தேடுதல்

திருத்தந்தையின்  திருத்தூதுப் பயணத்தின் செய்தி திருத்தந்தையின் திருத்தூதுப் பயணத்தின் செய்தி   (ANSA)

திருத்தந்தையின் கேமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்கான திருத்தூதுப் பயணத்தின் செய்தி

கேமரூன் மக்கள் காட்டிய அன்பு, நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியான வரவேற்பிற்குத் திருத்தந்தை நன்றி தெரிவித்துள்ளார். சவால்களுக்கு மத்தியிலும் இயேசுவின் பிரசன்னத்திற்கு இதயத்தில் இடமளித்து, நாள்தோறும் புதுப்பிக்கப்பட வேண்டும் என அவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

வாழ்க்கைப் போராட்டங்களால் நாம் சோர்ந்து போகும் போதெல்லாம், இயேசு நம் அருகில் இருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். தீய சக்திகளை விட அவர் பெரியவர். நம்மைச் சூழ்ந்திருக்கும் பிரச்சனைகளுக்கிடையே அவர் நம் கையைப் பிடித்து, 'பயப்படாதே, நான் இருக்கிறேன்' என்று தைரியம் ஊட்டுகிறார். இந்த நம்பிக்கையே நம்மை மீண்டும் எழச் செய்கிறது. எதற்கும் அஞ்சாமல், தளராத உறுதியுடன் நாம் தொடர்ந்து பயணிக்கிறோம் என்று திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கேமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்கு தான் மேற்கொண்ட  திருத்தூதுப் பயணத்தின்போது தனது x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

 மேலும், உங்கள் அன்பான வரவேற்பிற்காகவும், நாம் இணைந்து பகிர்ந்துகொண்ட அந்த நம்பிக்கையின் தருணங்களுக்காகவும், மகிழ்ச்சியின் நினைவுகளுக்காகவும் காமரூன் (Cameroon) மக்களுக்கு நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் பதிவிட்டுள்ளார்.

ஆப்பிரிக்கா ஒட்டுமொத்த உலகிற்குமே மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையின் ஒரு மிகப்பெரிய கருவூலமாகும். அங்குள்ள இளைஞர்களும் ஏழை எளியோரும் இன்றும் கனவு காண்கிறார்கள்; அவர்கள் நம்பிக்கையை இழக்கவில்லை; தற்போதுள்ள நிலையை அப்படியே ஏற்றுக்கொண்டு அவர்கள் முடங்கிவிடவில்லை. அவர்கள் மீண்டும் எழுவதற்கும், பெரும் பொறுப்புகளை ஏற்பதற்கும், தங்களையே முன்வந்து அர்ப்பணிக்கவும் பேராவல் கொண்டுள்ளனர். மனித இதயத்தில் குடிகொண்டிருக்கும் இந்த 'முடிவில்லாதவற்றிற்கான ஏக்கம்' (Desire for the Infinite) என்பது, எந்தவொரு அரசியல் அல்லது கலாச்சாரத் திட்டத்தை விடவும் ஆழமான சமூக மாற்றத்தை உருவாக்கும் ஒரு சக்தியாகும் என்றும் தனது செய்தியில் தெரிவித்துள்ளார்.

நன்மை, நீதி, அமைதி, சகிப்புத்தன்மை மற்றும் ஒப்புரவு ஆகிய வழிகளை ஏற்கனவே தேர்ந்தெடுத்திருப்பவர்களை நான் மனதார ஊக்குவிக்க விரும்புகிறேன் என்றும், அதேவேளையில், சமூகத்தின் இணக்கமான மற்றும் சகோதரத்துவ வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் எதிர்மறைப் பாதைகளைத் தேர்ந்தெடுப்பவர்கள், தங்கள் மனதை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று நல்மனம் கொண்ட கோடிக்கணக்கான நம்பிக்கையாளர்களுடன் இணைந்து நானும் அழைப்பு விடுக்கிறேன் என்றும் x தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 ஏப்ரல் 2026, 12:31