தேடுதல்

திருஅவையின் போதனைகளும் அணு ஆயுதங்களும் திருஅவையின் போதனைகளும் அணு ஆயுதங்களும்  (ANSA)

திருஅவையின் போதனைகளும் அணு ஆயுதங்களும்

ஹீரோஷிமா மற்றும் நாகசாகித் தாக்குதல்களுக்குப் பிறகு, அணுஆற்றல் போரில் வெற்றியாளர் எவரும் இருக்க முடியாது அது உலகளாவிய துயரத்தையே மிஞ்சும் என்று திருத்தந்தையர்கள் தொடர்ந்து எச்சரித்து வந்துள்ளனர்.

அபிசேக் ராஜா அலங்காரம் -‌ வத்திக்கான்

ஹீரோஷிமா மற்றும் நாகசாகி அணுகுண்டுத் தாக்குதல்களுக்குப் பிறகு, மனிதகுலத்தின் தன்னைத் தானே அழித்துக் கொள்ளும் திறன் குறித்து திருஅவை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. 'அணுஆற்றல் போரில் வெற்றி என்பது இருக்காது, உலகளாவிய துயரம் மட்டுமே மிஞ்சும்' என்று திருத்தந்தை பன்னிரண்டாம் பயஸ் முன்கூட்டியே கூறியுள்ளார். திருத்தந்தை இருபத்தி மூன்றாம் ஜான், 'பாசெம் இன் டெர்ரிஸ்' (Pacem in Terris) எனப்படும் அவனியில் அமைதி என்ற தனது சுற்று மடலில், அணு ஆயுதங்களால் உருவாகும் இடைவிடாத அச்சத்தை சுட்டிக்காட்டியுள்ளார். ஆறாம் பவுல் முழுமையான ஆயுதக் குறைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ள அதே நேரத்தில் இரண்டாம் ஜான் பால் அணுஆற்றலினால் ஏற்படும் முழுமையான அழிவைத் தடுக்க அறநெறி சார்ந்த மாற்றத்தை வலியுறுத்தினார். பதினாறாம் பெனடிக்ட் படிப்படியான ஆயுதக் குறைப்பை ஊக்குவித்தார்.

 'அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதும் வைத்திருப்பதும் அறநெறிக்கு எதிரானது' என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிவித்தார். இதே நிலைப்பாட்டைத் தொடர்ந்த, திருத்தந்தை பதினான்காம் லியோ, குறிப்பாக ஈரான் மற்றும் இஸ்ரேல் சம்பந்தப்பட்ட உலகளாவிய பதட்டங்களுக்கு மத்தியில், பொறுப்புணர்வு, பேச்சுவார்த்தை மற்றும் அமைதிக்காக வலுவான வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான அமைதிக்கு ஆயுதக் குறைப்பு அவசியம் என்பதை அவர் வலியுறுத்தியதோடு, அணு ஆயுதங்களை மனிதகுலத்திற்கும் படைப்பிற்கும் எதிரான குற்றம் என்று கண்டித்துள்ளார்.

2026-ஆம் ஆண்டில், "அணுஆற்றலைக் கொண்டு அச்சத்தை ஏற்படுத்தி தடுக்கும் முறைகளை நம்பியிருப்பது நீதிக்கு மாறாக அச்சத்தையே அடிப்படையாகக் கொண்டது" என்று திருத்தந்தை எச்சரித்துள்ளார். 'நியூ ஸ்டார்ட்' (New START) என்ற உடன்படிக்கையைக் குறிப்பிட்டு, ஆயுதக் குறைப்பிற்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பையும், புதிய ஆயுதப் போட்டியைத் தவிர்ப்பதையும் திருத்தந்தை வலியுறுத்தினார். தனது போதனைகள் மற்றும் வேண்டுகோள்களின் மூலம், திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் திருஅவையின் அழைப்பான அணு ஆயுதங்களை ஒழிப்பதற்கும், பேச்சுவார்த்தை மற்றும் நம்பிக்கையின் மூலம் அமைதியைக் கட்டியெழுப்புவதற்கும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 ஏப்ரல் 2026, 07:13