திருத்தந்தைக்கு எக்குவடோரியல் கினியா வழங்கும் சிறப்புமிக்க வரவேற்பு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 21, செவ்வாயன்று, திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தனது ஆப்பிரிக்கப் பயணத்தின் ஒரு பகுதியாக எக்குவடோரியல் கினியா நாட்டிற்கு வருகை தந்தபோது, அந்நாட்டின் தலைநகரான மலாபோவில் (Malabo) உள்ள அதிபர் மாளிகையில் அந்நாட்டு அதிபர் தியோடோரோ ஒபியாங் ங்குவேமா எம்பசோகோ அவர்கள் நிகழ்த்திய வரவேற்புரை:
எக்குவடோரியல் கினியாவின் இந்த ஆப்பிரிக்க மண்ணிற்கு உங்களை வரவேற்பதில் இந்நாட்டு மக்கள் பெருமிதம் கொள்கின்றனர். எங்களின் பாரம்பரிய விருந்தோம்பல் தங்களுக்குத் தாயகத்தில் இருப்பது போன்ற உணர்வைத் தரும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையுடனும், மட்டற்ற மகிழ்ச்சியுடனும் தங்களுக்கு எங்களது இதயபூர்வமான நல்வாழ்த்துகளைச் சமர்ப்பிக்கின்றோம்.
ஆப்பிரிக்க கண்டத்திற்கு நீங்கள் மேற்கொள்ளும் இந்த முதல் பயணம், ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மற்றும் அருள் நிறைந்த தருணமாகும். திருத்தந்தை இரண்டாம் ஜான் பால் அவர்களின் வருகையின் போது நிகழ்ந்தது போலவே, இன்றைய உங்கள் வருகையும் எங்களது நம்பிக்கையையும் கிறிஸ்தவ பக்தியையும் உறுதிப்படுத்தும் என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.
நெருக்கடிகளும் நிலையற்ற தன்மையும் நிறைந்த இந்த உலகில், திருஅவையின் தலைவராகிய உங்கள் வருகை, நம்பிக்கையையும் அமைதியையும் ஆன்மீக மறுமலர்ச்சியையும் கொண்டு வருகின்றது. கத்தோலிக்கப் பற்றுமிக்க எமது நாடு, உங்களது இந்த வருகையை எங்களின் உயிரோட்டமான நம்பிக்கைக்கு கிடைத்த அங்கீகாரமாகவே கருதி வரவேற்கிறது.
எக்குவடோரியல் கினியாவை உங்கள் இதயத்தில் நினைவுகூர்ந்து அன்பு செலுத்துவதற்காக எமது மனமார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிக்கிறோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
