தேடுதல்

இருள் அகற்றும் அன்பு: ஒரு புதிய விடியலின் அழைப்பு

தனிமனிதர்கள் இல்லங்களிலும் சமூகங்களிலும் காட்டும் சிறிய அன்புச் செயல்கள், இருள் சூழ்ந்த சமுதாயத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் 'ஒளியாக' மாறும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 22, புதனன்று, எக்குவடோரியல் கினியாவின் மிகப்பெரிய நகரமான பாட்டாவில் உள்ள புகழ்பெற்ற பாட்டா மைதானத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை திருத்தந்தை லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை அவர்கள் வழங்கிய உரை: 

அன்பு இளைஞர்களே, குடும்ப உறுப்பினர்களே உங்கள் அனைவருக்கும் என் அன்பு கலந்த வாழ்த்துகள்!

உங்களின் அன்பான வரவேற்பிற்கும், துடிப்பான நம்பிக்கைக்கும் கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் வருகையும், புன்னகையும், பாடல்களும் கிறிஸ்துவே உங்கள் வாழ்வின் உண்மையான ஒளி என்பதைப் பறைசாற்றுகின்றன. எக்குவடோரியல் கினியா ஆற்றலும், கலாச்சாரமும், பாரம்பரியமும் நிறைந்த ஒரு இளைய தேசம்; நம்பிக்கையான ஒரு எதிர்காலத்தை நோக்கி கிறிஸ்துவைத் தனது வழிகாட்டும் ஒளியாகக் கொள்ள இந்நாடு அழைக்கப்படுகிறது.

உங்கள் நடனங்கள், குறியீடுகள் மற்றும் எளிய பொருட்கள்,உங்கள் வாழ்வைத் தாங்கி நிற்கும் ஆழமான விழுமியங்களைப் பிரதிபலிக்கின்றன: அவை ஒற்றுமை, சேவை, விருந்தோம்பல் மற்றும் மகிழ்ச்சி போன்றவை நீங்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டிய மற்றும் அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்ல வேண்டிய பொக்கிஷங்கள் ஆகும். திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் ஒருமுறை இந்தத் நாட்டிற்கு நினைவூட்டியது போல, நீங்கள் ஒருவருக்கொருவர் அன்பு, மரியாதை மற்றும் ஒப்புரவுடன் இணக்கமாக வாழ்ந்து, ஒவ்வொரு மனிதனின் மாண்பையும் நிலைநிறுத்த அழைக்கப்படுகிறீர்கள்.

நீங்கள் ஆற்றல்மிக்க சாட்சியங்களைப் பகிர்ந்துள்ளீர்கள். நீதியான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்புவதில் பொறுப்புணர்வு, கடின உழைப்பு மற்றும் மரியாதையின் முக்கியத்துவத்தையும், பணியிடங்களில் பெண்களின் மாண்பைப் பேணுவதன் அவசியத்தையும் அலிசியா (Alicia) நமக்கு நினைவூட்டினார். இறைவனின் அழைப்பை ஏற்று 'ஆம்' என்று சொல்வது பெரும் துணிச்சலை வேண்டி நின்றாலும், அது இதயத்திற்கு அளவற்ற பேரின்பத்தை வழங்குகிறது என்பதை பிரான்சிஸ்கோ மார்ட்டின் தனது வாழ்க்கைச் சாட்சியத்தின் மூலம் உணர்த்தினார். உங்களில் யாராவது குருத்துவ வாழ்விற்கோ அல்லது துறவற வாழ்விற்கோ அழைக்கப்படுவதாக உணர்ந்தால், கிறிஸ்துவைப் பின்தொடர அஞ்சாதீர்கள்; அவர் உங்களுக்கு வாழ்வின் நிறைவை அளிப்பதாக வாக்குறுதி அளிக்கிறார்.

உங்கள் வளர்ச்சியின் அடித்தளமாக விளங்குபவை குடும்பங்களே. நம்பிக்கையும் விழுமியங்களும் வேரூன்றும் இடமாக அவை திகழ்கின்றன. உங்கள் குடும்பங்களுக்காக இறைவனுக்கு நன்றி செலுத்தவும், ஒற்றுமையிலும் அன்பிலும் அவற்றை வலுப்படுத்தவும் நான் உங்களை ஊக்குவிக்கிறேன். திருமண வாழ்விற்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களே, இது ஒரு அழகான திருத்தூதுப் பணி என்பதை நினைவில் கொள்ளுங்கள்; இது இறைநம்பிக்கை மற்றும் வாழ்வின் மீதான திறந்த மனப்பான்மையுடன் கட்டமைக்கப்பட்ட அன்பு, நம்பிக்கை மற்றும் புனிதத்தை நோக்கிய தினசரி பயணமாகும்.

வாழ்வைப் பாதுகாப்பதன் அவசியத்தையும், மிகவும் நலிவுற்றவர்கள் மீது அக்கறை கொள்வதன் முக்கியத்துவத்தையும் விக்டர் ஆண்டோனியோவின் (Victor Antonio) சாட்சியம் நமக்கு நினைவூட்டியது. பொறுப்புணர்வு, இரக்கம் மற்றும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப அவரது வார்த்தைகள் நமக்கு அழைப்பு விடுக்கின்றன. வாழ்வை நேசித்து வரவேற்கும் குடும்பங்கள், அனைவருக்கும் ஒளியையும் நம்பிக்கையையும் தரும் ஊற்றுகளாக மாறுகின்றன.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் போதிப்பது போல, குடும்பம் என்பது இறைவனின் அன்பின் உயிருள்ள அடையாளமாகும். தியாகங்கள் தேவைப்பட்டாலும் கூட, நாம் நம் குடும்பங்களைப் போற்றிப் பாதுகாப்போம்.

அன்பு நண்பர்களே, கிறிஸ்துவின் அன்பிற்குச் சாட்சிகளாக நாம் திகழ்வோம். மற்றவர்களுக்கு, குறிப்பாகத் தேவையிலுள்ளவர்களுக்கு நம்மையே அர்ப்பணிப்பதில்தான் உண்மையான மகிழ்ச்சி அடங்கியுள்ளது. நம் இல்லங்களிலும் உறவுகளிலும் நாம் ஏற்றி வைக்கும் அன்பெனும் சிறு விளக்கு, ஒட்டுமொத்த சமுதாயத்தின் இருளையும் அகற்றி, ஒரு பெரும் மாற்றத்தைச் சமைக்கும் வல்லமை கொண்டது. எக்குவடோரியல் கினியாவிற்கும் இந்த உலகிற்கும் ஒளியாய் விளங்கும் கிறிஸ்து, நம்மை நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி வழிநடத்தும்படி, இந்தப் பணியில் நம்மை முழுமையாக அர்ப்பணிப்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 ஏப்ரல் 2026, 10:45