கர்தினால் மார்செல்லோ செமெராரோ கர்தினால் மார்செல்லோ செமெராரோ  

புதிய மறைசாட்சிகளுக்கு அங்கீகாரம்: திருத்தந்தையின் அரசாணை

1936-ஆம் ஆண்டு ஸ்பெயின் உள்நாட்டுப் போரின்போது, கத்தலோனியா மாநிலத்தின் பல்வேறு இடங்களில் விசுவாசத்திற்காகக் கொல்லப்பட்ட நாற்பத்தொன்பது நபர் களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ஆணைகளுக்கு திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

நாற்பத்தொன்பது தனிநபர்களின் வீரத்துவ பண்புகளையும், கத்தோலிக்க விசுவாசத்தின் மீதான அவர்களது பற்றுதலையும் அங்கீகரித்து, அவர்களுக்கு புனிதர் பட்டம் வழங்கும் பணியை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்லும் ஆணைகளுக்கு  திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார் .

ஏப்ரல் 27 , திங்களன்று, புனிதர் பட்ட படிநிலைகளுக்குரிய திருப்பீடத் துறையின் தலைவரான கர்தினால் மார்செல்லோ செமெராரோ அவர்களைத் திருப்பீடத்தில் சந்தித்தபோது இந்த ஒப்புதலை திருத்தந்தை வழங்கியுள்ளார் .

இவ்வாறு அங்கீகரிக்கப்பட்டவர்களில், இறை ஊழியர் ஸ்தனிஸ்லா ஓர்டேகா கார்சியா (Stanislao Ortega García - மற்றும் அவரது 48 தோழர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரும் புனித கபிரியேல் கிறிஸ்தவக் கல்விச் சகோதரர்கள் சபையைச் (Institute of the Brothers of Christian Instruction of Saint Gabriel) சேர்ந்தவர்கள் ஆவர். இவர்களுடன் மறைமாவட்ட அருள்பணியாளரான இமானுவேல் பெரெங்குர் குளுசெல்லா (Emanuel Berenguer Clusella) என்பவரும் அடங்குவர். இவர்கள் அனைவரும் 1936-ஆம் ஆண்டு ஜூலை முதல் நவம்பர் வரையிலான காலக்கட்டத்தில், ஸ்பெயின் (Spain) கத்தலோனியா (Catalonia) மாநிலத்தின் பல்வேறு இடங்களில் கொல்லப்பட்டனர்.

மேலும்  மூன்று இறை ஊழியர்களின் வீரத்துவ நற்பண்புகளை அங்கீகரிக்கும் அரசாணைகளுக்கும் திருத்தந்தை ஒப்புதல் அளித்தார். முதலாவதாக, இத்தாலியின் டெர்னி நகரில் 1605-இல் கத்தரீனா ட்ரமாசோலி என்ற பெயரில் பிறந்த மரியா எலெட்டா (மரியாவின் இயேசு), காலணி அணியாத கர்மேல் சபையில் இணைந்து ஆன்மீகப் பணியாற்றினார். இவர் 1663-இல் செக் குடியரசின் பிராக் நகரில் காலமானார்.

இரண்டாவதாக, நெதர்லாந்தின் அப்பெல்டூர்னில் 1897-இல் தெரசா இசல்தைக் என்ற பெயரில் பிறந்த மரியா தெரசா, இயேசுவின் திவ்விய இருதயக் கர்மேல் சகோதரிகள் சபையில் இணைந்து பணியாற்றினார். இவர் அமெரிக்காவிற்கு மறைப்பணியாளராகச் சென்று, 1926-இல் தனது 29-வது வயதிலேயே செயின்ட் லூயிஸ் நகரில் காலமானார்.

மூன்றாவதாக, இத்தாலியின் ஜெனோவா நகரில் 1870-இல் பிறந்த மரியா ரபேலா டி ஜியோவன்னா, புனித பிரான்சிஸ் பாவோலா மூன்றாம் நிலைச் சகோதரிகள் சபையை நிறுவி, எளியவர்களுக்காகத் தொண்டாற்றினார். இவர் 1933-இல் தனது சொந்த ஊரான ஜெனோவாவிலேயே காலமானார். இந்த மூவரின் சீரிய வாழ்வும் தற்போது புனிதர் பட்டப் படிநிலையின் முக்கிய மைல்கல்லாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அரசாணைகளின் வெளியீடு, அந்தந்த புனிதர் பட்டமளிப்புச் செயல்பாடுகளில் அடுத்தகட்ட முன்னேற்றத்தைக் குறிக்கிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2026, 12:49