தேடுதல்

திருத்தந்தை திருத்தந்தை  

திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் பத்தாம் நாள் நிகழ்வுகள்

ஏப்ரல் 22, புதன்கிழமை இன்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் மலாபோவிலிருந்து மொங்கோமோவிற்கு செல்கிறார். அங்கு தூய அமல அன்னை பேராலயத்தில் திருப்பலி நிறைவேற்றியபின், திருத்தந்தை பிரான்சிஸ் தொழில்நுட்பப் பள்ளிக்கு வருகை தருகிறார். அதன்பின் மெங்கோமேயன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாட்டா (Bata) நகருக்கு புறப்பட்டுச் சென்று, பாட்டா சிறைச்சாலைக்கு வருகை தருகிறார்.

இம்மானுவேல் மரியான் – வத்திக்கான் 

திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆப்பிரிக்க நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் பத்தாம் நாளை இன்று ஏப்ரல் 22 ஆம் தேதி புதன்கிழமை தொடங்கியிருக்கிறார்.

காலை 8 மணிக்கு மலாபோவா சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு ஈக்குவடோரியல் கினியாவின் மற்றொரு முக்கியமான நகரமான மொங்கோமோவிற்கு (Mongomo) செல்கிறார்.

ஈக்குவடோரியல் கினியாவின் முக்கியமான நகரங்களில் ஒன்றான மொங்கோமோ நாட்டின் முக்கியமான நிலப்பகுதியான ‘ரியோ முனி’ (Rio Muni) பகுதியில், காபோன் நாட்டின் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இது ஃபேங் (Fang) இன மக்களின் தாயகமாகும். இந்நாட்டின் அதிபருடைய சொந்த ஊர் இது என்பதால், கடந்த சில ஆண்டுகளில் இந்த நகரம் மிகப்பெரிய உள்கட்டமைப்பு வளர்ச்சியை கண்டுள்ளது. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த நகரம், அகலமான சாலைகள், நவீன ஹோட்டல்கள் மற்றும் ஒரு பெரிய கோல்ஃப் மைதானம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இங்குள்ள மொங்கோமோ மைதானம் சர்வதேச தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் 2015 ஆம் ஆண்டு ஆப்பிரிக்க கோப்பை போட்டிகளை நடத்தியது குறிப்பிடத்தக்கது.

இங்கு கத்தோலிக்க திருஅவை என்பது வெறும் வழிபாட்டு இடமாக மட்டுமல்லாமல், ஒரு சமூக அடையாளமாகவும் உள்ளது. உள்ளூர் இளைஞர்களுக்கு கல்வி வழங்குதல், குருத்துவக் கல்லூரி, அரசு வசதிகள் குறைவாக இருக்கும் பகுதிகளில் ஏழைகளுக்கான மருத்துவம் மற்றும் சமூக நலத்திட்டங்களை திருஅவை மேற்கொள்கிறது. நவீன மாற்றங்களுக்கு மத்தியில் பாரம்பரிய விழுமியங்களை ஆன்மீகத்தோடு இணைப்பதில் திருஅவை முக்கிய பங்கு வகிக்கிறது.

காலை மணி 9:10 க்கு மொங்கோமோவின் அதிபர் ஒபியாங் நுகுமா சர்வதேச விமான நிலையத்துக்கு வந்துசேர்கிறார். இந்த விமான நிலையம் மொங்கோமோ நகரத்திற்கு அருகில் உள்ள மெங்கோமேயன் (Mengomyén) என்ற இடத்தில் அமைந்துள்ளது. இது 2012 ஆம் ஆண்டு ஈக்குவடோரியல் கினியாவின் சுதந்திர தினமான அக்டோபர் 12ஆம் தேதி அதிபர் தியோடோரோ ஒபியாங் நுகேமாவால் திறந்து வைக்கப்பட்டது.

