தேடுதல்

கிறிஸ்துவின் அன்பில் ஒன்றிணைந்து பயணிக்கும் சீடத்துவ வாழ்வு!

கிறிஸ்து எதையும் நம்மிடமிருந்து பறிப்பதில்லை, மாறாக அனைத்தையும் தருகிறார் என்ற நம்பிக்கையில், இளைஞர்கள் அஞ்சாமல் தங்கள் வாழ்வை அவரிடம் ஒப்படைக்க வேண்டும்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஏப்ரல் 20, திங்களன்று லுவாண்டாவில் உள்ள புனித பாத்திமா அன்னை பங்குத்தளத்தில் ஆயர்கள், அருள்பணியாளர்கள், திருத்தொண்டர்கள், இருபால் துறவிகள் மற்றும் மேய்ப்புப்பணிப் பணியாளர்களுடனான சந்திப்பின் போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் ஆற்றிய உரை: 

ஆயர்களே, அருள்பணியாளர்களே, துறவிகளே, சகோதர சகோதரிகளே!

உங்களைச் சந்திப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். உங்கள் அன்பான வரவேற்பிற்கு நன்றி. அங்கோலாவில் நற்செய்தியைப் பரப்புவதற்காக உழைத்த மற்றும் தொடர்ந்து உழைத்து வருகின்ற உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களது நற்செய்தி அறிவிப்புப் பணிக்காகவும், கிறிஸ்துவில் நம்பிக்கையை விதைப்பதற்காகவும், தேவையிலுள்ளோர் மீது நீங்கள் காட்டும் அன்பிற்காகவும் நன்றி. ஒப்புரவு மற்றும் அமைதியின் அடிப்படையில் இந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் நீங்கள் கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்காகவும் நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன். பேராயர் ஜோஸ் மானுவேல் அவர்களின் வார்த்தைகளுக்காக அவருக்கு நான் நன்றி கூறுகிறேன்.

கிறிஸ்துவின் அழைப்பும் முழுமையான அர்ப்பணிப்பும்

இறைவன் உங்களின் தாராள மனதை அறிவார், அவர் ஒருபோதும் தமது வாக்குறுதிகளான 'நற்செய்திக்காக அனைத்தையும் கொடுப்பவர்கள் நூறு மடங்காகப் பெறுவார்கள்' என்பதை நிறைவேற்றத் தவறுவதில்லை. அன்பார்ந்த நண்பர்களே, உங்கள் இதயங்களை கிறிஸ்துவுக்கு முழுமையாகத் திறந்து கொடுங்கள். உங்கள் வாழ்வை அவரிடம் ஒப்படைக்க அஞ்சாதீர்கள். திருத்தந்தை பதினாறாம் பெனடிக்ட் நமக்கு நினைவூட்டியது போல, கிறிஸ்து எதையும் நம்மிடமிருந்து எடுப்பதில்லை, மாறாக அனைத்தையும் தருகிறார். அருள்பணிப் பயிற்சியில் இருக்கும் இளைஞர்களை நான் சிறப்பாக ஊக்குவிக்கிறேன்: கிறிஸ்துவுக்கு "ஆம்" என்று சொல்லவும், நம்பிக்கையுடன் அவரைப் பின்பற்றவும் அஞ்சாதீர்கள்.

மறைக்கல்வி ஆசிரியர்களும் மறைபரப்புப் பணியும்

இணக்கமான மற்றும் நீதியான ஒரு சமுதாயத்தைக் கட்டியெழுப்ப, தூய ஆவியால் வலுவூட்டப்பட்ட மறைபரப்புச் சீடர்களாக இருக்குமாறு இறைவன் உங்களை அழைக்கிறார். திருஅவையின் நற்செய்திப் பணியில் மறைக்கல்வி ஆசிரியர்களின் பங்களிப்பு ஈடு இணையற்றது; குறிப்பாக ஆப்பிரிக்கக் கண்டத்தில், அவர்கள் திருஅவை வாழ்வின் அடித்தளமாகவும், அதன் உயிரோட்டமான வெளிப்பாடாகவும் திகழ்கிறார்கள்.

எல்லாம் உங்களுக்கே உரியவை, ஆனால் நீங்கள் கிறிஸ்துவுக்கு உரியவர்கள் என்று புனித பவுல் நமக்கு நினைவூட்டுகிறார். சுதந்திரம் பெற்று ஐம்பது ஆண்டுகளுக்குப் பிறகு, அங்கோலாவின் எதிர்காலம் அதன் மக்களுக்குச் சொந்தமானது, ஆனால் அது அன்பு மற்றும் நீதியின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட வேண்டும். கிறிஸ்துவின் சீடர்களாகிய நீங்கள் இந்த மண்ணின் உப்பாகவும் ஒளியாகவும் இருக்கிறீர்கள். அவருடைய அன்பில் வேரூன்றிய உங்கள் வார்த்தைகளும் செயல்களும் சமூகங்களைக் கட்டியெழுப்புகின்றன, மேலும் நற்செய்திக்குச் சான்று பகர்கின்றன.

