தேடுதல்

முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை சந்திக்கும் திருத்தந்தை முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை சந்திக்கும் திருத்தந்தை   (ANSA)

நாசரேத்து இல்லத்தின் நிழலில்: அன்பும் அருளும் பொழியும் சந்திப்பு

முதியவர்கள் ஒரு இனத்தின் "ஞானத்தைப் பாதுகாப்பவர்கள்". எனவே அவர்களுக்கு உதவி செய்வதோடு மட்டுமல்லாமல், அவர்களுக்குச் செவிமடுப்பதன் அவசியத்தை அரசுக்கும் தன்னார்வலர்களுக்கும் நினைவூட்டுகிறது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 20, திங்களன்று, அங்கோலாவின் சௌரிமோ (Saurimo) நகரில் உள்ள முதியோர் இல்லத்தில் உள்ளவர்களை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை அவர்கள் வழங்கிய உரை. இப்போது அவ்வுரைக்கு செவிமெடுப்போம்.

மதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களே,

எனது அன்பிற்குரிய சகோதர சகோதரிகளே,

இந்த இல்லத்திற்கும், இதில் வாழும் அனைவருக்கும் அமைதி உண்டாவதாக! நம்பிக்கை செறிந்த உங்கள் அன்பான வரவேற்பிற்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். இது என் உள்ளத்தைத் நெகிழச் செய்தது. எனது இறைப்பணியை ஆற்றுவதற்கு  எனக்கு மிகப்பெரிய ஊக்கத்தையும் ஆறுதலையும் அளிக்கிறது. உங்கள் அனைவருக்கும் நன்றி!

நீங்கள் இந்த இடத்தை 'லார்' (Lar) என்று அழைப்பதைக் கேட்டு நான் வியப்படைந்தேன்; இதற்கு 'இல்லம்' என்று பொருள். இதற்காக நான் இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். நீங்கள் அனைவரும் இங்கு ஒரு குடும்பச் சூழலில், எவ்வளவு தூரம் இயலுமோ அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

இயேசு தனது நண்பர்களின் இல்லங்களில் தங்கியிருப்பதை மிகவும் விரும்பினார். கப்பர்நாகுமில் இருந்த பேதுருவின் வீட்டிற்கு அவர் சென்றதையும், அங்கு ஒரு நாள் பேதுருவின் மாமியாரைக் குணப்படுத்தியதையும் நற்செய்தி நூல்கள் நமக்கு எடுத்துரைக்கின்றன. மரியா, மார்த்தா மற்றும் இலாசர்  ஆகியோருடனான அவரது நட்பையும் அவை நமக்கு நினைவுபடுத்துகின்றன: பெத்தானியாவில் இருந்த அவர்களது இல்லத்தில், இயேசு ஒரே நேரத்தில் போதகராகவும், ஆண்டவராகவும், அதே சமயம் ஒரு குடும்ப உறுப்பினரைப் போன்ற நெருக்கத்துடனும் வரவேற்கப்பட்டார்.

ஆகவே, எனது அன்பார்ந்த நண்பர்களே, இயேசுவும் இந்த இல்லத்தில் உங்களோடு வாழ்கிறார் என்று நான் நம்புகிறேன். ஆம், நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, சகோதர சகோதரிகளாக ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ள முயலும்போதெல்லாம் அவர் உங்கள் மத்தியில் குடிகொள்கிறார். உங்களுக்குள் சிறு தவறுகளோ அல்லது மனக்கசப்புகளோ ஏற்படும்போது, நீங்கள் ஒருவரை ஒருவர் மன்னித்து, மீண்டும் ஒப்புரவாக முற்படும்போது அவர் உங்கள் நடுவில் இருக்கிறார். உங்கள் இதயங்கள் இணையும்போது, எளிய மனமும் தாழ்ச்சியும் செபமாக மாறும்போது, ஆண்டவர் உங்கள் மத்தியிலேயே வீற்றிருப்பார்!.

முதியோர் இல்லத்தில் உரை வழங்கும் திருத்தந்தை
முதியோர் இல்லத்தில் உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

முதியோர்களில் மிகவும் தேவையிலுள்ளோரின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் அங்கோலா நாட்டு அதிகாரிகளுக்கும், பணியாளர்களுக்கும் மற்றும் தன்னார்வலர்களுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். பலவீனமானவர்களைக் கவனித்துக் கொள்வது என்பது ஒரு நாட்டின் சமூக வாழ்வின் தரத்தைக் காட்டும் மிக முக்கியமான அடையாளமாகும். முதியவர்கள் என்பவர்கள் வெறும் உதவியை மட்டும் எதிர்பார்ப்பவர்கள் அல்ல; அவர்கள் ஒரு இனத்தின் ஞானத்தைப் பாதுகாப்பவர்கள். எனவே, அவர்களுக்கு உதவி செய்வதை விட, முதலில் அவர்களுக்குச் செவிமடுப்பது மிக அவசியமானது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.

அன்பு சகோதர சகோதரிகளே, உங்களோடு அமைந்த இந்தச் சந்திப்பின் நினைவுகளை நான் என்றும் என் இதயத்தில் சுமந்திருப்பேன். நாசரேத்தில் இருந்த தனது இல்லத்தை நம்பிக்கையாலும் அன்பினாலும் நிரப்பிய அன்னை மரியா, இந்த இல்லத்தையும் இந்தச் சமூகத்தையும் எப்போதும் அன்போடு வழிநடத்திப் பாதுகாப்பாராக! உங்கள் அனைவரையும் நான் ஆசீர்வதிக்கிறேன். ஆமென். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஏப்ரல் 2026, 12:54