தேடுதல்

திருத்தந்தையின் புதன் பொது மறைக்கல்வி உரை

ஏப்ரல் 13 முதல் 23 வரை அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து தனது அனுபவங்களை புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான திருப்பயணிகளுடன் திருத்தந்தை பகிர்ந்துகொண்டார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 29 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் தொடங்கினார்.

முதலில் மத்தேயு  எழுதிய தூய நற்செய்தியிலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம்.

“விண்ணுலகிலும் மண்ணுலகிலும் அனைத்து அதிகாரமும் எனக்கு அருளப்பட்டிருக்கிறது. எனவே நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்; தந்தை, மகன், தூய ஆவியார் பெயரால் திருமுழுக்குக் கொடுங்கள். நான் உங்களுக்குக் கட்டளையிட்ட யாவையும் அவர்களும் கடைப்பிடிக்கும்படி கற்பியுங்கள். இதோ! உலக முடிவுவரை எந்நாளும் நான் உங்களுடன் இருக்கிறேன்” (மத்தேயு 28 :16 – 20)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

ஏப்ரல் 13 முதல் 23 வரை அல்ஜீரியா, கேமரூன், அங்கோலா மற்றும் எக்குவடோரியல் கினியா ஆகிய நான்கு ஆப்பிரிக்க நாடுகளுக்கு நான் மேற்கொண்ட திருத்தூதுப் பயணம் குறித்து இன்று நான் பேச விரும்புகிறேன்.

எனது திருத்தந்தை பணியின் தொடக்கத்திலிருந்தே, ஆப்பிரிக்காவிற்கு ஒரு பயணம் மேற்கொள்வது குறித்து நான் சிந்தித்து வந்தேன். ஒரு மேய்ப்பனாக, இறைமக்களைச் சந்திக்கவும் அவர்களை ஊக்குவிக்கவும் எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்காக நான் ஆண்டவருக்கு நன்றி கூறுகிறேன்; மேலும், போர்களாலும், அனைத்துலகச் சட்டங்களின் கடுமையான மற்றும் அடிக்கடி நிகழும் மீறல்களாலும் குறிக்கப்பட்ட ஒரு வரலாற்றுத் தருணத்தில், அமைதியின் செய்தியாக இதனை அனுபவிப்பதற்கும் நான் நன்றி கூறுகிறேன். என்னை வரவேற்ற ஆயர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும் மற்றும் இந்த ஏற்பாடுகளில் ஒத்துழைத்த அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித அகுஸ்தினார் வாழ்ந்த இடங்களைக் கொண்ட அல்ஜீரியா நாடே எனது பயணத்தின் முதல் இடமாக அமைய வேண்டும் என்பது இறைத் திருவுளமாக இருந்தது. இதன் வழியாக, ஒருபுறம் எனது ஆன்மீக அடையாளத்தின் வேர்களை நான் மீண்டும் கண்டடைந்தேன்; அதேவேளையில், தற்கால உலகையும் திருஅவையையும் இணைக்கக்கூடிய மிக முக்கியமான மூன்று வாழ்வாதாரப் பாலங்களை நான் உறுதிப்படுத்தினேன்: அவை திருஅவை தந்தையர்களின் பாரம்பரிய ஞானத்தை மீட்டெடுக்கும் பாலம், இஸ்லாமிய உலகத்துடன் உரையாடும் பாலம் மற்றும் ஆப்பிரிக்கக் கண்டத்தோடு கொண்டுள்ள ஆழமான உறவுப் பாலம் ஆகியவையாகும்.

