உறவுகளை வலுப்படுத்தி நற்செய்தியைப் பறைசாற்றுங்கள்!
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஏப்ரல் 17, வெள்ளியன்று கேமரூனில் பணியாற்றும் 250-க்கும் மேற்பட்ட துறவற சபைகள் மற்றும் கூட்டமைப்புகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் 'தேசிய உயர்மட்டத் துறவற சபைத் தலைவர்கள் மாநாட்டின்' ஒன்பது பேர் கொண்ட குழுவை திருத்தந்தை சந்தித்தார்.
அப்போது, பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் இளைஞர்கள், புலம்பெயர்ந்தோர் மற்றும் வன்முறையால் பாதிக்கப்பட்டோரிடையே அவர்கள் ஆற்றிவரும் தன்னலமற்ற சேவைகளைப் பாராட்டிய திருத் தந்தை மேலும், ஆயர்களுடனான ஒருமைப்பாடு மற்றும் துறவற வாழ்வின் தனித்துவத்தைப் பேணுவதில் அவர்கள் காட்டும் அக்கறை குறித்துத் கலந்துரையாடினார் என்று திருப்பீடச் செய்தித் தொடர்பகம் தெரிவித்துள்ளது.
துறவிகளுக்கும் மறைமாவட்ட அருள்பணியாளர்களுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய திருத்தந்தை, ஆயர்களுக்கும் துறவிகளுக்கும் இடையிலான சுமூகமான உறவுகளைப் பற்றிக் கூறும்'Mutuae Relationes எனப்படும் ஆவணத்தைப் புதுப்பிக்கவும், ஒவ்வொரு மறைமாவட்டத்திலும் பல்வேறு அருங்கொடைகளை ஊக்குவிக்கவும் ஆயர் மாமன்றம் முன்மொழிந்ததை எடுத்துக்காட்டினார்.
பகிரப்பட்ட செவிமடுத்தல் மூலம் முறையான பயிற்சியை வழங்கவும், தியாகம், சேவை மற்றும் சமூக வாழ்விற்காகப் புகுமுகப் பயிற்சியாளர்களைத் தயார் செய்யவும் திருத்தந்தை வலியுறுத்தினார்.
மதங்களுக்கிடையிலான சகவாழ்வு மற்றும் இளைஞர் பணி போன்ற சவால்களைக் குறிப்பிட்ட அவர், மறைமாவட்டங்களுடன் இணைந்து செயல்படுமாறு அவர்களைக் கேட்டுக்கொண்டார். இறுதியாக, நற்செய்தியைத் துணிச்சலுடன் வாழவும், குறிப்பாக ஏழைகள் மற்றும் நம்பிக்கை தேவைப்படுபவர்கள் மத்தியில் அதனைப் பறைசாற்றவும் துறவியருக்கு அழைப்பு விடுத்தார்.
இறுதியாக திருத்தந்தை தனது திருத்தூது ஆசீரை துறவியர்களுக்கு வழங்கியபின், அனைவரும் இணைந்து 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே' என்கிற இயேசு கற்றுக் கொடுத்த செபத்தினை செபித்தனர்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
