நிறைவாழ்வுக்கு வழிநடத்தும் நல்ல ஆயன் இயேசு
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
போலி வழிகாட்டிகளைப் போலன்றி, இயேசு நமது சுதந்திரத்தையோ மகிழ்ச்சியையோ பறிப்பதில்லை என்றும், அவர் நமது மனச்சான்றைப் ஒளிர்விக்கவும், நமது மகிழ்ச்சியை அதிகரிக்கவும், நமக்கு அபரிமிதமான வாழ்வைத் தரவுமே வருகிறார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.
ஏப்ரல் 26, ஞாயிறன்று, புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான நம்பிக்கையாளர்களுக்கு வழங்கிய அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியில் இவ்வாறு திருத்தந்தை கூறினார்.
இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை நல்ல ஆயராகவும் ஆட்டுத் தொழுவத்தின் வாயிலாகவும் வெளிப்படுத்துகிறார் என்று மொழிந்த திருத்தந்தை, திருடர்களைப் போல் அழிப்பதற்கல்ல, மாறாகத் தம் ஆடுகளோடு உண்மையான உறவு கொள்ளவே அவர் வருகிறார் என்றும், அவர் நம் ஒவ்வொருவரையும் பெயர் சொல்லி அழைப்பதுடன், நம் காயங்களைக் குணப்படுத்தி, நாம் வழிதவறும்போது தேடி வந்து வழிநடத்துகிறார் என்றும் எடுத்துரைத்தார்.
மேலும் நல்ல ஆயனாகிய ஆண்டவரிடம் நம்பிக்கை வைப்பவர்கள் எதற்கும் அஞ்சத் தேவையில்லை என்றும், ஏனெனில், அவருடைய வழி நம்மை முழுமையான நிறைவிற்கு இட்டுச் செல்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.
நம் உள்ளத்திற்குள் எதை அனுமதிக்கிறோம் என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் என நற்செய்தி நமக்கு அறிவுறுத்துகிறது என்று மொழிந்த திருத்தந்தை, நம் சுதந்திரத்தைப் பறிக்கும் நபர்கள், கெட்ட எண்ணங்கள் மற்றும் அர்த்தமற்ற வாழ்க்கை முறை எனப் பல 'திருடர்கள்' நம் மகிழ்ச்சியைத் திருடக்கூடும். அதோடு, அநீதி, வன்முறை மற்றும் இயற்கையைச் சுரண்டுவது போன்ற செயல்களும் உலகத்தின் அமைதியைப் பறிக்கின்றன என்றும் சுட்டிக்காட்டினார்.
நம் வாழ்வை இன்று வழிநடத்துவது யார்? நமக்குத் தீமை விளைவிக்கும் காரியங்கள் நம் உள்ளத்திற்குள் நுழைய நாம் அனுமதித்துவிட்டோமா? என்ற கேள்விகளை நம்மை நாமே கேட்டுக்கொள்ளவும் திருத்தந்தை அழைப்புவிடுத்தார்.
நல்ல ஆயனாகிய இயேசுவின்மீது நம்பிக்கை வைக்க இன்றைய நற்செய்தி நமக்கு அழைப்பு விடுக்கிறது என்று கூறிய திருத்தந்தை, அந்த நல்ல ஆயனாகிய ஆண்டவர் எப்போதும் நம்மை வாழ்வு, அமைதி மற்றும் நிலையான மகிழ்ச்சியை நோக்கியே வழிநடத்துகிறார் என்றும் கூறி தனது அல்லேலூயா வாழ்த்தொலிச் செய்தியை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
