திருப்பீடத்துடன் இணைந்த பாக்தாத் கல்தேய திருஅவை
அபிசேக் ராஜா அலங்காரம் - வத்திக்கான்
திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், பாக்தாத் கல்தேய வழிபாட்டு முறையின் முதுபெரும்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மேதகு மூன்றாம் போலிஸ் நோனா அவர்களுக்கு திருஅவையின் உறவு ஒன்றிப்பை' (Ecclesiastical Communion) வழங்கினார்.
கீழைத் திருஅவைச் சட்ட விதிகளின்படி (CCEO Can. 76 §2), பாக்தாத் கல்தேயவழிபாட்டு முறையின் புதிய முதுபெரும்தந்தையாக இவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏப்ரல் 12 அன்று உரோமில் நடைபெற்ற கல்தேய ஆயர் பேரவைக் கூட்டத்தில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
தமது கடிதத்தின் வழியாக இந்த உறவு ஒன்றிப்பை வழங்குவதில் மிகுந்த மகிழ்ச்சி தெரிவித்துள்ள திருத்தந்தை, 'இந்நிகழ்வு திருப்பீடத்துடனான முழுமையான பிணைப்பை உறுதிசெய்வதுடன், திருஅவையின் ஒருமைப்பாட்டையும் பொதுவான நற்செய்திப் பணியையும் மேலும் வலுப்படுத்துகிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.
புதிய முதுபெரும்தந்தை தனது திருஅவையின் தந்தையாகவும் தலைவராகவும் பணியாற்றி, இறைமக்களை நம்பிக்கை, எதிர்நோக்கு மற்றும் அன்பு ஆகியவற்றில் உறுதிப்படுத்தி, அவர்களை நல்வழியில் நடத்திடத் தாம் இறைவேண்டல் செய்வதாக திருத்தந்தை அவர்கள் உறுதியளித்துள்ளார்.
புதிய முதுபெரும் தந்தையின் பணிவாழ்விற்கு தூய ஆவியாரின் துணையை வேண்டிய திருத்தந்தை, கல்தேய திருஅவையானது பண்டைய திருத்தூது பாரம்பரியத்தையும், பல மறைசாட்சிகளின் சான்று வாழ்வினால் பெறப்பட்ட அடையாளத்தையும் கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தனது தாயகத்திலும் உலகெங்கும் பரவி வாழும் மக்களிடையேயும் நற்செய்தியை அறிவிப்பதில் தொடர்ந்து தீவிர ஆர்வத்துடன் செயல்பட வேண்டும் என்றும் மேதகு மூன்றாம் போலிஸ் நோனா அவர்களை திருத்தந்தை ஊக்கப்படுத்தியுள்ளார்.
புதிய முதுபெரும்தந்தையை அன்னை கன்னி மரியாவின் பரிந்துரையில் ஒப்படைத்த திருத்தந்தை, இந்நிகழ்வு ஆண்டவருக்குள் ஒரு பெரும் ஆறுதலாகவும் ஊக்கத்தின் அடையாளமாகவும் அமையட்டும் என வாழ்த்தி, தனது திருத்தூது ஆசிரை (Apostolic Blessing) வழங்கி கடிதத்தை நிறைவு செய்தார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
