திருத்தந்தையின் திருத்தூதுப்பயணத்தைப் பாராட்டி இத்தாலியத் தலைவர் கடிதம்
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
ஆப்பிரிக்காவிற்கான தனது திருத்தூதுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துத் திரும்பிய திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்களுக்கு, இத்தாலியக் குடியரசுத் தலைவர் செர்ஜியோ மட்டரெல்லா அவர்கள் கடிதம் வழியாகத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இத்தாலியக் குடியரசின் சார்பாகவும் தனிப்பட்ட முறையிலும் மிகவும் அன்புடன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தை இளைஞர்களிடையே பகிர்ந்த அமைதி மற்றும் சகோதரத்துவச் செய்திகள் மக்கள் மனங்களில் ஆழமாகப் பதிந்துள்ளன என்றும், இது உலக நாடுகள் அனைத்தும் நல்லிணக்கப் பாதையை உறுதியுடன் பின்பற்ற வேண்டிய கடமையை நினைவூட்டுகிறது என்றும் தனது கடிதத்தில் குடியரசுத் தலைவர் மட்டரெல்லா அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இக்கடிதத்தில் திருத்தந்தையின் ஆப்பிரிக்கப் பயணம், அக்கண்டத்தின் முழுமையான விடுதலைக்கும், கூட்டுறவு மனப்பான்மையுடன் கூடிய நிலையான பொருளாதார வளர்ச்சிக்கும் விடுக்கப்பட்ட ஒரு வலுவான வேண்டுகோள் என்று குறிப்பிட்டுள்ளார்.
திருத்தந்தையின் உன்னதமான திருத்தூதுப் பணி தொடர்ந்து பயனுள்ள வகையில் அமைய தான் மனமார வாழ்த்துவதாக கூறி தனது கடிதத்தை குடியரசுத் தலைவர் மட்டரெல்லா அவர்கள் நிறைவு செய்துள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
