ஜெமெல்லி மருத்துவமனையில் திருத்தந்தை பிரான்சிஸ் இதய மையம்
ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்
ஏப்ரல் 27, திங்களன்று, உரோமில் உள்ள அகோஸ்டினோ ஜெமெல்லி பல்நோக்கு மருத்துவமனையில் புதிதாக கட்டப்படவுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் இதய மையத்திற்கு (Pope Francis Heart Centre), திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் அடிக்கல் நாட்டி ஆசி வழங்கினார்.
அந்நிகழ்வின் போது, மருத்துவமனையின் வளர்ச்சி என்பது வெறும் நவீன வசதிகளுடன் மட்டும் நின்றுவிடாமல், உயர்தரமான மருத்துவத் திறன் மற்றும் கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படை ஆகிய இரண்டையும் ஒருங்கே கொண்டு அமைய வேண்டும் என்று அங்கிருந்த மருத்துவர்களையும் நிர்வாகிகளையும் திருத்தந்தை கேட்டுக்கொண்டார்.
மேலும் புதிய இதய சிகிச்சை மையத்தின் பெயரான 'Cuore' (Cardiovascular Unique Offer ReEngineered) என்பது நவீன மருத்துவத் தொழில்நுட்பத்தைக் குறிப்பதோடு மட்டுமல்லாமல், அந்த மருத்துவமனை சார்ந்திருக்கும் 'திரு இதயத்தின் கத்தோலிக்கப் பல்கலைக்கழகத்தின்' ஆன்மீகப் பாரம்பரியத்தையும் பறைசாற்றுகிறது என்று திருத்தந்தை எடுத்துக்காட்டினார்.
பல்கலைக்கழகம் நிறுவப்பட்ட காலத்தை எடுத்துரைத்த திருத்தந்தை, அப்பல்கலைக்கழகத்திற்கு 'திரு இதயம்' எனப் பெயரிடுவது வெறும் பக்தி சார்ந்ததாகத் தெரியும் என்ற கவலைகளுக்கு மத்தியிலும், அருளாளர் அர்மிடா பரெல்லி அந்தப் பெயரையே சூட்ட உறுதியாக இருந்ததையும் சுட்டிக்காட்டினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் எழுதிய இயேசுவின் திருஇருதயம் குறித்த Dilexit nos அதாவது "அவர் நம்மை அன்பு கூர்ந்தார்" என்னும் திருமடலோடு இந்தப் பாரம்பரியத்தை ஒப்பிட்டு பேசிய திருத்தந்தை, இதயமே மனிதனின் மையம் என்ற அந்த ஆவணத்தின் போதனையே, கத்தோலிக்க மருத்துவப் பணிக்கான வழிகாட்டும் கொள்கை என்று குறிப்பிட்டார்.
ஜெமெல்லி மருத்துவமனை விரிவடையும் அதே வேளையில், அதன் தனித்துவத்தைப் பேண வேண்டும் என்று ஊக்குவித்த திருத்தந்தை, மருத்துவமனை எந்த அளவுக்கு வளர்கிறதோ, அந்த அளவுக்கு அங்கு பணிபுரிபவர்களின் மனிதநேயப் பண்பும் கிறிஸ்தவ உருவாக்கமும் வளர்க்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் 13 ஆண்டு காலப் பணியின் போது அவர் சிகிச்சை பெற்ற நினைவாக, அவர் பெயரிலேயே இந்த புதிய மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது ஜெமெல்லி வளாகத்தில் உள்ள இதய சிகிச்சை சேவைகளை ஒன்றிணைப்பதுடன், நோயாளிகளை மையமாகக் கொண்ட ஒருங்கிணைந்த சிகிச்சை மாதிரியாகச் செயல்படும்.
பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள இந்த மையம், இருதய நோய்களைத் தடுத்தல், கண்டறிதல் மற்றும் சிகிச்சை அளிப்பதற்கான ஒரு சிறந்த மருத்துவ மற்றும் அறிவியல் ஆராய்ச்சி மையமாகத் திகழ்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்
