திருத்தந்தையை வரவேற்கும் இறைமக்கள் திருத்தந்தையை வரவேற்கும் இறைமக்கள்   (ANSA)

லுவாண்டா பாத்திமா அன்னை பங்குத்தளத்தில் திருத்தந்தைக்கு வரவேற்பு!

லுவாண்டா பாத்திமா அன்னை பங்குத்தளத்தைச் சார்ந்த இறைமக்கள், திருத்தந்தைக்கும் அவரது குழுவினருக்கும் தங்களின் நெஞ்சார்ந்த நன்றியையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி வரவேற்கின்றனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 20, திங்களன்று லுவாண்டாவில் உள்ள பாத்திமா அன்னை பங்குத் தளத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், இருபால் துறவியர் மற்றும் மேய்ப்புப்பணி பணியாளர்களுடனான சந்திப்பின் போது அந்நாட்டு ஆயர் பேரவையின் தலைவரும், சௌரிமோவின் பேராயருமான ஜோஸ் மானுவல் இம்பாம்பா அவர்கள் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு வழங்கிய வரவேற்புரை:

திருத்தந்தை அவர்களே,

லுவாண்டாவில் உள்ள பாத்திமா அன்னை பங்குத்தளத்திற்கு உங்களை நாங்கள் மனமகிழ்வுடன் வரவேற்கிறோம். உங்களது மேய்ப்புப்பணி பராமரிப்பிற்காகவும், எங்களுக்கு ஆறுதலையும் ஞானத்தையும் வழங்குவதற்காக எங்களிடையே வருகை புரிந்ததற்கும் நன்றி கூறுகிறோம். உங்களது குழுவினரையும் நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம்.

தங்களின் இந்த வருகை, அங்கோலாவின் அமைதிப் பாதையை ஆசீர்வதித்த புனித இரண்டாம் ஜான் பால் மற்றும் கிறிஸ்துவின் மீதான அர்ப்பணிப்பால் வாழ்வை அழகாக்க அழைப்பு விடுத்த பதினாறாம் பெனடிக்ட் ஆகியோரின் உன்னத நினைவுகளை எம் மனதில் மீண்டும் மலரச் செய்கிறது. இதனால் ஈர்க்கப்பட்டு, ஆயர்கள், அருள்பணியாளர்கள், துறவியர் மற்றும் மறைக்கல்வி ஆசிரியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய எமது திருஅவையானது தைரியத்துடன் அனைத்து மக்களுக்குமான தனது பணியைத் தொடர்ந்து ஆற்றிவருகிறது.

உரையாடல் மற்றும் ஒற்றுமையில் நாம் வளர்ந்து வருவதைக் குறிக்கும் வகையில் பிற கிறிஸ்தவ சமூகங்கள் மற்றும் இஸ்லாமிய சமூகத்தின் பிரதிநிதிகளும் நம்முடன் இணைந்துள்ளனர். இளைஞர்களை உருவாக்குவதிலும், எமது பணியாளர்களை வலுப்படுத்துவதிலும் எமது திருஅவை அர்ப்பணிப்புடன் தனது பணியைத் தொடர்கிறது.

நாங்கள் ஒரு துடிப்பான மற்றும் நம்பிக்கை உள்ள திருஅவையாக இருக்க விரும்புகிறோம். உங்களது கனிவான உள்ளத்திற்கு நன்றி. எங்களது செபங்களையும், உங்களுடன் இணைந்து பயணிப்பதற்காக‌ நாங்கள் தயார்நிலையில் இருப்பதையும் உங்களிடம் உறுதிப்படுத்துகிறோம். எங்களது இல்லத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஏப்ரல் 2026, 11:15