அல்ஜீரியாவில், எனக்குக் கிடைத்த வரவேற்பு, மரியாதைக்குரியதாக மட்டுமன்றி, மிகவும் அன்பானதாகவும் இருந்தது. நாம் அனைவரும் ஒரே இரக்கமிக்க இறைவனின் பிள்ளைகள் என்பதை உணர்ந்துகொண்டால், வெவ்வேறு மதத்தினராக இருந்தாலும் சகோதரத்துவத்துடன் இணைந்து வாழ முடியும் என்பதை உலகிற்கு நிரூபிப்பதற்கான வாய்ப்பாக இது அமைந்தது. அதோடு, புனித அகுஸ்தினாரின் வாழ்க்கை, எழுத்துக்கள் மற்றும் அவரது ஆன்மீகம் ஆகியவற்றின் மூலம் கடவுளையும் உண்மையையும் தேடுவதை அவரிடமிருந்து கற்றுக்கொண்டோம். இன்றைய காலக்கட்டத்தில் கிறிஸ்தவர்களுக்கும் மற்ற அனைவருக்கும் அவர் ஒரு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருக்கிறார்.

அடுத்து நான் சென்ற மூன்று நாடுகளிலும் பெரும்பாலான மக்கள் கிறிஸ்தவர்கள் என்பதால், அங்கு நம்பிக்கை கொண்டாட்டங்களும் ஆப்பிரிக்கர்களுக்கே உரிய அன்பான வரவேற்பும் நிறைந்திருந்தன. கலிலேயாவில் பெருந்திரளான மக்கள் இயேசுவைச் சூழ்ந்திருந்த போது ஏற்பட்ட அனுபவத்தை, என் முன்னோடிகளைப் போலவே நானும் உணர்ந்தேன். மக்கள் நீதியின் மேல் தாகமும் பசியுமாய் இருப்பதைக் கண்ட இயேசு, ஏழையரின் உள்ளத்தோர் பேறுபெற்றோர்; இரக்கமுடையோர் பேறுபெற்றோர்; அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர் என முழக்கமிட்டார். மேலும் அவர்களின் நம்பிக்கையை அங்கீகரித்து, 'நீங்கள் மண்ணுலகிற்கு உப்பாயும், உலகிற்கு ஒளியாயும் இருக்கிறீர்கள்' (மத் 5:1-16) என்று கூறினார்."

"கேமரூனுக்கான எனது பயணம், நல்லிணக்கம் மற்றும் அமைதிக்காக ஒன்றிணைந்து செயல்படுவதற்கான அழைப்பை மீண்டும் உறுதிப்படுத்த எனக்கு உதவியது; ஏனெனில், எதிர்பாராத விதமாக அந்த நாடும் பதற்றங்களாலும் வன்முறையாலும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் பேசும் பகுதியான பாமெண்டாவிற்கு (Bamenda) நான் பயணம் செய்ததில் மகிழ்ச்சி அடைந்தேன், அங்கு அமைதிக்காக அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் மக்களை ஊக்குவித்தேன். கேமரூன், அதன் இயற்கை மற்றும் வளங்களின் பன்முகத்தன்மை காரணமாக 'குட்டி ஆப்பிரிக்கா' (Africa in miniature) என்று அழைக்கப்படுகிறது; இருப்பினும், முழு ஆப்பிரிக்கக் கண்டத்தின் முக்கியத் தேவைகளும் கேமரூனில் பிரதிபலிக்கின்றன என்பதை நாம் உணர முடியும்: அதாவது, செல்வம் அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும்; ஊழல் வேரறுக்கப்பட்டு இளைஞர்களுக்குப் புதிய வாய்ப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; மேலும், தொலைநோக்குப் பார்வையுடன் கூடிய அனைத்துலக ஒத்துழைப்பின் மூலம் புதிய காலனித்துவத்தை (Neo-colonialism) வீழ்த்தி, ஒரு முழுமையான மற்றும் நிலையான வளர்ச்சியை உறுதி செய்ய வேண்டும் என்பதே அத்தேவைகளாகும். என்னை இவ்வளவு அன்புடன் வரவேற்ற கேமரூன் திருஅவைக்கும், அனைத்து கேமரூனிய மக்களுக்கும் நான் நன்றி கூறுகிறேன். எனது பயணத்தின் போது வெளிப்பட்ட அந்த ஒற்றுமை உணர்வு தொடர்ந்து நிலைத்திருக்கவும், வருங்கால முடிவுகளையும் செயல்பாடுகளையும் வழிநடத்தவும் நான் இறைவேண்டல் செய்கிறேன்.

