கள் நற்செய்தியின் உண்மையான சாட்சிகளாகத் தொடர்ந்து திகழவும், குறிப்பாக ஏழைகளுக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் பணியாற்றிடவும் உங்களது ஆசீர்வாதத்தை வேண்டுகிறோம். எங்களது நாடு  கிறிஸ்துவுக்குள் நம்பிக்கை,  உண்மை மற்றும் அன்பின் நிலமாகத் தொடர்ந்து வளர வேண்டும் என்று அன்னை மரியாவின் பாதுகாப்பில் எங்களை ஒப்படைக்கிறோம்.

ஆண்டவர் நமக்குச் செய்தவை பெரியவை; எனவே நாம் மகிழ்ச்சி கொள்கிறோம்!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2026, 08:30