வாழ்வுரிமையே அனைத்து உரிமைகளுக்கும் அடிப்படை

ஒருவர் கடுமையான குற்றம் செய்திருந்தாலும், அவர் தனது உள்ளார்ந்த மனித மாண்பை இழப்பதில்லை. தண்டனை என்பது ஒருவரைத் திருத்தி நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, உயிரைப் பறிப்பதாக இருக்கக் கூடாது: திருத்தந்தை

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கருவில் உருவானது முதல் இயற்கை மரணம் வரை ஒவ்வொரு உயிரும் புனிதமானது என்றும், அது பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், வாழ்வுரிமையே அனைத்து மனித உரிமைகளுக்கும் அடிப்படை, எனவே  மனித மாண்பை மதிக்கும் சமூகமே உண்மையான வளர்ச்சி பெற்ற சமூகமாகும் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 24, வெள்ளியன்று, இலினொய் (Illinois) மாநிலத்தில் இடம்பெற்ற மரண தண்டனை ஒழிக்கப்பட்டதன் பதினைந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், சிகாகோவில் உள்ள டிபால் (DePaul) பல்கலைக்கழகத்தில் கூடியிருந்தவர்களுக்கு வழங்கிய காணொளிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.

ஒருவர் கடுமையான குற்றம் செய்திருந்தாலும், அவர் தனது உள்ளார்ந்த மனித மாண்பை இழப்பதில்லை என்றும், தண்டனை என்பது ஒருவரைத் திருத்தி நல்வழிப்படுத்துவதாக இருக்க வேண்டுமே தவிர, உயிரைப் பறிப்பதாக இருக்கக் கூடாது என்றும் குறிப்பிட்ட திருத்தந்தை,  எனவேதான், மரண தண்டனை மனித மாண்பிற்கு எதிரானது என்பதால், அது முற்றிலும் தவிர்க்கப்பட வேண்டியது எனத் திருஅவை வலியுறுத்துகிறது என்று சுட்டிக்காட்டினார்.

இலினொய் மாநிலத்தில் 2011-ஆம் ஆண்டு மரண தண்டனையை ஒழிக்க எடுக்கப்பட்ட முடிவை நானும் உங்களோடு இணைந்து அங்கீகரிக்கிறேன் என்று கூறிய திருத்தந்தை, அமெரிக்காவிலும் உலகம் முழுவதிலும் மரண தண்டனையை ஒழிப்பதற்காகப் பாடுபடும் அனைவருக்கும் எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்தார்.

இறுதியாக மனித மாண்பைப் போற்றவும், நீதிக்காக உழைக்கவும் உங்கள் பணிகள் தூண்டுகோலாக அமையட்டும் என்று வாழ்த்திய திருத்தந்தை, இறைவனின் ஞானமும், மகிழ்ச்சியும், அமைதியும் உங்கள்மீது என்றும் பொழியட்டும் என்று கூறி தனது திருத்தூது ஆசீரை வழங்கி உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2026, 12:03