தேடுதல்

பலவீனங்களை வலிமையாக்கும் அன்பு: திருத்தந்தை காட்டும் அறநெறிப் பாதை

கடவுள் நம்மை நாம் இருக்கும் நிலையிலேயே அன்பு செய்கிறார். அதே சமயம், நாம் நோயுற்ற நிலையிலேயே முடங்கிவிடாமல், குணம் பெற்று மேம்பட வேண்டும் என்பதே அவரது விருப்பம்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 21, செவ்வாயன்று, மலாபோவின் 'ஜீன் பியர் ஓலி' மனநல மருத்துவமனையில் உள்ள பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

மதிப்பிற்குரிய இயக்குநர் அவர்களே, அதிகாரிகளே, என் அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,

உங்கள் அன்பான வரவேற்பிற்கும், எழுச்சியூட்டும் பாடல் மற்றும் நடன நிகழ்வுகளுக்கும் நான் எனது ஆழமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மிக்க நன்றி!

மருத்துவமனைகளுக்கு நான் வருகை தரும் போதெல்லாம் என் உள்ளத்தில் முரண்பட்ட உணர்வுகள் எழுகின்றன: ஒருபுறம், நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் படும் துயரத்தைக் கண்டு என் மனம் வருந்துகிறது. மறுபுறம், மனித உயிரைக் காக்கும் உன்னதப் பணியில் அங்கே தினந்தோறும் அர்ப்பணிப்புடன் உழைப்பவர்களைக் கண்டு நான் வியப்பும் ஆறுதலும் அடைகிறேன். இங்கும் நான் அதே உணர்வுகளைத்தான் பெறுகிறேன்; ஆனால் இன்று இது உங்களுக்கும் பொருந்தும் என நம்புகிறேன் நம்மிடையே மகிழ்ச்சியே பிரதானமாகத் திகழ்கிறது. ஆண்டவரின் திருப்பெயரால் நாம் இங்கே இணைந்திருப்பதும், நலிவுற்ற உடல்நலம் கொண்டவர்கள் மீது நாம் காட்டும் கனிவான அக்கறையுமே இந்த மகிழ்ச்சியின் ஊற்றாகும்.

இப்போது நான் கேட்ட சில வார்த்தைகள் என் உள்ளத்தைத் தொட்டன. இயக்குநர் அவர்கள் இப்படிக் குறிப்பிட்டார்கள்: 'ஒரு சிறந்த சமூகம் என்பது தன் பலவீனங்களை மறைப்பதில் இல்லை; மாறாக, அந்தப் பலவீனங்களைச் சுற்றியும் அன்பைப் பொழிவதில்தான் இருக்கிறது.' ஆம், அது முற்றிலும் உண்மை. இது கிறிஸ்தவ வேர்களைக் கொண்ட ஒரு நாகரிகத்தின் அடிப்படைத் தத்துவமாகும். ஏனெனில், ஊனம் மற்றும் இயலாமை எனும் வடுக்களால் நசுக்கப்பட்டவர்களின் காயங்களை ஆற்றி, அவர்களின் இழந்த மாண்பை மீட்டெடுத்து, மனித வரலாற்றில் புதிய ஒளியை ஏற்றிடவே கிறிஸ்து இவ்வுலகிற்கு வந்தார்.

இருந்தபோதிலும், மீட்பர் நம்முடைய ஒத்துழைப்பு இன்றி அது தனிமனித அளவிலோ அல்லது சமூக அளவிலோ எதுவாக இருந்தாலும்  நம்மை மீட்க விரும்புவதுமில்லை, அவ்வாறு அவர் செய்வதில்லை. எனவே, நமது சகோதர சகோதரிகளை வெறும் வார்த்தைகளால் மட்டும் அன்பு செய்யாமல், செயல்களாலும் அன்பு செய்யுமாறு அவர் நம்மிடம் கேட்கிறார். இத்தகையதொரு நிறுவனம், இறைவனின் உதவியோடும் உங்கள் ஒவ்வொருவரின் அர்ப்பணிப்போடும், 'அன்பின் நாகரிகத்திற்கு' (Civilization of Love) ஓர் அடையாளமாகத் திகழ முடியும்.