காலை மணி 10:30 க்கு தூய அமல அன்னை திருத்தலத்தில் (Basilica of the Immaculate Conception)  திருப்பலி நிறைவேற்றுகிறார். இது மோங்கோமோவில் அமைந்துள்ள முக்கிய திருத்தலம் மட்டுமல்ல, மத்திய ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய திருத்தலங்களில் ஒன்றாகும். இந்த திருத்தலத்தின் கட்டுமானப் பணிகள் 2006  இல் தொடங்கப்பட்டுஇ டிசம்பர் 7, 2011 அன்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைக்கப்பட்டது. உரோமையிலுள்ள புனித பேதுரு பெருங்கோவிலின் வடிவமைப்பை இது நினைவூட்டுகிறது.  உள்ளே ஸ்பெயினின் செவில் நகரில் இருந்து கொண்டுவரப்பட்ட ‘எஸ்பரான்சா மகாரேனா’(Esperanza Macarena) சிலையின் நகல் ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இது முழுமையாக ஈக்குவடோரியல் கினியா அரசாங்கத்தின் நிதியுதவியுடன் கட்டப்பட்டது. இந்த திருத்தலம் ஒரு வழிபாட்டுத் தலம் மட்டுமல்லஇ ஈக்குவடோரியல் கினியாவின் அமைதி மற்றும் ஆன்மீக வளர்ச்சியின் அடையாளமாகவும் கருதப்படுகிறது.

தூய அமல அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றியபின் திருத்தந்தை அவர்கள் மதியம் மணி 12:30 க்கு “திருத்தந்தை பிரான்சிஸ் தொழில்நுட்பப் பள்ளிக்கு” (Esuela Tecnológica Papa Francesco) வருகிறார்.

திருத்தந்தை பிரான்சிஸ் தொழில்நுட்பப் பள்ளி (Pope Francis Technology School) அந்நாட்டின் கல்வி மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒரு முக்கியமான மைல்கல்லாகும். இது தூய அமல அன்னை திருத்தலத்திற்கு அருகிலேயே அமைந்துள்ளது. ஆப்பிரிக்க இளைஞர்களுக்கு நவீன தொழில்நுட்பம், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறைகளில் தரமான கல்வியை வழங்குவதற்காக இப்பள்ளி நிறுவப்பட்டது. மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தொழில்நுட்பத்தை மனிதநேயத்திற்கும், ஏழை எளியோரின் முன்னேற்றத்திற்கும் பயன்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்கள். எனவே அவரது இந்தச் சிந்தனையை கௌரவிக்கும் விதமாக இப்பள்ளிக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது.

திருத்தந்தை பிரான்சிஸ் தொழில்நுட்பப் பள்ளியில் சந்திப்பை முடித்தபிறகு, பிற்பகல் மணி 3:10 க்கு மெங்கோமேயன் சர்வதேச விமான நிலையத்திலிருந்து பாட்டா நகரத்திற்கு புறப்பட்டுச் செல்கிறார்.

பாட்டா, நாட்டின் மிகப்பெரிய நகரம் மற்றும் முக்கியமான துறைமுகமாகும். இது கினியா வளைகுடா (Gulf of Guinea) அருகில் அமைந்துள்ளது. ஸ்பானிய காலனித்துவ காலத்தில் ஒரு முக்கிய வர்த்தக துறைமுகமாக வளர்ச்சி பெற்றது. 1968 ஆம் ஆண்டு சுதந்திரத்திற்கு பிறகு நாட்டின் பொருளாதார மையமாக மாறியது. மேலும் இது நாட்டின் வர்த்தக மையமாக திகழ்கிறது. அழகான கடற்கரைகள்இ நவீன ஹோட்டல்கள் மற்றும் 'பாட்டா சுதந்திர சதுக்கம்' போன்றவை இந்நகரின் சிறப்பம்சங்கள். 

