தேடுதல்

உரை வழங்கும் திருத்தந்தை உரை வழங்கும் திருத்தந்தை   (ANSA)

பொதுநலனும் பொறுப்புள்ளத் தலைமையுமே வளமான எதிர்காலம்!

புனித அகுஸ்தினாரின் கூற்றுப்படி, சுயநலத்தால் உருவாகும் 'உலக நகரத்தை' விடுத்து, அன்பு மற்றும் பிறர்நலத்தால் உருவாகும் 'இறை நகரத்தை' (அமைதியின் நகரை) உருவாக்க நாம் முற்பட வேண்டும்.

ஜான்சிராணி அருளாந்து - வத்திக்கான்

ஏப்ரல் 21, செவ்வாயன்று, எக்குவடோரியல் கினியாவின் (Equatorial Guinea) தலைநகரான மலாபோ அரசு மாளிகையில் (Malabo) அந்நாட்டு அரசு அதிகாரிகள், குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் மற்றும் தூதரக அதிகாரிகளை திருத்தந்தை பதினான்காம் லியோ அவர்கள் சந்தித்தார். அச்சந்திப்பின்போது திருத்தந்தை ஆற்றிய உரை:

மதிப்பிற்குரிய அதிபர் அவர்களே, அரசு அதிகாரிகளே, தூதரகப் பிரதிநிதிகளே, சகோதர, சகோதரிகளே

உங்கள் அனைவருக்கும் எனது கனிவான வணக்கங்கள். உங்களின் அன்பான வரவேற்பிற்கு எனது மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறேன். எக்குவடோரியல் கினியாவின் பாசத்திற்குரிய மக்களாகிய உங்களைக் காண்பதில் நான் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன்.

தலைமைத்துவத்தின் மாண்பும் பொதுப்பணியின் புனிதமும்

ஒரு நாட்டின் தலைவரைப் பற்றிப்  திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அவர்கள் குறிப்பிடுகையில், 'மக்களின் சுதந்திரம், நீதி மற்றும் மனித மாண்பிற்கான ஏக்கங்கள் அனைத்தும் ஒரு புள்ளியில் இணையும் அடையாள மையமாக அவர் திகழ்கிறார்' என்று விவரித்தார். அந்த வார்த்தைகள் இக்காலத்திற்கும் பொருந்துவனவாக இருப்பதோடு, பொதுப் பணிகளில் ஈடுபாடு கொண்டுள்ள உங்கள் ஒவ்வொருவருக்கும் பெரும் பொறுப்பையும், சவாலையும் நினைவூட்டுகின்றன. மனிதகுலத்தின் மகிழ்ச்சியும் துன்பங்களும், குறிப்பாக ஏழைகளின் ஏக்கங்களும், கிறிஸ்துவின் சீடர்களது இதயங்களிலும் குடிகொண்டுள்ளன என்பதை இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் நமக்கு நினைவூட்டுகிறது. இந்த உணர்வோடுதான் நான் உங்கள் மத்தியில் வந்திருக்கிறேன். உங்களது நம்பிக்கையை உறுதிப்படுத்தவும், வேகமான மாற்றங்களைச் சந்தித்து வரும் ஒரு நாட்டோடு இணைந்து பயணிக்கவும் நான் வந்திருக்கிறேன். ஏனெனில், மக்களின் எதிர்பார்ப்புகளிலும் போராட்டங்களிலும் திருஅவை எப்போதும் பங்குகொள்கிறது என்பதை நான் அறிவேன்.