திரு. பெட்ரோ செலஸ்டினோ அவர்கள், 'நாங்கள் எப்படியிருக்கிறோமோ, அப்படியே எங்களை நேசிப்பதற்காக உங்களுக்கு நன்றி' என்ற நெஞ்சைத் தொடும் வார்த்தைகளோடு தனது உரையை நிறைவு செய்தார். உங்களது இந்தச் சாட்சிய வாழ்விற்காக நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்! ஆம், கடவுள் நாம் எப்படியிருக்கிறோமோ, அப்படியே நம்மை அன்பு செய்கிறார். உண்மையில், நாம் எப்படியிருக்கிறோம் என்பதை அறிந்து நம்மை அன்பு செய்பவர் கடவுள் மட்டுமே; ஆனால், நாம் இப்படியே இருந்துவிட வேண்டும் என்பது அவரது எண்ணமல்ல!

இல்லை, நாம் எப்போதும் நோயுற்றவர்களாகவே இருக்க வேண்டும் என்று கடவுள் விரும்புவதில்லை; அவர் நம்மை குணப்படுத்த விரும்புகிறார்! நற்செய்தியில் இதனை நாம் மீண்டும் மீண்டும் காண்கிறோம். இயேசு நம்மை நாம் இருக்கும் நிலையிலேயே அன்பு செய்ய வந்தார், ஆனால் நாம் அதே நிலையில் நீடிக்காமல், நம் மீது அக்கறை கொண்டு நம்மை மேம்படுத்தவே அவர் விரும்புகிறார்.

ஒரு மருத்துவமனை, குறிப்பாக கிறிஸ்தவத் தூதுப்பணியைக் கொண்ட ஒரு நிறுவனம் என்பது, ஒரு மனிதன் எப்படியிருக்கிறாரோ அப்படியே அவரை வரவேற்று, அவரது பலவீனமான நிலையிலும் அவரை மதித்து, ஒரு முழுமையானப் பார்வையின் அடிப்படையில் அவர் குணமடைய உதவும் இடமாகும். இந்த ஆன்மீகப் பரிமாணம் மிகவும் இன்றியமையாதது; இயக்குநர் அவர்கள் இதனை வலியுறுத்திக் கூறியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

இறுதியாக, திரு. தார்சிசியோ அவர்களுக்கு அவரது கவிதைக்காக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்! இத்தகையதொரு சூழலில், ஒவ்வொரு நாளும் பல மறைவான 'கவிதைகள்' இயற்றப்படுகின்றன என்று நான் சொல்ல விரும்புகிறேன். அவை சொற்களால் கோர்க்கப்பட்டவை அல்ல; மாறாக, நீங்கள் ஒருவருக்கொருவர் காட்டும் சிறிய நற்செயல்கள், அக்கறை மற்றும் கனிவான உறவுகளால் உருவானவை.

இந்தக் கவிதையை முழுமையாக வாசிக்கக் கூடியவர் கடவுள் ஒருவரே. இந்தக் கவிதைதான் கிறிஸ்துவின் இரக்கமுள்ள இதயத்திற்குப் பெரும் ஆறுதலைத் தருகிறது. அன்பு நண்பர்களே, இந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் அனைவருக்கும், குறிப்பாகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கும், துணையின்றித் தனிமையில் வாடுபவர்களுக்கும் எனது அன்பையும் நெருக்கத்தையும் தெரிவியுங்கள்.

இங்கே இருக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் நோயாளிகள், நலவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த ஆசீர்வாதத்தை வழங்குகிறேன். உங்களை 'நோயாளிகளின் ஆரோக்கியம்' (Salus Infirmorum) என்று போற்றப்படும் அன்னை கன்னி மரியாவின் பாதுகாப்பில் ஒப்படைக்கிறேன்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2026, 13:18