தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

கல்வி என்பது இதயங்களை உருவாக்குவதே!

பள்ளிகளில் ஆசிரியர்கள் மேற்கொள்ளும் அமைதியான மற்றும் அர்ப்பணிப்புள்ள பணி, இளைஞர்களின் ஆளுமை வளர்ச்சிக்கு அத்தியாவசியமானது. ஆன்மீக விழுமியங்கள் மனித வாழ்வின் அடிப்படை என்பதால், அவற்றைக் கல்வியிலிருந்து பிரிக்க முடியாது.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

கத்தோலிக்கக் கல்வி பண்பாட்டு அறிவை வளர்க்கிறது என்றும்,  உங்களின் விவிலியப் போதனைகள், மாணவர்களின் சுதந்திரத்தை மதிக்கும் அதேவேளை, அவர்கள் கிறிஸ்துவையும் உண்மையையும் கண்டடையத் துணைபுரிகின்றன என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறினார்.

ஏப்ரல் 25, சனிக்கிழமையன்று, கத்தோலிக்க ஆசிரியர்களை புனித ஆறாம் பவுல் அரங்கத்தில் சந்தித்தபோது இவ்வாறு கூறிய திருத்தந்தை, கல்வி நிறுவனங்களில் அவர்கள் மேற்கொள்ளும் அர்ப்பணிப்பு மிகுந்த பணிகளுக்கு நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

கத்தோலிக்க ஆசிரியர்கள் செய்யும் இந்தப் பணி, எதிர்காலச் சந்ததியினரின் ஆளுமை வளர்ச்சிக்கு மிக முக்கியமானது என்றும், ஆன்மீக விழுமியங்கள் மனித வாழ்வின் அடிப்படை என்றும் எடுத்துக்காட்டிய திருத்தந்தை, அவற்றைக் கல்வியிலிருந்து பிரிக்கக் கூடாது என்று குறிப்பிட்டார்.

புனித அகுஸ்தினார் கூறுவது போல, இறைவனை அடையும் வரை மனித மனம் அமைதி கொள்வதில்லை என்றும், இந்தத் தேடலே சமூகத்தில் அமைதியையும் நல்லிணக்கத்தையும் உருவாக்குகிறது என்றும் திருத்தந்தை தெரிவித்தார்.

மேலும் இளைஞர்களின் அக வளர்ச்சியைத் தூண்டும் ஒரு உந்துதளமாக விளங்கும் உங்கள் பணி, கல்வித் துறையில் ஒரு மிக முக்கியமான கூட்டுமுயற்சியாகும் என்று குறிப்பிட்ட திருத்தந்தை, கல்வி என்பது வெறும் அறிவு மட்டுமல்ல; அது உண்மையை நேசிக்கும், சுதந்திரத்தை மதிக்கும் மற்றும் சிந்திக்கும் திறன் கொண்ட இதயங்களை உருவாக்குவதாகும் என்றும், இங்குதான் நம்பிக்கையும் அறிவும்  இணைந்து செயல்படுகின்றன என்றும் தெரிவித்தார்.

புனித ஜான் ஹென்றி நியூமேனின் 'இதயம் இதயத்தோடு பேசுகிறது' என்ற கருப்பொருள், இன்றைய உலகின் இரைச்சல்களுக்கு மத்தியில் மாணவர்கள் தங்கள் உள்ளார்ந்த குரலைக் கேட்க வழிகாட்டுவதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது என்று திருத்தந்தை கூறினார். 

அதனைத் தொடர்ந்து பொறுமையும் அன்பும் நிறைந்த போதனையே மாணவர்களுக்குத் தேவை என்று சுட்டிக்காட்டிய திருத்தந்தை, அவர்களுக்குப் பதில்களை விட, அக்கறையுள்ள வழிகாட்டிகளே அவசியம் என்றும், உங்களின் செயல்முறை மற்றும் ஆர்வம், மாணவர் மத்தியில் உங்களுக்கு ஒரு நம்பகமான இடத்தை உருவாக்கித் தருகிறது என்றும் குறிப்பிட்டார்.

இறுதியாக இன்றைய சவால்களுக்கு மத்தியிலும், நம்பிக்கையையும் ஞானத்தையும் கட்டியெழுப்புபவர்களாக வாழ நீங்கள் அழைக்கப்படுகிறீர்கள் என்று கூறிய திருத்தந்தை, அவர்களின் பணியை மன உறுதியோடு தொடர ஊக்குவித்து, தனது திருத்தூது ஆசிரை வழங்கி தனது உரையை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 ஏப்ரல் 2026, 13:16