ஆன்மீகப் பயிற்சியும் இறைவனோடு தங்கியிருத்தலும்

கிறிஸ்துவுடன் இணைந்திருங்கள். அவருக்கு உண்மையுடன் இருப்பதே முதல் வழியாகும். உங்கள் அருள்பணிப் பயிற்சியைத் தொடருங்கள், நேர்மையுடன் வாழுங்கள், அமைதியின் நற்செய்தியை அறிவிப்பதில் விடாமுயற்சியுடன் இருங்கள். அருள்பணிப் பயிற்சி என்பது அறிவு சார்ந்தது மட்டுமல்ல, ஆன்மீகம் சார்ந்ததுமாகும்: இதில் செபம், தியானம் மற்றும் உங்கள் உள்ளத்தின் மீதான அக்கறை ஆகியவை அடங்கும். துன்பங்கள் உங்களைச் சூழும் வேளையில், உங்களை ஆற்றித் தேற்றும் ஆண்டவரின் பிரசன்னத்தில் அமைதியாகத் தங்கியிருங்கள்; அவர் உங்கள் உள்ளத்திற்குப் புதிய பலத்தைத் தருவார்.

இன்றைய மக்கள் கற்பிப்பவர்களை விட சான்று பகர்ந்து வாழ்பவர்களுக்கே அதிகமாக செவிசாய்க்கிறார்கள். உங்கள் ஆயர்களுடனும், அருள்பணியாளர்களுக்கு இடையேயும், துறவற சமூகங்களுக்குள்ளும் இருக்கும் ஒற்றுமையினால் உங்கள் உண்மைத்தன்மை நிலைபெறும். சுயநலம் மற்றும் சலுகைகள் மீதான பற்றைத் தவிர்த்து, பணிவுடனும் சகோதரத்துவத்துடனும் வாழுங்கள். மக்களிடம், குறிப்பாக ஏழைகளிடம் நெருக்கமாக இருங்கள்.

குடும்பமும் இறையழைத்தலும்

குடும்பமும் இன்றியமையாதது. நம்பிக்கையை ஊட்டி வளர்க்கும் குடும்பங்களுக்குள் இருந்து தான் பல இறையழைத்தல்கள் பிறக்கின்றன. உங்கள் இறைஅழைத்தலுக்கு ஆதரவாக இருக்கும் உங்கள் குடும்பங்களுக்கு நான் நன்றி கூறுகிறேன், மேலும் நீங்கள் நற்செய்திக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கத் தொடர்ந்து உதவ அவர்களை ஊக்குவிக்கிறேன்.அங்கோலாவில் உங்கள் பணி என்பது அமைதியை மேம்படுத்துவதை முதன்மையாக கொண்டுள்ளது. போரினால் ஏற்பட்ட துயரங்களை நீங்கள் தைரியமாகக் கண்டித்துள்ளீர்கள், மேலும் சமுதாயத்தை மீண்டும் கட்டியெழுப்ப உதவியுள்ளீர்கள். இந்தப் பொறுப்பு இன்றும் தொடர்கிறது. நல்லிணக்கத்தை தொடர்ந்து ஊக்குவியுங்கள், அமைதியை நோக்கி கல்வி புகட்டுங்கள், துன்பங்களுக்குப் பிறகும் மன்னிப்பு அளித்தவர்களின் சான்று வாழ்வை மதியுங்கள். அமைதி என்னும் கொடையில் அகமகிழுங்கள்.

ஒருங்கிணைந்த வளர்ச்சியும் இறுதி ஆசீரும்

"வளர்ச்சி என்பது அமைதியின் புதிய பெயர்" என்பதை நினைவில் கொள்ளுங்கள். அநீதியைக் கண்டிப்பதையும், குறிப்பாக கல்வி மற்றும் நலவாழ்வு பராமரிப்பின் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக உழைப்பதையும் தொடருங்கள். சிரமங்கள் எழும்போது, உண்மை, நீதி மற்றும் அன்பைத் தேர்ந்தெடுத்து நற்செய்திக்காகத் தங்கள் உயிரையே கொடுத்தவர்களின் வீரமிக்க சான்றுகளை நினைவு கூருங்கள்.

அன்பு நண்பர்களே, ஒவ்வொரு திருப்பலியிலும் நீங்கள் மற்றவர்களுக்காக உங்களை அர்ப்பணிக்க அழைக்கப்படுகிறீர்கள். மாமா முக்சிமா எனப்படும் இதயத்தின் அன்னை எப்போதும் உங்களுடன் இருப்பாராக. இறைவன் உங்களை ஆசீர்வதித்து உங்கள் பணியை வளமாக்குவாராக. ஆமென். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஏப்ரல் 2026, 12:00