தேடுதல்

திருத்தந்தையின் புதன் மறைக்கல்வி உரை

“நாம் அனைவரும் சீடத்துவத் தூதுவர்களாகவும், நற்செய்தியின் திருத்தூதர்களாகவும், இறை அரசின் சாட்சிகளாகவும், நாம் கண்டுகொண்ட கிறிஸ்துவின் மகிழ்ச்சியை ஏந்திச் செல்பவர்களாகவும் இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்” - திருத்தந்தை பதினான்காம் லியோ

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 01 , புதன்கிழமை, வத்திக்கானின் புனித பேதுரு பெருங்கோவில் வளாகத்தில் சரியாக காலை 10 மணிக்கு தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார் திருத்தந்தை பதினான்காம் லியோ.  'மக்களினங்களின் ஒளி' என்ற திருஅவைப் பற்றி இரண்டாம் வத்திக்கான் பொதுச் சங்க ஆவணத்தில் நான்காம் அதிகாரத்தில் உள்ள ‘பொதுநிலையினர்’ என்ற தலைப்பு குறித்து தனது சிந்தனைகளை திருப்பயணிகளுடன் பகிர்ந்துகொண்டார் திருத்தந்தை.

முதலில் திருத்தூதர் பவுல் எபேசியருக்கு எழுதிய திருமுகத்திலிருந்து இறைவார்த்தைகள் ஆங்கிலம், இத்தாலி மற்றும் பல்வேறு ஐரோப்பிய மொழிகளில் வாசிக்கப்பட்டன. இப்போது வாசகத்திற்கு செவிமடுப்போம். “ஆதலால், ஆண்டவர் பொருட்டு கைதியாக இருக்கும் நான் உங்களைக் கெஞ்சிக் கேட்கிறேன்; நீங்கள் பெற்றுக்கொண்ட அழைப்புக்கு ஏற்ப வாழுங்கள். நீங்கள் ஒரே எதிர்நோக்கு கொண்டு வாழ அழைக்கப்பட்டிருக்கிறீர்கள். ஒரே எதிர்நோக்கு இருப்பது போல, உடலும் ஒன்றே; தூய ஆவியும் ஒன்றே. அவ்வாறே, ஆண்டவர் ஒருவரே; நாம் கொண்டுள்ள நம்பிக்கை ஒன்றே; திருமுழுக்கு ஒன்றே” (எபே 4:1,4-5)

இறைவார்த்தை வாசிப்பிற்குப் பிறகு திருத்தந்தை தனது புதன் பொது மறைக்கல்வி உரையைத் தொடங்கினார்.

அன்புள்ள சகோதர் சகோதரிகளே, காலை வணக்கம். உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கின்றேன்!

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அடிக்கடி வலியுறுத்திக் கூற விரும்பும் ஒரு கருத்தை நாம் அனைவரும் நினைவுகூர்வோம். "இறைமக்களில் மிகப் பெரும்பான்மையினராக இருப்பவர்கள் பொதுநிலையினரே'. அவர்களுக்குப் பணிவிடை செய்வதற்காக ஒரு சிறுபான்மையினர் உள்ளனர்: அவர்களே திருப்பொழிவு பெற்ற திருப்பணியாளர்கள்" (திருத்தூது அறிவுரை மடல்: நற்செய்தியின் மகிழ்ச்சி, 102).

பல நூற்றாண்டுகளாக, திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களோ அல்லது அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வை  மேற்கொள்பவர்களோ அல்லாதவர்களே 'பொதுநிலையினர்' என ஒரு எதிர்மறைப் போக்கில் வரையறுக்கப்பட்டு வந்தனர். ஆனால், ஆவணத்தின் இந்தப் பகுதி பொதுநிலையினரின் இயல்பு மற்றும் பணியைப் பற்றி நேர்மறையான விளக்கத்தை அளிக்க முயல்கிறது. இதன் காரணமாக, கிறிஸ்தவ வாழ்வின் மாண்பினைப் பற்றி எடுத்துரைக்கின்ற மிக அழகான ஒரு பகுதியை உங்களோடு இணைந்து மீண்டும் வாசிக்க விரும்புகிறேன்.

எனவே, கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறைமக்கள் ஒரே மக்களாய் இருக்கின்றனர்: ‘ஒரே ஆண்டவர், ஒரே நம்பிக்கை, ஒரே திருமுழுக்கு’ (காண்க எபேசியர் 4:5); கிறிஸ்துவில் மீண்டும் பிறந்திருப்பதால், உறுப்பினர்கள் அனைவரும் பொதுவான மாண்பைக் கொண்டுள்ளனர்; பிள்ளைகளாகத் தத்தெடுக்கப்பட்ட அருள் (filial adoption) பொதுவானது; புனித வாழ்விற்கான அழைப்பும் பொதுவானது.; அங்கே ஒரே மீட்பு, ஒரே நம்பிக்கை மற்றும் பிளவுகளற்ற ஒரே அன்பு மட்டுமே உள்ளது" (LG 32).

