தேடுதல்

மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு   (ANSA)

திருஅவையின் கொடை: மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் வாழ்வாலும் ஏழைகள் மீதான அன்பாலும் பலவற்றை விட்டுச் சென்றுள்ளார்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு தினமான இன்று, அவரை  நான் நினைவுகூர விரும்புகிறேன் என்றும், அவர் தனது வாழ்வு, சான்று, வார்த்தைகள் மற்றும் செயல்கள் வழியாக திருஅவைக்கு அளப்பரியப் பங்களிப்பை வழங்கியுள்ளார் என்றும் திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் கூறியுள்ளார்.

மேலும் ஏழைகளிலும் ஏழைகள், விளிம்புநிலை மக்கள், நோயுற்றவர்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் ஆகியோரோடு உண்மையிலேயே மிக நெருக்கமாக வாழ்ந்ததன் மூலம் அவர் இதனைச் செய்து காட்டினார் என்று திருத்தந்தை  அவர்கள் தெரிவித்துள்ளார்.

உலகளாவிய சகோதரத்துவத்தின் தூதுவர்

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்மீது தான் கொண்டுள்ள மிகுந்த அன்பையும் நன்றியையும் தனது வார்த்தைகளால் வெளிப்படுத்திய திருத்தந்தை, பதினான்காம் லியோ அவர்கள், அனைத்துலகச் சகோதரத்துவம்' குறித்து மறைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்  இடைவிடாது விடுத்த வேண்டுகோளைச் சுட்டிக்காட்டினார்.

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைவரிடமும் உண்மையான மாண்பை வளர்த்தெடுக்க உண்மையிலேயே முயன்றார் என்றும், நாம் அனைவரும் சகோதர சகோதரிகளாக வாழும் அந்தச் சகோதரத்துவ உணர்வை ஊக்குவிக்கவும், நற்செய்தியில் நாம் காணும் போதனைகளை எவ்வாறு வாழ்வாக்குவது என்று தேடவும் அவர் வழிகாட்டினார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இரக்கத்தின் செய்தி

திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் உலகுக்கு வழங்கிய 'இரக்கத்தின் நற்செய்தியை' நினைவுகூர்ந்த திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள், 2013 மார்ச் 13-இல் அவர் திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற பின் வந்த முதல் ஞாயிற்றுக்கிழமை ஆற்றிய 'மூவேளை செப' உரையிலேயே இக்கருத்தை ஆழமாகப் பதிவு செய்தார் என்பதைக் குறிப்பிட்டார்.

மூவேளை செபத்தின் போது மட்டுமல்லாது, மார்ச் 17, 2013 அன்று தமது பணிப்பொறுப்பு ஏற்பு நிகழ்விற்கு முன்பாக நிகழ்த்திய திருப்பலியிலும் 'இரக்கம்' குறித்தே உரையாற்றினார் என திருத்தந்தை எடுத்துரைத்தார்.

உரோமில் உள்ள புனித அன்னாள் ஆலயத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்று வழங்கிய மறையுரையைச் சுட்டிக்காட்டிய திருத்தந்தை, 'விபசாரத்தில் பிடிபட்ட பெண்' குறித்த விவிலியப் பகுதியை மையமாக வைத்து, 'இறைவனின் அளப்பரிய இரக்கம், மன்னிப்பு மற்றும் அவரது தாராளமான அன்பு ஆகியவற்றின் அடித்தளத்திலிருந்து திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அன்று உரையாற்றினார்' என்று பெருமிதத்துடன் கூறினார்.

இறுதியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இறைவனின் இரக்கத்தில் இளைப்பாறி, அதன் பேரின்பத்தை அனுபவிக்க வேண்டுமென்று இறைவேண்டல் செய்வோம் என்று கூறிய திருத்தந்தை, அவரின் வாழ்வு, அகில திருஅவைக்கும் இவ்வுலகம் முழுமைக்கும் இறைவனால் அருளப்பட்ட ஒரு உன்னதமான கொடை  என்றும்,  இதற்காக நாம் ஆண்டவருக்கு நெஞ்சார்ந்த நன்றிகளைச் சமர்ப்பிப்போம் என்றும் கூறி தனது உரையை திருத்தந்தை நிறைவு செய்தார். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

21 ஏப்ரல் 2026, 15:16