பயணத்தின் மூன்றாவது இலக்காக அங்கோலா அமைந்தது; நிலநடுக்கோட்டிற்குத் தெற்கே விரிந்து கிடக்கும் ஒரு பிரம்மாண்டமான நாடு இது. போர்த்துகீசிய காலனித்துவத்துடன் தொடர்புடைய பல நூற்றாண்டுகள் பழமையான கிறிஸ்தவ பாரம்பரியத்தைக் கொண்டது. பல ஆப்பிரிக்க நாடுகளைப் போலவே, சுதந்திரம் பெற்ற பிறகு அங்கோலாவும் ஒரு இக்கட்டான காலத்தைக் கடந்து வந்தது. அது நீண்ட கால உள்நாட்டுப் போரினால் சூழப்பட்டிருந்தது. இந்த வரலாற்றின் கடும் சோதனைகளுக்கு மத்தியில் (crucible), கடவுள் திருஅவையை வழிநடத்தித் தூய்மைப்படுத்தியுள்ளார்; நற்செய்திப் பணி, மனித முன்னேற்றம், நல்லிணக்கம் மற்றும் அமைதி ஆகியவற்றிற்காக அதை இன்னும் அதிகமாக உருமாற்றியுள்ளார். சுதந்திரமான மக்களுக்காக ஒரு சுதந்திரமான திருஅவை! 'இதயத்தின் தாய்' என்று பொருள்படும் 'மாமா முக்சிமா' (Mamã Muxima) அன்னை மரியாளின் திருத்தலத்தில், அங்கோலா மக்களின் இதயத்துடிப்பை நான் உணர்ந்தேன். பல்வேறு சந்திப்புகளில், எல்லா வயதினரையும் சேர்ந்த துறவிகள் பலரை நான் மகிழ்ச்சியுடன் கண்டேன், அவர்கள் தங்கள் மக்களுக்கு மத்தியில் விண்ணரசின் இறைவாக்கினர்களாகத் திகழ்கிறார்கள்; தங்கள் சமூகத்தின் நலனுக்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் மறைக்கல்வி ஆசிரியர்களைக் கண்டேன்; உழைப்பாலும் துயரத்தாலும் வாடினாலும், நற்செய்தியின் பேரொளியால் சுடர்விடும் முதியவர்களின் முகங்களை நான் கண்டேன்; அதிகார வர்க்கத்தின் போலி வாக்குறுதிகளாலும், கொள்கைவாத ஏமாற்றங்களாலும் துவண்டுவிடாமல், உயிர்த்தெழுந்த ஆண்டவர் மீது கொண்ட நம்பிக்கையைத் தங்கள் வாழ்வின் அசைக்க முடியாத ஆதாரமாகக் கொண்டு, அவரது புகழ்பாடும் பாடல்களின் தாளத்திற்கேற்ப உற்சாகத்துடன் நடனமாடும் மக்களையும் நான் கண்டேன்.

இந்த நம்பிக்கை என்பது வெறும் வார்த்தையோடு நின்றுவிடாமல், உறுதியான செயல்பாடாக மாற வேண்டும். தனது சாட்சிய வாழ்வின் மூலமாகவும், இறைவார்த்தையைத் துணிச்சலுடன் அறிவிப்பதன் மூலமாகவும், அனைவரின் உரிமைகளையும் அங்கீகரிக்கச் செய்வதும், அந்த உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்வதும் திருஅவையின் பொறுப்பாகும். அங்கோலா மற்றும் பிற நாடுகளின் அரசு அதிகாரிகளுடன் இணைந்து, கத்தோலிக்கத் திருஅவை இந்த பங்களிப்பைத் தொடர்ந்து வழங்கும் என்ற உறுதியை நான் அளித்துள்ளேன்; குறிப்பாக, நலவாழ்வு மற்றும் கல்வி ஆகிய துறைகளில் திருஅவை தனது பணியைத் தொய்வின்றித் தொடரும்.

