திருத்தந்தையின் இத்தாலியப் பயணத் திட்டம்!
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
இத்தாலி நாட்டின் விடுதலை தினமான ஏப்ரல் 25, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் இத்தாலியின் பல்வேறு நகரங்களுக்கு மேற்கொள்ளவிருக்கும் மேய்ப்புப்பணிப் பயணங்கள் குறித்த அறிவிப்பைத் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ளது.
மே 8 , வெள்ளியன்று, திருத்தந்தை தனது பயணத்தை பொம்பெயி (Pompeii) மற்றும் நேப்பிள்ஸ் (Naples) ஆகிய நகரங்களில் தொடங்குகிறார் என்றும், இது அவர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாம் ஆண்டு நிறைவை முன்னிட்டு அமைகிறது என்றும் அச்செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.
பொம்பெயில், புனித பர்த்தலோ லோங்கோவால் (Bartolo Longo) நிறுவப்பட்ட புனித ஜெபமாலை அன்னை திருத்தலத்திற்கு அவர் வருகை தருகிறார் என்றும், அங்கு திருப்பலி நிறைவேற்றிய பிறகு, வழக்கமாக நடைபெறும் வரலாற்றுச் சிறப்புமிக்க 'மன்றாட்டுப் பிரார்த்தனையில்' திருத்தந்தை பங்கேற்று அதனை நிறைவேற்றி வைப்பார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
அதனைத் தொடர்ந்து அவர் நேப்பிள்ஸ் (Naples) நகருக்குப் பயணம் மேற்கொண்டு, அங்கிருக்கும் பெருங்கோவிலில் (Cathedral) அருள்பணியாளர்களையும் துறவிகளையும் சந்திப்பார் என்றும் குறிப்பிட்டுள்ள அச்செய்தித் தொடர்பகம், மேலும், புனித ஜனுவாரியுஸின் (Saint Januarius) புனித பண்டங்களை வணங்கிவிட்டு, பியாஸ்ஸா டெல் பிளெபிசிட்டோ (Piazza del Plebiscito) சதுக்கத்தில் கூடியிருக்கும் நம்பிக்கையாளர்களுக்குத் தனது வாழ்த்துக்களைத் தெரிவிப்பார் என்றும் கூறியுள்ளது.
அதன் பின்னர் மே 14, வியாழனன்று, திருத்தந்தை உரோமில் உள்ள சப்யென்சா (Sapienza) பல்கலைக்கழகத்திற்கு வருகை தருவார் என்று சுட்டிக்காட்டியுள்ள அச்செய்தித் தொடர்பகம், அதனைத் தொடர்ந்து, மே 23 சனிக்கிழமையன்று 'நெருப்பு நிலம்' (Land of Fires) என்று அழைக்கப்படும் அசெரா (Acerra) பகுதிக்குப் பயணம் மேற்கொள்வார் என்றும் இப்பகுதி கடுமையான சுற்றுச்சூழல் மாசுபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள இடமாகும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜூன் 20, சனிக்கிழமையன்று, திருத்தந்தை பாவியா (Pavia) நகருக்கு வருகை தருவார் என்றும், அங்கு புனித அகுஸ்தினாரின் புனிதப் பண்டங்கள் (Relics) பாதுகாக்கப்பட்டு வரும் இடத்திற்குப் பயணம் மேற்கொள்ளும் என்றும், பின்னர் புற்றுநோய் ஹேட்ரான் சிகிச்சைக்கான தேசிய மையத்திற்குச் (National Center for Oncological Hadrontherapy) சென்று, அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளையும் பணியாளர்களையும் சந்திப்பார் என்றும் அச் செய்தித் தொடர்பகம் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக , ஜூலை 4, சனிக்கிழமையன்று, திருத்தந்தை லம்பெடுசா (Lampedusa) தீவிற்குப் பயணம் மேற்கொண்டு, புலம்பெயர்ந்த மக்களுடன் தனது ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவார் என்றும், அதனைத் தொடர்ந்து, ஆகஸ்ட் மாதத்தில் அசிசி (Assisi) மற்றும் ரிமினி (Rimini) ஆகிய நகரங்களுக்குச் செல்ல அவர் திட்டமிட்டுள்ளார் என்றும் திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
