உரோமில் உள்ள திருப்பீடத் தூதரகப் பயிற்சி நிறுவனத்தில் திருத்தந்தை உரோமில் உள்ள திருப்பீடத் தூதரகப் பயிற்சி நிறுவனத்தில் திருத்தந்தை  (ANSA)

திருப்பீடத் தூதரகக் கல்வி நிறுவனத்தின் 325-வது ஆண்டு நிறைவு

கல்விசார் பாடத்திட்ட மாற்றங்களை விட, ஒரு குருவின் உள்ளத்தில் ஏற்படும் 'தொடர்ச்சியான மனமாற்றமே' முக்கியமானது. பணிவு, கனிவு மற்றும் பிறருக்குச் செவிமடுத்தல் ஆகியவை குருத்துவப் பணியின் அடிப்படைப் பண்புகளாக இருக்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருஅவையின் உலகளாவிய தன்மையில் வேரூன்றியுள்ள இதன் வரலாறு, பல்வேறு பின்னணிகளைக் கொண்டிருந்தாலும், கிறிஸ்துவுக்குள் ஒற்றுமையை நிலைநாட்டப் பங்களிக்கும் அருள்பணியாளர்களின் ஒரு தொடர்ச்சியான பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கிறது என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 27, திங்களன்று, திருப்பீடத் தூதரகக் கல்வி நிறுவனத்தின் 325-வது ஆண்டு நிறைவையொட்டி அந்நிறுவனத்திற்கு வருகை தந்தபோது இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

சட்டம், அரசியல் மற்றும் பன்னாட்டு மொழிகள் சார்ந்த பாடத்திட்டங்களில் கொண்டுவரப்பட்ட கல்விசார் மாற்றங்களை விட, ஒரு குருவின் உள்ளத்தில் ஏற்படும் 'தொடர்ச்சியான மனமாற்றமே' மேலானது என்று குறிப்பிட்ட திருத்தந்தை, பணிவு, கனிவு, பிறருக்குச் செவிமடுத்தல் மற்றும் சகோதரத்துவத்தோடு பழகுதல் போன்ற நற்பண்புகள் ஒரு குருவின் பணியில் எப்போதும் நிறைந்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு வேண்டுகோள் விடுத்தார்.

மேலும் நிறுவனத்தின் வரலாற்றில் தடம் பதித்த புனிதர்களை எடுத்துக்காட்டிய திருத்தந்தை, தூதரகக் குருக்களை 'அமைதியின் தூதுவர்கள்' என்று அழைத்ததுடன், நல்லிணக்கத்திற்கான வாய்ப்புகள் குறையும் போதும், கிறிஸ்துவின் அமைதியை உலகிற்கு எடுத்துச் சொல்வதே அவர்களின் கடமை என்றும், இறை அருள் மனித வரலாற்றைச் சென்றடைய அவர்கள் ஒரு பாலமாகவும், ஊடகமாகவும் செயல்பட வேண்டும் என்றும் அவர்களை வலியுறுத்தினார்.

திருத்தூதரகத் தூதுவர் என்பவர் முதலில் ஒரு 'நல்ல மேய்ப்பராக' இருந்து, உண்மையின் உருவான கிறிஸ்துவை உலக நாடுகளுக்கு வெளிப்படுத்த வேண்டும் என்று கூறிய திருத்தந்தை, தூதரகப் பேச்சுவார்த்தைகள் தெளிவானதாகவும், எதார்த்த உண்மைகளை மறைக்காத நேர்மையான உரையாடலாகவும் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

திருத்தூதரகத் தூதுவரின் பணி கத்தோலிக்கத் திருஅவையைத் தாண்டி, ஒட்டுமொத்த மனித குடும்பத்திற்கும் விரிவடைய வேண்டும் என்று மொழிந்த திருத்தந்தை, ஒவ்வொரு மனிதரிடமும் உள்ள 'இறைவனின் சாயலைப்' பாதுகாக்கவும், நீதியை நிலைநாட்டவும் அவர்கள் பாடுபட வேண்டும் என்றும் கூறினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

28 ஏப்ரல் 2026, 13:02