உயிர்ப்பின் ஒளி: நம்பிக்கையிலும் சேவையிலும் ஒரு புனிதப் பயணம்!

இயேசுவை வெறும் தேவைகளைத் தீர்க்கும் ஒரு நபராகவோ அல்லது சுயநல லாபத்திற்காகவோ தேடாமல், அன்பின் அடிப்படையில் அவரைப் பின்பற்ற வேண்டும். நம்பிக்கை என்பது மூடநம்பிக்கையாக மாறாமல், இறைவனின் வார்த்தைப்படி வாழும் சாட்சியமாக இருக்க வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 20, திங்களன்று, அங்கோலாவின் வடகிழக்குப் பகுதியில் உள்ள 'லூண்டா சுல்' (Lunda Sul) மாகாணத்தின் தலைநகரமான சௌரிமோவின் எஸ்பிளனேட் மைதானத்தில் இடம்பெற்ற திருப்பலியின்போது திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் வழங்கிய உரை:

உலகெங்கும் உள்ள திருஅவை,  நம் மீட்பராம் கிறிஸ்துவின் சீடர்களாகப் பயணிக்கும் இறைமக்களாக வாழ்ந்து வருகின்றது. உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம் பாதையில் ஒளியேற்றுகிறார்; நாம் அவரது அன்பில் நிலைத்து வாழும் பொருட்டு, தூய ஆவியார் வழியாக நம்மைப் புனிதப்படுத்துகிறார். இந்தப் பயணத்தில் நம்மைத் தாங்கிப் பிடிக்கும் நற்செய்தி இதுவே. இதே பயணம் தான் இன்று என்னை உங்கள் மத்தியிலும் கொண்டு வந்து சேர்த்திருக்கிறது. இயேசுவின் பெயரால் நாம் அனைவரும் ஒன்றிணைந்து, நமது சீடத்துவத்தின் வாழ்வியலை நமக்கு உணர்த்தும் அவரது வார்த்தைகளுக்கு நம் இதயங்களைத் திறப்போம்.

அடையாளங்களும் உள்ளத்தின் தேடலும்

இறைமகன் மனித உருவெடுத்தபோது, தந்தையின் திருவுளத்தை வெளிப்படுத்துவதற்காகப் பல அடையாளங்களைச் செய்தார்: பார்வையற்றோருக்குப் பார்வை அளித்தார், பேச்சற்றோரப் பேசவைத்தார், பசியாய் இருந்தவர்களுக்கு அப்பம் அளித்தார். இச்செயல்களின் காரணமாகப் பலர் அவரைத் தேடி வந்தனர். இருப்பினும், இயேசு நம் இதயங்களுக்குள் ஊடுருவிப் பார்த்து, நாம் அவரை அன்பினால் தேடுகிறோமா அல்லது சுயநலத்தினால் தேடுகிறோமா என்று கேட்கிறார். நீங்கள் என்னைத்தேடுவது அப்பங்களை உண்டு வயிறு நிறைந்ததற்காகவே என்கிறார் இயேசு (யோவான் 6:26). சிலர் அவரை வெறும் தேவைகளை நிறைவு செய்பவராக மட்டுமே பார்த்தனர்; அன்பு செய்து பின்பற்றப்பட வேண்டியவராகக் காணத் தவறினர்.

நம்பிக்கை என்பது மூடநம்பிக்கையாக மாறி, மனிதன் கடவுளைத் தன் சொந்த லாபத்திற்காக மட்டும் தேடும்போது, உண்மையான பக்தி அங்கே மறைந்து விடுகிறது. இறைவனின் அருட்கொடைகூட வெகுமதியாகவோ அல்லது பேரம் பேசும் கருவியாகவோ தவறாகப் புரிந்துகொள்ளப்படலாம். ஆனால், இயேசு நம்மைப் புறக்கணிப்பதில்லை; மாறாக, நம்மை மனமாற்றத்திற்கு அழைக்கிறார். அவர் நம்மைப் பயனாளிகளாக அல்ல, மாறாகச் சகோதர சகோதரிகளாக இருக்க அழைக்கிறார். உண்மையான நம்பிக்கை என்பது அவருடைய வார்த்தைகளைக் கேட்பது மட்டுமல்ல, அதன்படி வாழ்வதும், அவரைப் பின்பற்றி நடப்பதும் ஆகும்.

