அமைதியை நாடுமாறு உலகத் தலைவர்களுக்குத் திருத்தந்தை அழைப்பு!

காஸ்தல் கந்தோல்போவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது, போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறும், நல்லெண்ணம் கொண்ட மக்களை அமைதியின் தூதுவர்களாக செயல்படுமாறும் உலக மக்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

உலகத் தலைவர்கள் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் திரும்பி, இடம்பெற்றுக்கொண்டிருக்கும் மோதல்களுக்கு அமைதியான தீர்வுகளைக் காணுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மசர்ச் 31, செவ்வாயன்று மாலை, திருத்தந்தையர்களின் கோடைகால ஓய்விடமான காஸ்தல் கந்தோல்போவில் செய்தியாளர்களுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் இவ்வாறு அழைப்பு விடுத்த திருத்தந்தை, அமைதியை நாடுமாறு உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவது குறித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் கருத்துக்களை குறிப்பாகச் சுட்டிக்காட்டி, மத்திய கிழக்கில் வன்முறை மற்றும் பதட்டங்களைக் குறைப்பதற்கான முயற்சிகள் நிச்சயம் பலனளிக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார் திருத்தந்தை.

இயேசுவின் உயிர்ப்புப் பெருவிழா துன்பம் மற்றும் மரணத்திற்கான நேரமாக இல்லாமல், சிந்தனை மற்றும் அமைதிக்கான நேரமாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி, மீண்டும் போர்நிறுத்தத்திற்கான தனது வேண்டுகோளை விடுத்தார் திருத்தந்தை.

அப்பாவிப் பொதுமக்கள், குறிப்பாகக் குழந்தைகள் மீது போர் தொடர்ந்து ஏற்படுத்தும் தாக்கத்தை கண்டித்ததோடு, தொடரும் மனிதத் துன்பங்களை மக்கள் குறிப்பாக, கிறிஸ்தவர்கள் அங்கீகரித்து அதற்குப் பதிலளிக்க வேண்டும் என்றும்  கேட்டுக்கொண்டார் திருத்தந்தை.

விசுவாசத்தின் குறியீட்டு முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில், வன்முறையால் பாதிக்கப்பட்டவர்களுடன் ஒன்றிப்பைக் காட்டும் ஓர் அடையாளமாக, புனித வெள்ளியன்று உரோமை கொலோசியத்தில் நடைபெறும் சிலுவைப் பாதையின்போது தாமே சிலுவையைச் சுமக்கப் போவதாக அறிவித்தார் திருத்தந்தை.

மேலும் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு ஊக்குவித்து, நல்லெண்ணம் கொண்ட மக்கள் அனைவரும் அமைதியின் தூதுவர்களாக செயல்படுமாறு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை.

இறுதியாக, ஜூன் மாதம் ஸ்பெயின் செல்லவிருக்கும் பயணம் குறித்த தனது எதிர்பார்ப்புகளைச் சுருக்கமாகக் குறிப்பிட்ட திருத்தந்தை, அங்குத் தனக்கு விசுவாசமும் அன்பும் நிறைந்த வரவேற்பு கிடைக்கும் என்ற நம்பிக்கையையும் வெளிப்படுத்தி தனது நேர்காணலை நிறைவு செய்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 13:58