பிற்பகல் மணி 3:10 க்கு பாட்டா சர்வதேச விமான நிலையத்திற்கு திருத்தந்தை வந்திறங்குகிறார். பின்னர் மாலை மணி 4:50 க்கு பாட்டா சிறைச்சாலைக்கு வருகைபுரிகிறார். பாட்டா நகரில் அமைந்துள்ள இந்த சிறைச்சாலை, நாட்டின் முக்கிய தடுப்பு மையங்களில் ஒன்றாகும். இது பெரும்பாலும் உள்ளூர் குற்றவாளிகள் மற்றும் அரசியல் கைதிகளை அடைக்கப் பயன்படுத்தப்படுகிறது. நாட்டின் காலனித்துவ காலத்திற்குப் பிந்தைய வரலாற்றில், அரசியல் மாற்றங்கள் மற்றும் உள்நாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகளின் போது இந்தச் சிறைச்சாலை முக்கியப் பங்காற்றியுள்ளது. குறிப்பாக, 1979 இல் தற்போதைய ஜனாதிபதி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்தே இது பயன்பாட்டில் உள்ளது. சர்வதேச அமைப்புகள் (Human Rights Watch)  சிறையில் உள்ள மோசமான சுகாதார வசதிகள், இடநெருக்கடி மற்றும் கைதிகள் நடத்தப்படும் விதம் குறித்து பலமுறை கவலை தெரிவித்துள்ளன. 1982 இல் புனித இரண்டாம் ஜான் பால் வருகைக்குப் பிறகு, 44 ஆண்டுகள் கழித்து ஒரு திருத்தந்தை இங்கு வருவது சிறைக்கைதிகள் மற்றும் ஒட்டுமொத்த மக்களுக்கு ஒரு பெரிய ஆன்மீக ஆறுதலாக உள்ளது.

சிறைச்சாலை சந்திப்பிற்கு பிறகு, மாலை மணி 5:25 க்கு மார்ச் 7 குண்டு வெடிப்பு நினைவிடவிடத்திற்குச் சென்று, விபத்தில் உயிரிழந்தவர்களுக்காகச் செபித்து அஞ்சலி செலுத்துகிறார்.

2021 ஆம் ஆண்டு மார்ச் 7 ஆம் தேதி மதியம், பாட்டா நகரில் உள்ள ந்குவாந்தோமா (Nkuantoma) இராணுவ முகாமில் அடுத்தடுத்து ஐந்து மிகப்பெரிய வெடிப்புகள் நிகழ்ந்தன. இது அந்த நாட்டின் வரலாற்றில் ஒரு மிகச்சோகமான நிகழ்வாகும். அருகில் இருந்த விவசாய நிலத்தில் வைக்கப்பட்ட தீ, காற்று வீசியதால் இராணுவக் கிடங்கிற்குப் பரவி இந்த விபத்து நேரிட்டது. இராணுவ முகாமில் டைனமைட் மற்றும் வெடிபொருட்கள் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்ததே இதற்குக் காரணம் என்று அரசாங்கம் அறிவித்தது.

இந்த விபத்தில் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் மற்றும் 600-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான வீடுகள் முழுமையாகத் தரைமட்டமாயின. இந்த நினைவிடம் அந்தத் துயரமான நாளில் தங்களது உறவினர்களையும்,  உடைமைகளையும் இழந்த மக்களின் வலியைப் பிரதிபலிக்கிறது. விபத்திற்குப் பிறகு நாடு முழுவதும் மக்கள் காட்டிய ஒற்றுமையையும், மீட்புப் பணிகளில் ஈடுபட்டவர்களின் தியாகத்தையும் இது நினைவுபடுத்துகிறது. "பாட்டா மீண்டும் எழும்" என்ற நம்பிக்கையை மக்களுக்கு அளிக்கும் விதமாக இது ஒரு மறுவாழ்வு அடையாளமாகக் கருதப்படுகிறது.

மொங்கோமோவில் உள்ள தூய அமல அன்னை திருத்தலம் போலவே, இந்த நினைவுச் சின்னமும் இன்று ஈக்குவடோரியல் கினியா மக்களின் உணர்வுகளோடு கலந்த ஒரு புனிதமான இடமாக மாறியுள்ளது.

இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியபின், மாலை மணி 6:10 க்கு பாட்டா மைதானத்தில் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கங்களைச் சந்தித்து, அவர்களை ஊக்கப்படுத்தி, இறையாசீர் கொடுக்கிறார்.

அதன்பின்னர், இரவு மணி 7:40 க்கு பாட்டா விமான நிலையத்திலிருந்து மலாபோவிற்குப் புறப்படுகிறார். இரவு மணி 8:30 க்கு மலாபோ சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்குகிறார்.

இத்துடன் இன்றைய நாளுக்கான திருத்தந்தையின் பயணம் திட்டக் குறிப்பு நிறைவு பெறுகிறது. 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2026, 11:58