இரு நகரங்களும் எதிர்காலத் தலைநகர் உருவாக்கமும்

புனித அகுஸ்தினார் இரண்டு விதமான நகரங்களைப் பற்றி விவரிக்கிறார்: ஒன்று, கடவுள் மீதான பற்றிலும் பிறர் மீதான அன்பிலும் கட்டியெழுப்பப்படும் 'இறை நகரம்'; (அமைதியின் நகரம்), மற்றொன்று, சுயநலத்தினாலும் அதிகார வேட்கையினாலும் உருவெடுக்கும் 'உலக நகரம்'. இந்த இரண்டு நிலைகளும் நம்மிடையே கலந்தே இருக்கின்றன. நாம் எடுக்கும் ஒவ்வொரு அன்றாட முடிவின் வழியாகவும், இதில் ஏதோ ஒரு நகரத்தை உருவாக்க நாம் துணைநிற்கிறோம். 'அமைதியின் நகரம்' (Ciudad de la Paz) எனும் புதிய தலைநகரை தீர்மானிக்கும் உங்கள் முயற்சி இந்தச் சிந்தனையை நம்முன் வைக்கிறது: நாம் சேவை செய்யத் தேர்ந்தெடுக்கப்போவது எந்த நகரத்தை? கிறிஸ்தவர்கள் மண்ணுலகில் வாழ்ந்தாலும், விண்ணகத்தை நோக்கியே தங்கள் உள்ளங்களை நிலைநிறுத்த அழைக்கப்படுகிறார்கள். விசுவாசத்தின் தந்தை ஆபிரகாமைப் போல, நாமும் நிலையற்றவற்றை விடுத்து, நிலையானவற்றைத் தேடும் பயணிகளாக இருக்கிறோம். இத்தகைய வாழ்வுமுறை, பதவி ஆசைகளிலிருந்து நம்மை விடுவித்து, நீதியையும் உண்மையையும் நிலைநாட்டத் தூண்டுகிறது. திருஅவை எத்தகைய அரசியல் சித்தாந்தங்களையும் முன்னிறுத்துவதில்லை; மாறாக, மனித மாண்பையும் பொதுநலத்தையும் பாதுகாக்கும் அறநெறிப் பாதையையே உலகுக்குக் காட்டுகிறது.

நவீன உலகச் சவால்களும் பொறுப்புள்ளத் தலைமையின் தேவையும்

இன்று, மனிதகுலம் புதிய சவால்களைச் சந்தித்து வருகின்றது. தொழில்நுட்பம் அதிவேகமாகப் பரவியுள்ள போதிலும், சமத்துவமின்மையும் புறக்கணிப்பும் அதிகரித்து வருகின்றன. நவீனக் கருவிகளைப் பயன்படுத்தும் வசதி இருந்தும், அடிப்படைத் தேவைகள் கூடக் கிடைக்காமல் பலர் வாடுகின்றனர். இந்த முரண்பாடான சூழல், ஒருமைப்பாடு மற்றும் வளங்களின் முறையானப் பகிர்வு ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த பொறுப்புள்ளத் தலைமையைக் கோருகிறது. தொழில்நுட்பமும் பொருளாதாரமும் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இயற்கையைப் பாதுகாத்தல், மனித மாண்பைப் போற்றுதல் மற்றும் பொதுநலச் சுகாதாரம் ஆகிய அடிப்படைப் பண்புகள் மறக்கப்பட்டுவிடும் ஆபத்து உள்ளது. மனிதர்களைப் புறந்தள்ளும் பொருளாதார முறை மனித குலத்திற்கு எதிரானது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் எச்சரித்துள்ளார். இயற்கை வளங்களைச் சுரண்டுவதால் உண்டாகும் போர்களும் மோதல்களும், உலக அமைதிக்கும் சமூக நீதிக்கும் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளன.

நாட்டின் மறுமலர்ச்சியும் துணிச்சலான கொள்கைகளும்

எதிர்கால நம்பிக்கைகள் கொண்ட ஓர் நாடாக, நீதியையும் அமைதியையும் நிலைநாட்டும் பாதையில் பயணிக்க உங்கள் முன் அரிய வாய்ப்பு உள்ளது. மக்களின் மனச்சான்றை வளர்த்தெடுக்கவும், உங்கள் முயற்சிக்கு ஆதரவு அளிக்கவும் திருஅவை என்றும் தயாராக இருக்கிறது. பொதுநலனுக்கான கொள்கைகளை உருவாக்கவும், இளைஞர்களின் எதிர்காலத்திற்காக உழைக்கவும், நீதியான ஒரு சமூகத்தை உருவாக்கவும் தளராத துணிச்சல் மட்டுமே தேவைப்படுகிறது. ஞானத்தோடும் நம்பிக்கையோடும் நாம் அனைவரும் இணைந்து அந்த 'இறை நகரை' நோக்கி அதாவது அமைதியின் நகரை நோக்கி பயணிப்போம். அங்கே அனைவரும் மாண்புடனும், நீதியுடனும், என்றும் நிலைத்திருக்கும் இணக்கத்துடனும் தங்களது வாழ்வைப் பகிர்ந்து கொள்ள முடியும்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 ஏப்ரல் 2026, 11:52