பணிவாழ்வு அல்லது வாழ்க்கை நிலை ஆகியவற்றில் காணப்படும் எந்தவொரு வேறுபாட்டிற்கும் முன்னதாக, திருமுழுக்கு பெற்ற அனைவரின் சமத்துவத்தையே பொதுச்சங்கம் உறுதிப்படுத்துகிறது. இறைமக்களைப் பற்றிய அதிகாரத்தில் ஏற்கனவே உறுதிப்படுத்தப்பட்ட ஒரு உண்மையை நாம் மறந்துவிடக்கூடாது என்று இந்த அமைப்புமுறைச் சட்டம் விரும்புகிறது; அதாவது, மெசியாவிற்குரிய மக்களின் நிலை என்பது கடவுளின் பிள்ளைகளுக்குரிய மாண்பும் விடுதலையுமே ஆகும் (cf. LG, 9).

இயல்பாகவே, கொடை எவ்வளவு பெரிதோ, அதற்கேற்றவாறு பொறுப்பும் பெரியதாகவே இருக்கும். இதன் காரணமாகவே, பொதுச்சங்கம் பொதுநிலையினரின் மாண்போடு சேர்த்து, திருஅவையிலும் உலகிலும் அவர்களுக்கு இருக்கின்ற திருத்தூதுப்பணியையும் வலியுறுத்துகிறது. ஆனால், இந்தப் பணி எதன் அடிப்படையில் அமைந்துள்ளது, மேலும் இதில் அடங்கியுள்ளவை யாவை? பொதுச்சங்கம் பொதுநிலையினரைப் பற்றித் தரும் தனது சொந்த விளக்கத்தின் வாயிலாக இதனை நமக்குக் கூறுகிறது.

"'பொதுநிலையினர்' என்னும் பெயரால் அழைக்கப்படுபவர்கள் யாவரெனில்: திருமுழுக்கின் வழியாகக் கிறிஸ்துவோடு இணைக்கப்பட்டு, இறைமக்களாக ஆக்கப்பட்டு, கிறிஸ்துவின் குருத்துவ, இறைவாக்கு மற்றும் அரசப் பணிகளில் தங்களுக்குரிய முறையில் பங்குபெறுபவர்கள்; இவர்கள் திருஅவையிலும் உலகிலும் ஒட்டுமொத்தக் கிறிஸ்தவ மக்களுக்கே உரிய திருத்தூதுப்பணியைத் தங்களுக்குரிய பங்கிற்கு ஏற்ப நிறைவேற்றுபவர்கள் ஆவர் (LG,31).

எனவே, இறைமக்களாகிய புனிதக் கூட்டம் என்பது ஒரு உருவமற்ற திரள் அல்ல, மாறாக அவர்கள் கிறிஸ்துவின் உடல்; அல்லது புனித அகுஸ்தினார்  கூறியது போல, அவர்கள் 'முழுமையான கிறிஸ்து' (Christus totus) ஆவர். கிறிஸ்துவின் குருத்துவத்தில் பங்கேற்கும் இரண்டு நிலைகளுக்கு இடையே நிலவும் ஆக்கப்பூர்வமான உறவினால், இது ஓர் உறுதியான அமைப்பைக் கொண்ட சமூகம் ஆகும்: அவை நம்பிக்கையாளர்களின் பொதுவான குருத்துவமும், திருநிலைப்படுத்தப்பட்ட பணியாளர்களின் குருத்துவமும் ஆகும் (cf : LG, 10). திருமுழுக்கின் வழியாக, பொதுநிலை நம்பிக்கையாளர்கள் கிறிஸ்துவின் அதே ஒரே குருத்துவத்தில் பங்குபெறுகிறார்கள்.

"உண்மையில், 'உயர்ந்தவரும் நிலையான குருவுமான இயேசு கிறிஸ்து, பொதுநிலையினரின் வழியாகவும் தமது சாட்சிய வாழ்வையும் சேவையையும் தொடர விரும்புகிறார்; எனவே, அவர் அவர்களைத் தமது தூய ஆவியால் உயிர்ப்பித்து, எல்லா நற்செயல்களையும் சிறந்த பணிகளையும் மேற்கொள்ளுமாறு அவர்களை இடைவிடாது தூண்டுகிறார்' (LG, 34).