நற்செய்தி அறிவிக்கப்பட்டு 170 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், எக்குவடோரியல் கினியா எனது பயணத்தின் இறுதி இலக்காக அமைந்தது. பாரம்பரியத்தின் ஞானத்தோடும் கிறிஸ்துவின் ஒளியோடும், கினியா மக்கள் தங்கள் வரலாற்றின் ஏற்றத்தாழ்வுகளை (vicissitudes) உறுதியுடன் எதிர்கொண்டுள்ளனர். மேலும், கடந்த சில நாட்களில், திருத்தந்தையின் முன்னிலையில், ஒரு நம்பிக்கையான எதிர்காலத்தை நோக்கி ஒன்றிணைந்து பயணிப்பதற்கான தங்கள் உறுதியை மிகுந்த உற்சாகத்துடன் மீண்டும் புதுப்பித்துள்ளனர். எக்குவடோரியல் கினியாவின் பாட்டா நகரில் உள்ள சிறையில் நடந்ததை என்னால் மறக்க முடியாது: அங்கிருந்த சிறைக்கைதிகள் தங்கள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து, இறைவனுக்கும் திருத்தந்தைக்கும் நன்றி செலுத்தும் பாடலை முழக்கமிட்டுப் பாடினர். அதோடு தங்கள் பாவங்களுக்காகவும், விடுதலைக்காகவும்' இறைவேண்டல் செய்யுமாறு என்னைக் கேட்டுக்கொண்டனர். இது போன்ற ஒன்றை நான் இதற்கு முன் பார்த்ததே இல்லை. பிறகு, கொட்டும் மழையிலும் அவர்கள் என்னுடன் இணைந்து 'விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே என்ற செபத்தை செபித்தனர். இது இறையரசுக்கான ஓர் உண்மையான அடையாளம்!

மழை நீடித்த போதிலும், பாட்டா அரங்கில் இளைஞர்களுடனான மாபெரும் சந்திப்பு தொடங்கியது. நற்செய்தியின் வழியே சுதந்திரமான மற்றும் பொறுப்புள்ள வளர்ச்சிக்கான பாதையைக் கண்டடைந்த இளைஞர்களின் நெகிழ்ச்சியான சாட்சியங்களுடன், அது ஒரு கிறிஸ்தவ மகிழ்ச்சியின் கொண்டாட்டமாக அமைந்தது. இந்தக் கொண்டாட்டமானது அடுத்த நாள் நடைபெற்ற நற்கருணைப் பெருவிழாவோடு (Eucharistic celebration) உச்சத்தை அடைந்தது; இது எக்குவடோரியல் கினியாவிற்கான வருகைக்கும், ஒட்டுமொத்த அப்போஸ்தலப் பயணத்திற்கும் ஒரு பொருத்தமான மகுடமாக அமைந்தது.

அன்பான சகோதர சகோதரிகளே, ஆப்பிரிக்க மக்களுக்குத் திருத்தந்தையின் வருகை என்பது, அவர்களின் குரலை உலகுக்குக் கேட்கச் செய்யவும், இறைமக்களாக இருப்பதன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தவும், மற்றும் ஒவ்வொருவருக்கும் மாண்புடைய, சிறந்த எதிர்காலம் அமையும் என்கிற நம்பிக்கையைப் பகிர்ந்து கொள்ளவும் கிடைத்த ஒரு வாய்ப்பாகும். அவர்களுக்கு இந்த வாய்ப்பை வழங்கியதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். அதே வேளையில், அவர்களிடமிருந்து நான் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்காக ஆண்டவரைப் போற்றிப் புகழ்ந்து நன்றி கூறுகிறேன். அது என் இதயத்திற்கும் எனது பணிக்கும் விலைமதிப்பற்ற ஒரு செல்வமாகும்.

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 ஏப்ரல் 2026, 12:34