நிலைவாழ்வு தரும் அழியாத உணவு

இதன் மூலம் அவரது போதனை ஓர் அழைப்பாக மாறுகிறது: "அழிந்துபோகும் உணவுக்காக உழைக்க வேண்டாம்; நிலைவாழ்வு தரும் அழியாத உணவுக்காகவே உழையுங்கள்" (யோவான் 6:27). கிறிஸ்து நமது அன்றாடத் தேவைகளை மறுப்பதில்லை; மாறாக, நம்மை என்றென்றும் தாங்கிப் பிடிக்கக்கூடிய 'வாழ்வு தரும் உணவை நோக்கி நம்மை வழிநடத்துகிறார். அந்த வாழ்வு தரும் உணவும் அவரே.இன்று, அநீதி, சுரண்டல் மற்றும் வன்முறையினால் பலருடைய நம்பிக்கைகள் சிதைக்கப்படுகின்றன. உள்ளங்கள் சீர்குலையும்போது, அனைவருக்கும் பொதுவானவை ஒரு சிலரின் சலுகைகளாக மாறிப்போகின்றன. இருப்பினும், கிறிஸ்து தன் மக்களின் அழுகுரலைக் கேட்கிறார். அவர் நம்மைத் தூக்கி நிறுத்துகிறார், தேற்றுகிறார், நமது நற்பணியைப் புதுப்பிக்கிறார். உயிர்த்தெழுந்த ஆண்டவர் நம் வாழ்வில் நம்பிக்கையை ஒளியேற்றி, இறப்பை வெல்கிறார். கிறிஸ்து வாழ்கிறார்,அவரே நமது மீட்பர். பாவத்தை மன்னிப்பாக மாற்றி, வாழ்வைக் கொண்டு வரும் நற்செய்தி இதுவே.

விடுதலையும் அன்றாட வாழ்வும்

உயிர்ப்பு பெருவிழாவின்  செய்தி கிறிஸ்துவுக்கு மட்டுமே உரியது அல்ல, அது நமக்கும் உரியது. நாம் இறப்பிற்காகவோ அல்லது ஒடுக்குமுறைக்காகவோ படைக்கப்படவில்லை. அநீதியின் ஒவ்வொரு வடிவமும் வாழ்வு எனும் வரத்தை நிராகரிக்கும் செயலாகும்; இந்த விடுதலையின் சுடரை நாம் நாளை தேட வேண்டியதில்லை, அது நமது அன்றாட வாழ்விலேயே இப்போதே சுடர்விடத் தொடங்குகிறது. நற்செய்தி நமக்கு இதைக் கற்பிக்கிறது: "கடவுள் அனுப்பியவரை நம்புவதே கடவுளுக்கேற்ற செயல்" (யோவான் 6:29). எனவே நாம் கிறிஸ்துவிடம்  நம்பிக்கை கொள்வோம். அவரைப் பின்பற்றுவோம், நமது சக மனிதர்களுக்கு ஆற்றும் பணியின் மூலமாகவே, நாம் இறைவனுக்குத் தொண்டு செய்வோம்."ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்." நாம் பின்பற்றும் இந்தப் பாதை தற்காலிகமான போக்குகளால் உருவானதல்ல, மாறாகக் கடவுளின் திருவுளத்தால் உருவானது. திருஅவை என்பது நம்பிக்கையில் ஒன்றிணைந்து பயணிக்கும் ஓர் "உயிர்ப்பு மற்றும் நம்பிக்கையின் சங்கம்" (synod of resurrection and hope) ஆகும். நற்செய்தியை நம் இதயங்களில் ஏந்தி, சோதனையான நேரங்களிலும் நாம் துணிவைப் பெறுகிறோம்; ஏனெனில், ஆண்டவர் எப்போதும் நம்மோடு நடக்கிறார் என்பதை நாம் அறிவோம்.

நற்கருணையும் வாழ்வின் சாட்சியமும்

திருஅவை கிறிஸ்துவை வெறும் வார்த்தைகளால் மட்டுமல்லாமல், வாழ்வின் சாட்சியத்தாலும் பறைசாற்றுகிறது. திவ்ய நற்கருணையால் ஊட்டம் பெற்று, நாம் சேவை செய்யவும், சிதைந்தவற்றை மீண்டும் கட்டியெழுப்பவும், சகோதரத்துவத்தின் பிணைப்புகளை வலுப்படுத்தவும் அழைக்கப்படுகிறோம். மறைசாட்சிகள் மற்றும் புனிதர்களின் முன்மாதிரி, நம்பிக்கை, ஒப்புரவு மற்றும் அமைதியுடன் வாழ நமக்கு ஊக்கமளிக்கிறது. அன்பு நண்பர்களே, நற்செய்தியின் ஒளியில் இணைந்து பயணிக்கும் அங்கோலா நாட்டின் திருஅவையானது, நற்கருணையின் அருளாலும் ஒவ்வொருவர் மீதான அக்கறையாலும் வளர்ந்து வருகிறது. உங்கள் மத்தியில் பெருகி வரும் இறை அழைத்தல்களின் எழுச்சி, கடவுளின் நிறைவான கொடைகளுக்கு ஓர் அடையாளமாகும். வாழ்வின் அப்பத்தினால் வலுவூட்டப்பட்ட நாம், இறைவனது அரசை நோக்கிய நமது பயணத்தைத் தொடர்வோம்; அங்கே நமது நம்பிக்கையே ஒளியாகவும், பிறரன்பே நமது வாழ்வாகவும் அமையட்டும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஏப்ரல் 2026, 09:55