இது தொடர்பாக, புனித இரண்டாம் ஜான் பால் அவர்களையும், அவர் வழங்கிய கிறிஸ்துவின் நம்பிக்கையாளர்களாகிய பொதுநிலையினர் (Christifideles laici - 30 டிசம்பர் 1988) என்னும் திருத்தூதுமடல் அறிவுரையையும் நாம் எவ்வாறு நினைகூராமலிருக்க முடியும்? அதில் அவர் பின்வருமாறு வலியுறுத்தினார்: "மிகவும் செழுமையான மறைக்கல்வி, ஆன்மிகம் மற்றும் ஆயர் பணி சார்ந்த பாரம்பரியத்தைக் கொண்டுள்ள இந்தப் பொதுச்சங்கம், பொதுநிலை நம்பிக்கையாளர்களின் இயல்பு, மாண்பு, ஆன்மிகம், திருத்தூதுப்பணி மற்றும் பொறுப்பு ஆகியவற்றைக் குறித்து மிக உன்னதமான பக்கங்களை ஒதுக்கியுள்ளது. மேலும், கிறிஸ்துவின் அழைப்பை எதிரொலிக்கும் வகையில், பொதுச்சங்கத் தந்தையர்கள்  பொதுநிலை நம்பிக்கையாளர்கள் அனைவரையும் ஆண்கள் மற்றும் பெண்கள் என யாவரையும் தமது திராட்சைத் தோட்டத்தில் பணியாற்றுமாறு அழைப்பு விடுத்துள்ளனர்" (எண். 2).

"இவ்வகையில், எனது மதிப்பிற்குரிய முன்னோடி, பொதுநிலையினரின் திருத்தூதுப் பணிக்கு ஒரு புதிய உயிர்ச்சக்தியை அளித்தார். இந்தப் பணிக்கென்றே பொதுச்சங்கம் ஒரு தனித்துவமான ஆவணத்தை அர்ப்பணித்துள்ளது; அதைப்பற்றி நாம் பின்னர் விவாதிப்போம்.

பொதுநிலையினரின் திருத்தூதுப் பணிக்கான பரந்த பரப்பு என்பது  திருஅவை வளாகத்திற்குள் மட்டும் மட்டுப்படுத்தப்பட்டதல்ல, மாறாக அது உலகம் முழுவதும் விரிந்து பரவியுள்ளது. தன் பிள்ளைகள் எங்கெல்லாம் நற்செய்தியை அறிக்கையிட்டு, அதற்குச் சாட்சிகளாகத் திகழ்கிறார்களோ, அங்கெல்லாம் திருஅவை பிரசன்னமாகியுள்ளது: பணியிடங்கள், குடிமைச் சமூகம்  மற்றும் அனைத்து மனித உறவுகளுக்கு மத்தியிலும் அவர்கள் எடுக்கும் முடிவுகளின் வழியாகக் கிறிஸ்தவ வாழ்வின் அழகை வெளிப்படுத்துகிறார்கள்; இச்செயல், இறைவனுடைய அரசில் முழுமைபெறவிருக்கும் நீதி மற்றும் அமைதியை இங்கேயே, இப்போதே முன்னறிவிப்பதாக அமைகிறது.

உலகம் 'கிறிஸ்துவின் ஆவியால் நிரப்பப்படவும்; நீதி, அன்பு மற்றும் அமைதியில் தனது இலக்கை இன்னும் ஆற்றல்மிக்க வகையில் அடையவும்' வேண்டியிருக்கிறது (LG, 36). இது பொதுநிலையினரின் பங்களிப்பு, சேவை மற்றும் சாட்சிய வாழ்வினால் மட்டுமே சாத்தியமாகும்!

இது, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் குறிப்பிட்ட அந்த 'புறப்பட்டுச் செல்லும்' (outgoing) திருஅவையாக இருப்பதற்கான ஓர் அழைப்பாகும்: வரலாற்றில் மனுவுருவெடுத்த, எக்காலமும் திருத்தூதுப்பணிக்குத் திறந்த மனதுடன் இருக்கின்ற ஒரு திருஅவை அது. இதில் நாம் அனைவரும் சீடத்துவத் தூதுவர்களாகவும், நற்செய்தியின் திருத்தூதர்களாகவும், இறை அரசின் சாட்சிகளாகவும், நாம் கண்டுகொண்ட கிறிஸ்துவின் மகிழ்ச்சியை ஏந்திச் செல்பவர்களாகவும் இருப்பதற்கு அழைக்கப்பட்டுள்ளோம்!

சகோதரர் சகோதரிகளே, நாம் கொண்டாடத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்தப் பாஸ்கா பெருவிழா, புனிதர்கள் மரிய மதலேன், பேதுரு மற்றும் யோவானைப் போல, உயிர்த்தெழுந்த ஆண்டவருக்குச் சாட்சிகளாக விளங்கும் அந்த அருளை நமக்குள் புதுப்பிக்கட்டும்!

இவ்வாறு தனது மறைக்கல்வி உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை. இறுதியாக இயேசு கற்பித்த இறைவேண்டல் செபத்திற்குப் பிறகு அனைத்துத் திருப்பயணிகளுக்கும் தனது திருத்தூது ஆசீரை வழங்கினார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 ஏப்ரல் 2026, 13:47