தேடுதல்

நெருக்கடியில் உழலும் அருள்பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்வோம்!

புனித வாரத்தின் தொடக்கத்தில் வழங்கியுள்ள ஏப்ரல் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில், நெருக்கடியான தருணங்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்கு மனித மற்றும் ஆன்மிக ஆதரவை வழங்குவதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்துள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

தனிப்பட்ட மற்றும் ஆன்மிகச் சிக்கல்களை எதிர்கொள்ளும் அருள்பணியாளர்களுக்காக இறைவேண்டல் செய்யுமாறு உலகெங்கிலும் உள்ள விசுவாசிகள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துளளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.

மார்ச் 31, செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டுள்ள ஏப்ரல் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ள திருத்தந்தை, நெருக்கடியில் உள்ள அருள்பணியாளர்களுக்காக ஆதரவு அளிக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருத்தந்தையின் உலகளாவிய இறைவேண்டல் வலையமைப்பு மற்றும் அதன் “திருத்தந்தையுடன் இறைவேண்டல் செய்யுங்கள்” இயக்கத்தின் மூலம், அருள்பணியாளர்கள் எதிர்கொள்ளக்கூடிய தனிப்பட்ட போராட்டங்களைப் பற்றிச் சிந்திக்குமாறு விசுவாசிகளையும் நல்லெண்ணம் கொண்ட மக்களையும் ஊக்குவித்துள்ளார் திருத்தந்தை.

"அருள்பணியாளர்கள் வெறும் பணியாளர்கள் மட்டுமல்ல, அவர்கள் அக்கறை, புரிதல் மற்றும் தோழமை தேவைப்படும் தனிநபர்கள்" என்று வலியுறுத்தியுள்ள அதேவேளை, அவர்கள் எதிர்கொள்ளக்கூடிய தனிமை, சந்தேகம், சோர்வு உள்ளிட்ட சவால்களைப் பற்றி எடுத்துக்காட்டி, "அவர்கள் மீது அதிக பரிவு காட்டப்பட வேண்டும்" என்றும் சுட்டிக்காட்டியுள்ளார் திருத்தந்தை.

அருள்பணித்துவ வாழ்வின் சமூகப் பரிமாணம் குறித்தும் எடுத்துக்காட்டியுள்ள திருத்தந்தை, "விசுவாசிகள் எந்தவித தீர்ப்பும் வழங்காமல் செவிமடுக்கவும், அருள்பணியாளர்கள் பிழையற்றவர்களாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்காமல் அவர்களிடம் நன்றியுணர்வுடன் இருக்கவும், உண்மையான இறைவேண்டல் வழியாக அவர்களுக்கு ஆதரவளிக்கவும்" வேண்டும் என்று விண்ணப்பித்துள்ளார்.

மேலும் அருள்பணியாளர்கள் மீதான அக்கறையை, இறைமக்கள் அனைவரின் கூட்டுப் பொறுப்பு என்று விவரித்துள்ளார் திருத்தந்தை.

இறுதியாக, அருள்பணியாளர்கள் அனைவரும் வலுவான நட்புறவுகளையும், உடன்பிறந்த உறவுக்கான ஆதரவு வலையமைப்புகளையும், தங்கள் இறையழைத்தலில் புதுப்பிக்கப்பட்ட மகிழ்ச்சியையும் கண்டடைவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்து ஏப்ரல் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 14:30