மீட்பின் வாசல்: கடந்த காலத்தைத் தாண்டிய புதிய விடியல்

ஒரு மனிதனின் வாழ்க்கை அவனது கடந்த காலத் தவறுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை. சிறைச்சாலை என்பது ஒரு தண்டனைக் கூடமாக இல்லாமல், சுயசிந்தனைக்கும், கல்வி மற்றும் உழைப்பின் மூலம் தன்னைத்தானே செதுக்கிக்கொள்ளும் ஒரு புதிய தொடக்கத்திற்கான இடமாக மாற வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 22, புதனன்று, எக்குவடோரியல் கினியாவின் முக்கிய நிலப்பகுதியான 'ரியோ முனி' (Río Muni) மாநிலத்தின் பாட்டா நகரில் உள்ள சிறைச்சாலைக்கு சென்று அங்குள்ள கைதிகள் மற்றும் அதிகாரிகளை  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை அவர்கள் வழங்கிய உரை. இப்போது அவ்வுரைக்கு செவிமெடுப்போம்.

அன்புள்ள சகோதர சகோதரிகளே,

உங்கள் மனமார்ந்த வார்த்தைகளுக்கு நன்றி. இக்கட்டான சூழ்நிலைகளிலும் கூட, மனித மாண்பும் நம்பிக்கையும் ஒருபோதும் அழிந்துவிடாது என்பதை அவை நமக்கு நினைவூட்டுகின்றன.

ஒரு எளிய உண்மையை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே நான் இங்கு வந்துள்ளேன்: இறைவனின் அன்பிலிருந்து யாரும் விலக்கப்பட்டவர்கள் அல்ல. நம் ஒவ்வொருவருக்கும் ஒரு வரலாறு உண்டு, அதில் தவறுகளும் துயரங்களும் இருக்கலாம்; ஆனாலும், நாம் ஒவ்வொருவரும் இறைவன் பார்வையில் விலைமதிப்பற்றவர்கள். இயேசு இதனைத் தனது வாழ்க்கையின் மூலம் நமக்குக் காட்டினார். அவர் இறுதிவரை நம்மை அன்பு செய்தார்; மிகக் கடினமான இதயங்களையும் மாற்றக்கூடிய அன்பின் வலிமையை அவர் நமக்கு வெளிப்படுத்தினார்.

எனது பயணத்தின்போது, எக்குவடோரியல் கினியா கலாச்சாரம், நம்பிக்கை மற்றும் வலுவான சமூகக் கட்டமைப்புகளால் செழுமை பெற்றுள்ளதை நான் கண்டேன். நீங்களும் இந்த நாட்டின் ஒரு அங்கமே. நீதியானது, சமூகத்தைப் பாதுகாப்பதோடு மட்டுமல்லாமல், ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் நிலைநிறுத்துவதாக இருக்க வேண்டும்.

உண்மையான நீதி என்பது தண்டனை வழங்குவது மட்டும் அல்ல; மாறாக, சமூக நல்லிணக்கத்தை மீட்டெடுப்பதிலும், ஒரு மனிதனுக்கு மறுவாழ்வு அளித்து அவனது எதிர்காலத்தை மீண்டும் கட்டமைப்பதிலுமே அதன் முழுமை அடங்கியுள்ளது. இந்தப் பணி சிறைச்சாலைகளோடு மட்டும் முடிந்துவிடுவதில்லை, இது ஒட்டுமொத்த சமூகமும் இணைந்து செய்ய வேண்டிய ஒரு பணியாகும்.

தனிமை சூழ்ந்த இடமாகத் தோன்றினாலும், ஒரு சிறைச்சாலை என்பது சுயசிந்தனைக்கும், வளர்ச்சிக்கும் மற்றும் புதிய தொடக்கங்களுக்குமான இடமாக மாற முடியும். நீங்கள் மனித மாண்புடன் கல்வி பயிலவும், பணியாற்றவும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும். வாழ்க்கை என்பது கடந்த காலத் தவறுகளால் தீர்மானிக்கப்படுவதில்லை; மீண்டும் ஒருமுறை புதியதாகத் தொடங்குவதற்கும், ஒரு சிறந்த மனிதனாக உருவெடுப்பதற்கும் எப்போதும் ஒரு வாய்ப்பு உண்டு.

நீங்கள் தனியாக இல்லை. உங்கள் குடும்பத்தினர் உங்கள் மீது அன்பு கொண்டுள்ளனர்; உங்களுக்காகப் பலர் இறைவேண்டல் செய்து கொண்டிருக்கிறார்கள். நீங்கள் கைவிடப்பட்டதாக உணர்ந்தாலும், இறைவன் உங்களை ஒருபோதும் கைவிடுவதில்லை; திருஅவையும் எப்போதும் உங்களுடனேயே பயணிக்கும். நீங்கள் முன்னெடுக்கும் இந்த மனமாற்றமும், கனிவான நற்செயல்களும் உங்கள் நாட்டு இளைஞர்களுக்கு ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழும்; அவை அவர்கள் வாழ்வில் புதிய நம்பிக்கையைச் சுடர்விடச் செய்யும்.

இந்த மையத்தின் இயக்குனர், அதிகாரிகள் மற்றும் ஆன்மீகப் பணியாளர் ஆகியோர் ஆற்றி வரும் பணிக்காக நான் அவர்களுக்கு நன்றி கூறுகிறேன். பாதுகாப்பை உறுதி செய்வதோடு மட்டுமல்லாமல், மனிதாபிமானத்தோடும் அக்கறையுடனும் நீங்கள் செயல்படும்போது, கைதிகள் மீண்டும் சமூகத்தோடு உண்மையாக இணைவதற்கான சூழலை உருவாக்க உதவுகிறீர்கள்.

அன்பு சகோதர சகோதரிகளே, மன்னிப்பு வழங்குவதில் இறைவன் ஒருபோதும் சோர்வடைவதில்லை. கடந்த கால நிகழ்வுகள் உங்கள் நம்பிக்கையைப் பறிக்க அனுமதிக்காதீர்கள். ஒவ்வொரு புதிய நாளும் ஒரு புதிய தொடக்கமே. இரக்கத்தின் அன்னையான அன்னை மரியா, உங்களோடு இருந்து உங்களைப் பாதுகாப்பாராக. எனது செபங்களில் உங்களை நான் நினைவு கூர்வேன் என உறுதி அளிக்கிறேன். நீங்கள் மீண்டும் புதியதொரு வாழ்வைத் தொடங்க, ஆண்டவர் உங்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும், மனவலிமையையும் வழங்குவாராக. ஆமென். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2026, 09:54