அஞ்சலி செலுத்தும் மக்கள் அஞ்சலி செலுத்தும் மக்கள்  

கொலம்பியா வன்முறை: அமைதி நிலவ திருத்தந்தை வேண்டுகோள்!

தென்மேற்கு கொலம்பியாவில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து திருத்தந்தை தனது ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

தென்மேற்கு கொலம்பியாவில் அதிகரித்து வரும் வன்முறை குறித்து தனது கவலையை வெளிப்படுத்திய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள்,  அவ்வன்முறையினால் ஏற்படும் உயிரிழப்புகளுக்குத் தனது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டதுடன் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்வதாகவும் கூறினார்.

ஏப்ரல் 29, புதனன்று, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் இடம்பெற்ற புதன் பொது மறைக்கல்வி உரையின்போது ஸ்பானிஷ் மொழி பேசும் மக்களிடம் உரையாற்றியபோது இவ்வாறு மொழிந்த திருத்தந்தை, வன்முறையைக் கைவிட்டு அமைதி வழியில் பயணிக்க அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்தார்.

மே 31-ஆம் தேதி நடைபெறவுள்ள கொலம்பிய அதிபர் தேர்தலுக்கு  முன்னதாக அந்நாட்டில் வன்முறைச் சம்பவங்கள் தீவிரமடைந்துள்ளன. ஏப்ரல் 24 முதல் பொதுமக்களையும் இராணுவ நிலைகளையும் இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட ஏறத்தாழ 26 தாக்குதல்களில் பலர் உயிரிழந்துள்ளனர். 2016 அமைதி ஒப்பந்தத்தை ஏற்க மறுத்து பிரிந்து சென்ற கொலம்பியாவின் புரட்சிகர ஆயுதப் படைகளின் ஒரு பிரிவான FARC-EMC என்ற அதிருப்திக் குழுவே இந்தத் தாக்குதல்களுக்குக் காரணம் என்று அந்நாட்டு அதிகாரிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.

காலி மற்றும் போபயான் நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையில் நடத்தப்பட்ட கோரமான குண்டுவெடிப்பில் 21 பேர் பலியாகினர். இது அண்மைக்கால வன்முறைச் சம்பவங்களில் மிகவும் கொடூரமான ஒன்றாகக் கருதப்படுகிறது. நடைபெறவுள்ள தேர்தலில் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்தவும், தங்களின் ஆயுத பலத்தை அரசுக்குக் காட்டவுமே இக்குழுவினர் இத்தகைய தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவான் மோர்டிஸ்கோ (Iván Mordisco) என்று அழைக்கப்படும் நெஸ்டர் வேரா என்பவரால் வழிநடத்தப்படும் இந்த FARC-EMC குழு, காக்கா மற்றும் வல்லே டெல் காக்கா (Cauca and Valle del Cauca) போன்ற பகுதிகளில் செயல்பட்டு வருகிறது. இப்பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வழிகள் மற்றும் சட்டவிரோத சுரங்கங்களைக் கட்டுப்படுத்துவதற்காக இந்தக் குழு தீவிரமாகப் போட்டியிட்டு வருகிறது.

கடந்த 2023-ஆம் ஆண்டில் அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்கியபோதிலும், ஒரு பிரிவினர் 2024-இல் மீண்டும் ஆயுதமேந்திய மோதலில் ஈடுபடத் தொடங்கினர். இந்தக் குழு தங்களது கட்டுப்பாட்டை நிலைநாட்டவும், செயல்பாடுகளுக்கான நிதியைத் திரட்டவும் ட்ரோன்கள் (Drones), கார் வெடிகுண்டுகள், கடத்தல்கள் மற்றும் மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற உத்திகளைப் பயன்படுத்துகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 ஏப்ரல் 2026, 12:28